site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

Posts Tagged ‘தமிழ் கட்டுரை’

“3ஜி’ ஏலம் ரூ.1 லட்சம் கோடி லாபம்…ஆனா “2ஜி’….

Posted by sambala87(சூரியன்) on April 29, 2011

தாய்மார்களுக்கு சத்தான உணவு கிடைக்காததால், இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு சத்து குறைந்த குழந்தைகளாக பிறக்கின்றன. ஐந்து வயதுக்குள் உள்ள குழந்தைகளில் சரிபாதி குழந்தைகள், குறைவான எடையுள்ள குழந்தைகளாக உள்ளன.

இந்நிலையில், காமன்வெல்த் போன்ற மிக அதிகமான செலவு செய்த விளையாட்டுக்கள் நம்நாட்டுக்கு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. விளையாட்டு போட்டிகளால், ஊரின் கட்டமைப்பு உயருகிறது. வெளிநாட்டுக்காரர்கள் வருவதால், சுற்றுலா பெருகுகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வருமானம் தரும் தொழிலில் சுற்றுலா பெரும்பங்கு வகிக்கிறது.

சுற்றுலாவால் நாட்டின் பெருமையும், மரியாதையும் உயருகிறது. இவ்வளவையும் தரவேண்டியதை, நடைபெற்று முடிந்த, “காமன்வெல்த் விளையாட்டு’ தந்ததா, என்பதும் ஒரு கேள்வி. சரி,”2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு வருவோம். மேலே சொன்ன நலிந்தவர்களை தூக்கிவிட, மக்கள் நல அரசுக்கு தேவை நிதி. அதை அள்ளித் தருகிற, “அட்சய பாத்திரம்’மாக, “2ஜி’ இருந்தது. ஆனால், அதில் கிடைத்த வருமானம் போய்ச் சேர்ந்ததோ, ஒரு சில தனிப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே.

“2ஜி’க்கு பிறகு நடைபெற்ற, “3ஜி’ ஏலம், பிரணாப் முகர்ஜி தலைமையில் வெளிப்படையாக நடந்தது. அதனால், 35 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் எதிர்பார்த்த ஏலம், ஒரு லட்சம் கோடி ரூபாயை ஈட்டித் தந்தது. அப்போது தான், “2ஜி’யின் செல்வாக்கு என்ன, அதில் வந்த வருமானம் என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்தது. நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

காமன்வெல்த் போட்டிகளுக்காக செலவழித்ததாக கூறி சுருட்டப்பட்டது மக்களுடைய வரிப்பணம்; “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டதும், மக்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணம். இந்த பணம் இரண்டு பேரால் மட்டுமே சுருட்டப்பட்டதாக இப்போதைக்கு தெரியவந்துள்ளது.

இவர்கள் வெளியில் தெரியும் முகங்களே. ஒளிந்திருக்கும் முகங்கள் யார் யார், அவர்களுக்கு சென்று அடைந்தது எவ்வளவு, ஆட்சியும், அதிகாரமும் தான் அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதா? “பதவி இழந்த பிறகும், மரியாதை பெறுபவனே பண்பாளன்’ – இது சாணக்கியன் கூற்று. பதவி போன பிறகு இவர்கள் நிலை என்ன, செல்லாக் காசா, ஜெயில் வாசமா, காலம்தான் பதில் சொல்லும்.

(dm)

Posted in Article | Tagged: , , | Leave a Comment »

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

Posted by sambala87(சூரியன்) on April 28, 2011

நீர்பாசனம் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ள சிவனப்பன், 25க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நீர் நுட்ப மையத்தின் முன்னாள் இயக்குனர்; தமிழ்நாடு திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர்; சொட்டுநீர் பாசன முறையின் தந்தை என்று அழைக்கப்படும் இவர், நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து விளக்குகிறார்.

