Tag Archives: இந்தியா

காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள 370 ஆவது பிரிவை நீக்கும் நோக்கத்தோடு மோடி ஆட்சி விவாதங்களைத் தொடங்கியிருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜிதேந்திரசிங் பிரதமர் அலுவலக இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த விவாதத்தை அவர் தொடங்கிய நிலையில், ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை.
இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனால், அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஐதராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரி சிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்பநிலை நீடித்தது.
பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கனவே உள்ள மாநிலங்களில் ஒன்றாகி, தனித் தன்மையை இழக்க வேண்டி வரும் என்றும், மன்னர் ஹரி சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, தனது பூர்வீகமான காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என விரும்பினார். இதனை கௌரவப் பிரச்சனையாகக் கருதினார்.
காஷ்மீரைத் தன்னுடன் இணைப்பதில் விருப்பம் காட்டிய பாகிஸ்தான் தனது இராணுவத்தை நிலைநிறுத்தியது. இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரி சிங். இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு இராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (Azad Kashmir) என்று பாகிஸ்தான் கூறுகிறது. அதனை ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupied Kashmir-POK)) என்று இந்தியா கூறுகிறது.
பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இருநாடுகளும் போட்டியிட்டன.
இந்த விவகாரம் 1948-ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21.4.1948 அன்று தீர்மானம் (எண்.47) நிறைவேறியது. இதன்படி இருநாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஊடுருவிய பகுதியிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். ஆனால், இது நிறைவேறவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐ.நா. சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஐ.நா. அவையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.
காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைய வேண்டும் என்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லா. அவருக்கு ஐ.நா. சபையின் தலையீடு பிடிக்கவில்லை. பொது வாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை. நேரு தலைமையிலான இந்திய அரசாங்கமோ பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை வெளியேற்றினால்தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியா கூறியது.
நேருவுடன் ஷேக் அப்துல்லா நட்பு பாராட்டுவதாலும், இந்திய இராணுவம் நிலை கொண்டிருப்பதாலும் காஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என பாகிஸ்தான் கூறியது. உலக நாடுகளின் தலையீட்டில் இருதரப்பு இராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.
காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவதுநாட்டின் தலையீட்டை விரும்பவில்லை எனக் கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொது வாக்கெடுப்பு என்கிற அய்.நா. ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கை கழுவியது. அதே நேரத்தில் காஷ்மீரைத் தக்க வைத்துக் கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி தரும் 370 ஆவது அரசியல் சட்டப் பிரிவின் உருவாக்கம்.
இந்த சிறப்புத் தகுதியைப் பெறுவதன் மூலம் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கலாம் என நினைத்தார் ஷேக் அப்துல்லா. பொது வாக்கெடுப்பைத் தவிர்க்க இது நல்ல வழி என நினைத்தது நேரு அரசாங்கம். இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்புத்தகுதியை அளிக்கிறது.
இந்த சிறப்புத் தகுதியின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் மாநில ஆட்சிக் காலம் 6 ஆண்டுகளாகும். காஷ்மீர் மக்கள் தங்களுக்கு என்று சிறப்புச் சட்டங்கள் இயற்றி அதன் கீழ் வாழ்கிறார்கள். இதில் குடியுரிமை, சொத்துரிமை, அடிப்படை உரிமைகள் போன்றவை அடங்கும். இந்தச் சிறப்பு சட்ட பாதுகாப்பு காஷ்மீருக்கு மட்டுமல்லாமல், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிற பழங்குடியினருக்கும் உண்டு.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரியவரும் அவரது அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தவரும், காஷ்மீர் மகாராஜாவான ஹரி சிங்கின் முன்னாள் திவானுமான தமிழகத்தைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார்தான் இச்சட்டப்பிரிவை வடிவமைப்பதில் முன்னின்றார். உள்துறை அமைச்சர் பட்டேலின் ஒத்துழைப்பையும் கோபால்சாமி அய்யங்கார் பெற்றார். இதன் காரணமாக, 370 ஆவது சட்டப் பிரிவு நிறைவேறியது.