இந்தியா, நீர்வளம் நிறைந்த நாடு. ஆனால், தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம். நாட்டில், ஆண்டுக்கு மழை அளவு சராசரியாக, 1,150 மி.மீ., தமிழகத்தில், 925 மி.மீ., நாட்டில், ஒருவருக்கு அளிக்கப்படும் தண்ணீரின் அளவு, 2,000 கன மீட்டர். ஆனால், தமிழகத்தில் கிடைக்கும் தண்ணீரின் அளவு, 750 கன மீட்டர் தான். அதாவது, நாட்டில் உள்ள மற்றவர்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு நீரைத் தான் வழங்க முடிகிறது.இந்நிலையில், தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையை எப்படி போக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, நீர் சேமிப்பு, அறுவடை, மேலாண்மை ஆகியவை தான் முக்கிய வழியாக இருக்கின்றன. நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாசன முறையைத் தான் கடைபிடித்து வருகிறோம். இந்த பாசன முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்தது, மழையால் கிடைக்கும் உபரி நீரை சேமிக்க வேண்டும். குறிப்பாக கடலில் கலக்கும் நீரை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கடலுக்குச் செல்லும் நீரின் அளவு ஆண்டுக்கு, 150 முதல், 200 டி.எம்.சி., நீர் என்று கணக்கிடப்படுகிறது. இதை, சிறு அணைகள் கட்டி, ஆறுகளில் சேமிக்கவேண்டும். நீர்பிடிப்புப் பகுதிகளில், மேலாண்மைத் திட்டங்களை அறிவியல் ரீதியாக செயல்படுத்த வேண்டும். விவசாய பயிர்களில் நெல்லுக்கு, 72 சதவீதமும், கரும்புக்கு, 12 சதவீதமும், பிற பயிர்களுக்கு, 10 சதவீதமும் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை மீதப்படுத்துவதற்கு, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை நாம் தொடர்ந்து கையாள வேண்டும். இதன் மூலம், ஒரு எக்டேருக்கு செய்யப்படும் சாகுபடியில், பெரும்பகுதி நீரை சேகரிக்க முடியும்.

இதை தவிர, கழிவு நீரை மறு சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவையெல்லாம், நமக்கு தற்போது கிடைக்கும் நீரை சேமிக்க எடுத்துவரும் நடவடிக்கைகள். ஆனால், இவற்றையெல்லாம் விட, இயற்கையாக கிடைக்கும் நீரை, சேமிப்பது தான் மிக முக்கியமான பணி. இயற்கையாக மழை மூலம் கிடைக்கும் நீர், பெருமளவு கடலில் தான் கலக்கிறது. இந்நிலையில், ஆற்றிலிருந்து கடலுக்கு சென்று கலக்கும் நீரையாவது நாம் சேமிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆறுகளிலிருந்து கடலுக்குச் சென்று கலக்கும் நீரை சேமிக்க, தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். அடுத்தகட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.

கேரளாவில் பெய்யும் மழையில், 250 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்குத் தான் செல்கிறது. அங்கு பெய்யும் மழையில், 10 சதவீத நீரைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். கேரளாவில் கடலுக்கு செல்லும் நீரை திருப்பி, தமிழகத்திற்கு கொண்டு வந்தால், நம்முடைய நீர் தேவை பெருமளவு சரிகட்டப்படும்.இதற்காக, “பம்பா-அச்சன்கோவில் திட்டம்’ தேசிய நீர் மேலாண்மை முகமை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பு, 1,500 கோடி ரூபாய் என வரையறுக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் இதுவரை நிறைவேற்றும் நிலைக்கு வரவில்லை.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து, கர்நாடக மாநிலத்தின் வழியாக அரபிக் கடலில் கலக்கும் நீரின் அளவு, 2,000 டி.எம்.சி., இந்த நீரை காவிரி வழியாக திருப்பி, பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, திட்டங்கள் உருவாக்கப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அடுத்ததாக, ஒடிசாவில் உள்ள மகாநதி, ஆந்திராவில் கோதாவரி ஆகிய நதிகளின் வழியாக கடலில் கலக்கும் நீர், 800 டி.எம்.சி., ஆகும். இந்த இரு நதிகளையும் இணைத்து, கிருஷ்ணா நதி வழியாக, காவிரி ஆற்றுக்கு நீரை கொண்டு வந்து, அதிலிருந்து வைகை ஆற்றுக்கு நீரை கொண்டு வருவது மற்றொரு திட்டம். இதற்கான, ஆய்வுகள் நடந்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளை இணைப்பது மற்றொரு பெரிய திட்டமாக உள்ளது.பொதுவாக, நதிகள் இணைப்பு என்பதற்கு தைரியமும், பொறுப்பு எடுத்துக்கொண்டு அதை நிறைவேற்றும் உறுதியும் தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால், நதிகள் இணைப்பு சாத்தியமில்லை.

இத்திட்டங்களை நிறைவேற்ற பணம் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு, பணத்தை திரட்டுவது ஒரு மிகப்பெரிய காரியமல்ல. வருங்காலத்தில் நீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், நதிகள் இணைப்பு இன்றியமையாதது என்பதை உணர்ந்து, 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நதிகள் இணைப்பை சேர்த்து, செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

(dm)

Posted in Article | Tagged: , | Leave a Comment »

புதியன விரும்பு

Posted by sambala87(சூரியன்) on April 27, 2011

திருடனின் போக்கு கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை’ என்கிற சொலவடை காலத்தால் மருவி, “போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை’ என்றானது ஒருபுறம் இருக்க, இப்போது ஆசிரியர்களாகப் பணிபுரிய முன்வருவோர் தங்கள் படிப்புக்கேற்ற வேலைபெறும் திறமை இல்லாமல் கடைசிப்புகலிடமாக ஆசிரியர் தொழிலுக்கு வருவது அதிகரித்து விட்டது.

தமிழ்நாட்டில் மட்டும் 663 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 5 அரசுக் கல்லூரிகள், 7 தன்னாட்சிக் கல்லூரிகள் நீங்கலாக 651 தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடத்தப்படுகிறது என்பதும், எவ்வளவு பணம் கொடுத்தும் பி.எட். பட்டம் பெற்றுவிடத் துடிப்போர் மனநிலையும், இவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்தால் அவர்கள் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள் என்பதும் நினைத்தாலே வேதனைதரும் விஷயமாகத்தான் இருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து போனதற்கும், வெறும் சம்பளம் மட்டுமே குறிக்கோளாகவும், கற்பித்தலில் ஆர்வம், ஈடுபாடு இல்லாமலும் பல பேர் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவது அதிகரித்ததற்கும் தொடர்பு இருக்கிறது. இதைக் கல்வியாளர்கள் அறிவார்கள். அரசியல்வாதிகள் மட்டுமே இதைக் கண்டும் காணாததுபோல இருப்பார்கள். ஏனென்றால் இன்றைய இந்த நிலைமைக்குக் காரணமே அரசியல்வாதிகள்தான்.

வேறு வேலை கிடைக்காததால் இதைச் சம்பளத்துக்காக ஏற்றுக்கொள்ளும் தொழிலாக ஆசிரியர் பணி ஆகிவிடாமல் இருக்க முதல்கட்டமாக தற்போது பி.ஏ.பி.எட். என்கிற நான்காண்டு ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டப்படிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி. பத்மநாபன் அண்மையில் அறிவித்திருப்பது புதிய நம்பிக்கையைத் தருகிறது.

இத்தகைய ஒருங்கிணைந்த நான்கு ஆண்டுகளுக்கான படிப்பில் சேருவோர், நிச்சயமாக கற்பித்தல் மட்டுமே தனக்கான தொழில் என்று முடிவு செய்தவர்களாக இருப்பார்கள். வேலை கிடைக்காதவர்களின் புகலிடமாக பள்ளிக்கூடம் மாறும் நிலைமைக்கு மெல்ல முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இந்த நான்காண்டு பட்டப்படிப்பு குறித்து, புனே பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாதிரிப் பாடத்திட்டம் சிறப்பானதாக இருக்கிறது என்பது இத்துறையில் இருப்போரின் கருத்தாகும். இந்த மாதிரி பாடத்திட்டத்தின்படி, முதல் மூன்றாண்டுகள் முழுவதும் கற்பித்தல் தொடர்பான வெவ்வேறு பாடப்பிரிவுகள் இடம்பெறுகின்றன. நான்காவது ஆண்டு களப்பயிற்சிக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் கற்பித்தல், மாணவர் – ஆசிரியர் உறவு, பள்ளிச் சூழல், மாணவர் உளவியல், பள்ளி நடவடிக்கைகளில் பங்கேற்பு என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரிப் பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு பாடத்திலும் 50 விழுக்காடு மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகக் கொள்ளப்படும். மேலும் இரண்டாமாண்டு இறுதித் தேர்வு எழுதும் மாணவர், முதலாண்டு எழுதிய தேர்வுத் தாள்களில், மூன்றில் இரண்டு பங்கு தாள்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார். இதே நடைமுறை மூன்றாம், நான்காம் ஆண்டுகளிலும் பின்பற்றப்படும். இத்தகைய நிபந்தனை ஒரு மாணவர் இந்த கல்வித்திட்டத்தை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் தீவிரமாகக் கற்க வேண்டிய கட்டாயத்தை உண்டாக்குகிறது.