மேலும், இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பதுபோல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு, அதன்படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டு, 17.11.1956-ல் நிறைவேற்றப்பட்டது. இது, 26.1.1957-ல் இந்தியாவின் 8 ஆவது குடியரசு நாளில் நடைமுறைக்கு வந்தது. காஷ்மீருக்கெனத் தனி தேசியக் கொடியும் அமைத்துக் கொள்ள சட்டம் அனுமதித்தது. அதன்படி, காஷ்மீர் தேசியக் கொடியும் உருவானது.
பொது வாக்கெடுப்பு நடத்தாமல் காஷ்மீரைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய இந்தியா, எக்காரணம் கொண்டும் காஷ்மீரை இழந்துவிடக் கூடாது என நினைத்ததால்தான் சிறப்புத் தகுதி வழங்கும் 370 ஆவது பிரிவுக்கு வழி வகுத்தது. 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திரா காந்தி-ஷேக் அப்துல்லா ஒப்பந்தத்திலும் (சிம்லா ஒப்பந்தம்) அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவின்படி ஜம்மு-காஷ்மீரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதனை மாற்று வழிகளில் அடிக்கடி மீற முயற்சிப்பது இந்தியத் தரப்பின் வழக்கமாக இருக்கிறது. பாதுகாப்பு என்ற பெயரில் அளவுக்கதிகமாக இராணுவத்தைக் குவிப்பது, மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் இளைஞர்களை வேட்டையாடுவது, பெண்களை பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்குவது என 370 ஆவது பிரிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் காஷ்மீரில் அதிகம். காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய உரிமைகளை அவ்வப்போது இந்திய அரசு பறித்தே வந்துள்ளது.
இது குறித்து எல்.கே.அத்வானி, தனது சுயசரிதையில் இந்த அதிகாரப் பறிப்புகளை பெருமையுடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்ற வெறுக்கக்கூடிய முறையை இந்திய அரசு நீக்கியது. அம்மாநிலத்தில் இந்திய குடியரசின் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையம், தலைமை தணிக்கை அதிகாரியின் அதிகாரம், காஷ்மீருக்கு விரிவாக்கப்பட்டது. அம்மாநில முதல்வரை ‘பிரதமர்’ என்று அமைக்கப்படும் முறை ஒழிக்கப்பட்டது” என்று எழுதியுள்ளார்.
சிறப்புத் தகுதியை வழங்கும் 370 ஆவது பிரிவினால் காஷ்மீர் மக்களுக்கு நேரடிப் பலன் தரும் அம்சங்கள் சில மட்டுமே. அவற்றில் முக்கியமானது, காஷ்மீரிகளைத் தவிர வேறு யாரும் அங்குள்ள நிலங்களை வாங்க முடியாது என்பதாகும். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் நிலத்தை தாரை வார்க்கும் புதிய பொருளாதாரக் கொள்கையின் முயற்சி அங்கு பலிக்கவில்லை.
அதே நேரத்தில், காஷ்மீரில் நிரந்தரமாக வாழ்பவர்களுக்கே நிலம் உரிமை என்பதால், வெளி மாநிலத்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் காஷ்மீர் பெண்களுக்கு நிலம் தொடர்பான சொத்துகளில் உரிமை இல்லை என மறுக்கப்பட்டது. எனினும், வெளி மாநிலப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் காஷ்மீர் ஆண்களுக்கு நிலமும் அதனைச் சார்ந்த சொத்துகளும் உரிமையுடையனவாக இருந்தன. இந்தப் பாலின பாகுபாட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், 2002 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு வழங்கிய தீர்ப்பின் மூலம், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டாலும், காஷ்மீர் பெண்களுக்கான சொத்துரிமை நீடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன் இந்த சிறப்புத்தகுதி என்று பொதுவாகக் கேட்கப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் சிலவற்றுக்கும் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப இதுபோல சிறப்புத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 371 ஆவது பிரிவின்படி மகாராஷ்டிராவின் விதர்பா, மரட்வாடா, குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்கும் வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. 371ஏ பிரிவு நாகலாந்திலுள்ள ஒரு மாவட்டத்திற்கும், 371ஜே பிரிவு ஐதராபாத்துக்கும் சிறப்புத் தகுதிகளை வழங்குகிறது.
நமது அரசியல் சாசனத்தின் தொடக்கத்திலேயே, “இந்தியா, அதாவது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றியம்” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொழி, இனம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை இவற்றின் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் காக்கப்பட சில சிறப்பு சட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்துத்வா என்கிற நெ(வெ)றியைத் தவிர வேறெதுவும் இந்த மண்ணில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படும் பா.ஜ.க.வும், அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ்-ம் காஷ்மீர் மாநிலத்திற்குத் தரப்பட்டுள்ள சிறப்புத் தகுதியை நீக்குவதற்கான முதற்கட்ட முயற்சிகளை இத்தகைய விவாதங்கள் மூலம் தொடங்கியுள்ளன. பதவியேற்ற இரண்டாம் நாளிலேயே தேசிய அளவிலான இத்தகைய சர்ச்சை உருவாகியிருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிப்படவில்லை.
நன்றி:- கோவி.லெனின்
Advertisements

இந்தியா உலகின் 3வது பொருளாதார வல்லரசாக உயரும்!

ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2028ம் ஆண்டு இந்தியா உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.
உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028ல் உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என்றும் வரும் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி பொருளாதாரா வல்லரசாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 11 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
வரும் 2018 ஆம் ஆண்டு 2,481 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2018ம் ஆண்டு ரஷ்யா 6 வது இடத்திலும், மெக்சிகோ 12 வது இடத்தினையும், கொரியா 13 வது இடத்திலும் துருக்கி 17 இடத்தினையும் வகிக்கும். மேலும் வரும் 2023ஆம் ஆண்டு 4,124 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 4 ஆவது இடத்தை பிடிக்கும் என்றும், ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு 6,560 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 3வது இடத்தை பிடிக்கும் என்று சிபர் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் கனடா பத்தாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
(tt)

“மாஃபியா ‘ கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள்!

தமிழகம் முழுவதும் பணத்தாசை காட்டும், செல்வந்தர்களிடம் மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 22 ஆயிரத்து, 877 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது. இதில், 19 ஆயிரத்து, 388 சதுர கி.மீ., காப்புக்காடாக உள்ளது. காப்புக்காடுகளில் பொதுமக்கள் நுழைய தடை உள்ளது. திறந்தவெளி காடுகளில் மட்டுமே, கால்நடைகளை மேய்க்கவும், விறகு பொறுக்கவும் மக்களுக்கு அனுமதி உண்டு.

மாநிலம் முழுவதும் வனச்சொத்துக்களை பாதுகாக்கவும், வனக்குற்றங்களை தடுக்கவும், வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இன்றளவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மர்ம நபர்களின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது. வனக்குற்றத்தை தடுக்க, வனத்துறையினர் மேற்கொண்ட எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை.
வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ;

சில மாதத்தில் மட்டும், மாநிலம் முழுவதும் வனக்குற்றத்தில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்டோர் மீது, வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில், பலரும் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்களாகவே உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு, முகம் தெரியாத நபர்கள், செல்வந்தர்களின் பேச்சில் மயங்கி, ஏழை இளைஞர்கள் பலர் வனக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,பணத்தாசைக்கு மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏழை இளைஞர்களை வனக்குற்றத்தில் ஈடுபடுத்தி, வனத்துறையினருக்கு, பெரும் சவாலாக உள்ள, “மாஃபியா’ கும்பல் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் படித்த, படிக்காத ஏழை இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். வனப்பகுதி அருகே வசிக்கும், படிப்பறிவு இல்லாத இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்களை, சமூக விரோத செயலுக்கு, மர்ம கும்பல் பயன்படுத்தி ஏவியவர்கள் எங்கோ இருக்க, வனக்குற்றத்தில்ஈடுபட்டவர்களை மட்டுமே, வனத்துறையினர் கைது செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஏழை இளைஞர்களுக்கு குறி வைக்கும் மாஃபியா கும்பல் மீது, வனத்துறையினரும், அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனப்பகுதி அருகே வசிக்கும் மக்களிடம், வனக்குற்றத்துக்கான தண்டனை குறித்தும், வனம், வனச்சொத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வனம் அருகே வசிப்போரிடம், சகோதரத்துவத்தோடு வனத்துறையினர் பழகினால், மாஃபியாக்கள் குறித்த தகவலை எளிதாக சேகரிக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

(dm)

கூடங்குளத்தில் அணுக் கசிவுக்கு வாய்ப்பில்லை!

கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவருமான எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் இன்று உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

கூடங்குளம் அணுவுலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டுள்ளது தவறான தகவல். அணுவுலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காலத்தில் அணுவுலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், உள்ளே நிபுணர்கள் அனுமதிக்கப்படாததாலும், மேலும் உலைக்குத் தேவையான இயந்திரங்கள் சரியாகப் பொருத்தப்படாததாலும், சோதனை ஓட்டத்தின்போது சில தவறுகள் கண்டறியப்பட்டன. அவை ஒவ்வொன்றான சரிசெய்யப்பட்டுவிட்டன.

அணுவுலை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அணுவுலையே செயல்படாதபோது, உலையில் அணுக்கசிவு என்பது சாத்தியமில்லை.

எனவே இது, அரசியல் நோக்கங்களுக்காகக் கூறப்படும் தவறான தகவல்தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

கூடங்குளம் அணுவுலையில் சர்வதேசப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளதால் அணுக்கசிவுக்கு வாய்ப்பில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் யூனிட்டில் மின் உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் துவங்க, தயார் நிலையில் உள்ளது.