ஆனால், இவை தமிழகத்தின் தனியார் கல்வியியல் கல்லூரிகளுக்கு வேம்பாகக் கசக்கும் என்பது நிச்சயம். புனே பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மாதிரிப் பாடத்திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். தேர்ச்சிக்கான மதிப்பெண்ணைக் குறைக்க முற்படுவார்கள். எத்தனை தாள்களில் தோல்வியுற்றாலும், ஆண்டுதோறும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்பார்கள்.

இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பார்கள். தமிழக அரசும் கல்வித் துறை அதிகாரிகளும் கவனமாக இருப்பார்களேயானால், நல்ல பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் நல்ல ஆசிரியர்களை உருவாக்க முடியும். அடுத்துவரும் இரண்டு தலைமுறை நல்ல கல்வி கற்கும் சூழலை உருவாக்க முடியும். இதில் கல்வித்துறை சமரசம் செய்துகொள்ளக்கூடாது. லஞ்சம் பெற்றுக்கொண்டு, எந்தவிதமான வசதிகளும், பயிற்றுநர்களும் இல்லாமலேயே தனியார் கல்வியியல் கல்லூரிகள், பி.ஏ.பி.எட். நடத்த கண்மூடித்தனமாக அனுமதித்தால், பாரதியார் சாபம் பலிக்கும். “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான்’.

பி.ஏ.பி.எட். படிக்கும் மாணவர்களுக்கே ஆசிரியர் தொழிலில் முன்னுரிமை என்பதைத் தமிழக அரசு தெளிவாக அறிவித்தால், வேறுவேலை கிடைக்காமல் ஓராண்டு பி.எட். படிப்போர் எண்ணிக்கை குறையும். அத்துடன், தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல ஆசிரியர் நியமனங்கள் தனித்தேர்வுகள் மூலம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் திறமையுள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக வருவார்கள். வெறும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமித்தால், ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்; ஆனால் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள்.

(di)

Posted in Article | Tagged: , | Leave a Comment »

அப்பா சொன்னாரென…

Posted by sambala87(சூரியன்) on April 27, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டில் அடுக்கப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்- கனிமொழியின் மீதான குற்றச்சாட்டு அரசுப் பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றது என்பதுதான். இதனை அவர் எவ்வாறு செய்தார் என்பதை சிபிஐ தனக்கே உரித்தான வகையில் விவரிக்கிறது. இந்த வழக்கில், தனக்கான ஆதாயத்தொகை ரூ.214 கோடியை ஸ்வான் டெலிகாம் நிறுவனம் எவ்வாறு வேறு துணை நிறுவனங்கள் மூலம் வழிமாற்றி, கலைஞர் டிவிக்கு வழங்கியது என்பதுதான் வழக்கு.

இந்த வழக்கில் தலா 20 விழுக்காடு பங்கு வைத்துள்ள கனிமொழியையும் கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத்குமாரையும் எதிரிகளாக வழக்கில் சேர்த்துள்ள சிபிஐ, 60 விழுக்காடு பங்கு வைத்துள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை ஏன் சேர்க்கவில்லை என்பதை ஒரு குறையாகக் காணவும் முடியாது. ஏனென்றால், அந்த அம்மையார் பெயரை வைத்து, அவருடன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்களே தவிர, அந்த அம்மையார் ராடியாவிடம் பேசவில்லை. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் பேசவில்லை. அவர் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவும் இல்லை. ஆகவே, அவரைப் பங்குதாரராகச் சேர்த்துப் பணத்தை அவர் பெயரில் கொட்டினார்கள் என்பதைத் தவிர, அவர் செய்த குற்றம் ஏதுமில்லை என்று சி.பி.ஐ. முடிவு செய்திருக்கலாம்.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, தனக்கு ஆங்கில அறிவோ, சட்ட நுணுக்கங்கள் பற்றிய தெளிவோ, நிர்வாக அனுபவமோ இல்லாததால், விவரஸ்தரான மேலாண் இயக்குநர் சரத்குமாருக்கு தயாளு அம்மாள் ஏற்கெனவே பிரதிநிதித்துவ அதிகாரம் (பவர் ஆஃப் அட்டார்னி) வழங்கி இருப்பதால், அவரது பெயரைக் குற்றப்பத்திரிகையில் மத்தியப் புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை என்று தெரிகிறது. சிபிஐயின் இந்த முடிவில் தவறு காண முடியாது என்பதுதான் நமது கருத்து.

தயாளு அம்மாள் எதிரியாகச் சேர்க்கப்படாவிட்டாலும், அவர் முதல்வரின் மனைவி என்கிற உரிமை, அந்தஸ்து காரணமாகத்தான் அவர் பெயருக்கு 60 விழுக்காடு முதலீடு சேர்ந்துள்ளது என்பதால், இந்த வழக்கில் நியாயமாகக் குற்றவாளிப் பட்டியலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தயாளு அம்மாளுக்குக் கலைஞர் டிவியில் 60 விழுக்காடு பங்குக்கான நிதியை அளித்திருப்பார்களா?

தொகுதி உடன்பாடுப் பிரச்னையில், திமுகவின் பதவி விலகல் அச்சுறுத்தலே கூட சிபிஐ அதிகாரிகள் முதல்வரின் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் என்று அப்போது பேசப்பட்டது. அதைப்போலத்தான் சம்பவங்களும் நடந்தன. பதவி விலகல் கடிதத்தை இங்கிருந்தே ஒளிநகலில் அனுப்பி வைக்காமல் அனைவரும் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்திக்கக் காத்திருந்தனர். அந்த இடைவெளியில் சமரசங்கள் எட்டப்பட்டன. சமரசம் ஏற்பட்டதும், பதவி விலகல் கடிதங்கள் கிழித்தெறியப்பட்டன.

தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தால், கருணாநிதி குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்வது உறுதி என்ற பேச்சு திமுக தரப்பிலேயே பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே இந்த வழக்குப் பதிவு நடைபெற்றுவிட்டது. இது மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றிய உளவுத்துறை அறிக்கையால் ஏற்பட்ட தைரியமோ என்னவோ தெரியவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளிவராத இன்றைய சூழலில் மீண்டும் அடுத்த பதவி விலகல் கடிதம் எழுதும் நாடகத்தைத் திமுக தொடங்குமா என்பது சந்தேகமே. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டால், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தயாராக இருக்கிறார். வெறும் 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றாலும்கூட தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் தர்ம சங்கடத்தில் சிக்கி இருக்கிறது என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். திமுக தலைவரின் குடும்பத்திலும் சரி, கட்சியிலும் சரி ஆ. ராசாவை பலிகடா ஆக்கியதைப்போல, கனிமொழியையும் பலிகடா ஆக்க முதல்வர் கருணாநிதிக்கு நெருக்குதல்கள் கொடுக்கப்படலாம் என்றும் நம்ப இடமிருக்கிறது. கூட்டணியிலிருந்து திமுக விலகுவதைக் காட்டிலும் இந்த வழக்கில் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தார்மிகப் பொறுப்பேற்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதுதான் நடைபெறக்கூடும்.

கனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு, “பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் பேசக்கூடாது’ என்று கூறி இருக்கிறார் முதல்வர். ஆனால், தனது குடும்பப் பெண்களை முன்னிறுத்தித் தவறான செயல்பாடுகளுக்கு அவர்களை உடந்தையாக்கிய முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? தனது அரசியல் சூதாட்டத்துக்காகத் தனது குடும்பப் பெண்களைப் பகடைக் காய்களாக உருட்டிய குற்றத்துக்கு, முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனைதான் இந்தத் துணைக் குற்றப்பத்திரிகை.

“”நிலைமை எங்கள் கையைவிட்டுப் போய்விட்டது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட முடியாது. அதனால், எங்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை” என்கிற காங்கிரஸின் வாதம், எந்த நேரத்திலும் திமுகவைத் கைகழுவக் காங்கிரஸ் காரணம் கண்டுபிடித்துவிட்டது என்கிற தோற்றத்தையல்லவா ஏற்படுத்துகிறது? இதைக்கூட அனுபவசாலியான முதல்வர் கருணாநிதி புரிந்துகொள்ள முடியாதவரா என்ன?

உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும்! இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட்பட்டவர்கள் அல்லர்! முதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக கனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது. “அப்பா சொன்னாரென…’

(di)

Posted in Article | Tagged: , | Leave a Comment »

கனவாகி வரும் சொந்த வீடு….

Posted by sambala87(சூரியன்) on April 24, 2011

கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, கீழ்நிலையில் இருப்போர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை, நிராசையாக, கனவாகவே கலைந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கடலூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு லாரி செங்கல் (4 ஆயிரம் செங்கல்) விலை லாரி வாடகை, ஆள் கூலி உள்பட ரூ. 8,500 ஆக இருந்தது. இது ஜனவரி மாதத்தில் ரூ. 26 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போது செங்கல் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. ஒரு லாரி செங்கல் ரூ. 16 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

ஆற்று மணல் விலை கடலூரில், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லாரி (3 யூனிட்) ரூ. 2 ஆயிரமாக இருந்தது. பின்னர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஆறுகளில் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு லாரி மணல் ரூ. 6 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போதும் ரூ. 7 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.

÷பெண்ணை ஆற்றில் எங்கும் மணல் குவாரி இல்லை. இதனால் சேத்தியாத்தோப்பில் இருந்தும், பெண்ணாடத்தில் இருந்தும் கடலூருக்கு மணல் வருவதால், ஆற்று மணல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் மாட்டு வண்டி ரூ. 600 ஆக உள்ளது.

கருங்கல் ஜல்லி ஒரு லாரி (அதிகமாக பயன்படுத்தும் முக்கால் அங்குல ஜல்லி) 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 6,500 ஆக இருந்தது ரூ. 9,500 ஆக உயர்ந்து விட்டது. இரும்புக் கம்பி விலை கிலோ ரூ. 36 ஆக இருந்தது ரூ. 42 ஆக உயர்ந்து விட்டது. சிமென்ட் விலையும் மூட்டைக்கு ரூ. 25 அதிகரித்து, மூட்டை ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மின்சார கம்பிகள், மின் சாதனங்கள், தரை ஓடுகள் மற்றும் இதர கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள், கடந்த 10 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்து இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கட்டுமான வேலைக்கு கொத்தனார், சித்தாள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் உருவாகி இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள், மேஸ்திரிகள் கூறுகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பு கொத்தனார் சம்பளம் ரூ. 350 ஆக இருந்தது தற்போது ரூ. 420 முதல் ரூ. 450 வரை உயர்ந்து உள்ளது. சித்தாள் கூலி ரூ. 200 ல் இருந்து ரூ. 300 ஆக உயர்ந்து விட்டது என்றும் தெரிவிக்கிறார்கள். தரை ஓடு பதித்தல் போன்ற பணிகளுக்கு நாள் கூலி ரூ. 600 ஆக உயர்ந்து இருக்கிறது.

மேலும் கடந்த ஓராண்டில், வீட்டு நிலங்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. கடலூரில் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளில், வீட்டு நிலங்களில் விலை குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ. 250. நகர் புறங்களில் குறைந்த விலை சதுர அடிக்கு ரூ. 450. நெடுஞ்சாலை ஓரம் உள்ள நிலங்களின் குறைந்தபட்ச விலை சதுர அடிக்கு ரூ. 2,500.

கடலூரில் வீடுகள் கட்டுவதற்கான குறைந்தபட்ச செலவு சதுர அடிக்கு ரூ. 1,300. ஆனால் வங்கிகள் சதுர அடிக்கு ரூ. 1,000 என்று செலவை நிர்ணயம் செய்து, அதில் 80 சதவீதம் மட்டும் கடனாக வழங்குகின்றன. இத் தொகையைக் கொண்டு நடுத்தர மக்களும், கீழ்நிலையில் இருக்கும் பலரும் வீடு கட்டுவது என்பது சாத்தியம் அற்றதாக மாறியிருக்கிறது.

கடலூரில் தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. தற்போதுதான் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கட்டுமானப் பொறியாளர் சங்க துணைத் தலைவர் ராஜா கூறுகையில், கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம், வீடுகள் கட்டும் பணிகளை பெரும்பாலும் முடக்கி விட்டன. தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடந்த கட்டுமானப் பணிகள் தற்போதுதான் தொடங்கி இருக்கின்றன. கட்டுமானப் பொருள்கள் விலை, ஆள் கூலி உயர்வு காரணமாக, பலர் வீடு கட்ட முன்வருவதில்லை. உயர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் மற்றும் பணக்காரர்கள்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது.

வங்கிகள் கடலூரில் கட்டுமானச் செலவு சதுர அடிக்கு ரூ. 1,000 எனக் கணக்கிட்டு, அதில் 80 சதவீதம் மட்டுமே கடன் வழங்குகிறது. இதனால் வங்கிக் கடனை மட்டும் நம்பி, வீடுகட்ட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. ஓராண்டுக்கு முன் ரூ. 10 லட்சத்தில் கட்டிய வீட்டை, தற்போது ரூ. 20 லட்சம் செலவிட்டால்தான் கட்ட முடியும். சொந்த வீடு என்பது நடுத்தர மக்களுக்கு கனவாகத்தான் உள்ளது என்றார் பொறியாளர் ராஜா.

(di)

Posted in Article, Hot News | Tagged: , | Leave a Comment »

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 87 other followers