அதன் அடுத்த யூனிட் செப்டம்பர் மாதத்தில் செயல்படத் துவங்கும். கூடங்குளத்தில் 6000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வசதி உள்ளன. மேலும் 2 யூனிட் அமைக்க ரஷ்ய அரசுடன் இந்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.

அணு மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவில் அணு மின் உற்பத்திக்கு வாய்ப்புள்ள இடங்களாக ஆந்திரம், கோவா, குஜராத்தில் பவநகர், அரியானா, ம.பி., ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கூடங்குளம் உள்பட, அணுமின் நிலையப் பணிகள் தொடர்பாக ரஷியப் பிரதமருடன் இந்தியப் பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார்.

உலக அளவில் 430 அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஜப்பானில் மட்டும் 50 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், 2 மட்டுமே பழுதடைந்துள்ளன. இவற்றைத் தவிர உலகில் வேறு எந்த அணு மின் நிலையங்களிலும் பழுதோ பாதிப்போ எற்பட்டதாக புகாரோ தகவலோ இல்லை.

அதனால் அணுமின் உற்பத்தி நிலையங்கள் பாதுகாப்புடனே உள்ளன.

– இவ்வாறு கூறினார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

(di)

பார்வையற்ற இந்தியருக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி!

அமெரிக்காவில் பார்வையற்ற இந்தியர் ஒருவருக்கு முக்கிய பதவியை அதிபர் ஒபாமா அளித்துள்ளார்அமெரிக்காவில் 2வது முறையாக பராக் ஒபாமா வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த முறை ஆட்சியின்போது, திறமைவாய்ந்த இந்தியர்கள் பலருக்கு தனது அரசில் முக்கிய பொறுப்புகளை ஒபாமா வழங்கினார். தற்போதும் அதே போல் முக்கிய பதவிகளில் அமெரிக்க இந்தியர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார்.

இந்நிலையில், அரசின் கட்டிடக்கலை வாரியத்தின் உறுப்பினராக சச்சின் தேவ் பவித்ரன் என்ற அமெரிக்க வாழ் இந்தியரை நியமித்து ஒபாமா நேற்று முன் தினம் உத்தரவிட்டார். சச்சின் தேவ் பார்வையற்றவர். அவருடன் மேலும் பலரையும் உறுப்பினர்களாக நியமித்து ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், ‘சிறந்த அனுபவம் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படும் இவர்கள் புதிய பொறுப்புகளில் மேலும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார். சச்சின்தேவ் இதற்கு முன்பு உடா பல்கலைக்கழகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான மையத்தின் தொழில்நுட்ப திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

எதிரி நாட்டு ஏவுகணையைத் தாக்கி அழிக்கக் கூடிய சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி

எதிரி நாட்டு ஏவுகணையைத் தாக்கி அழிக்கக் கூடிய, அதிநவீன சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் உள்பட பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை இந்தியா ஏற்கெனவே சோதித்துப் பார்த்துள்ளது.

இந்நிலையில், எதிரிநாட்டு ஏவுகணை ஒன்று நம் நாட்டின் மீது ஏவப்படும் பட்சத்தில், அதைத் தாக்கி அழிக்கக் கூடிய அதிநவீன ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்படி, சூப்பர்சானிக் எனப்படும் ஒலியை விட வேகமாகப் பாய்ந்து செல்லக் கூடிய அதிநவீன ஏவுகணையை அவர்கள் உருவாக்கினர்.

இந்த ஏவுகணைச் சோதனை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதற்கு முன்பாக, தரையில் இருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி ஏவுகணை சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து பகல் 12.52 மணிக்கு ஏவப்பட்டது.

எதிரிநாட்டு ஏவுகணை போல் உருவகப்படுத்தப்பட்ட அது சீறிக் கிளம்பிய 4 நிமிடங்களுக்குப் பின், அதைத் தாக்கி அழிக்கக் கூடிய சூப்பர்சானிக் ஏவுகணை செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி நடுவானில் 14.5 கி.மீ. உயரத்தில் பிருத்வி ஏவுகணையை, சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.

இதை பல்வேறு ராடார் கருவிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்காணித்து, உறுதிப்படுத்தினர்.

சூப்பர்சானிக் ஏவுகணையானது 7.5 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதிநவீன கம்ப்யூட்டர் மூலம் அது இயக்கப்பட்டது. இந்த ஏவுகணையில், எதிரி நாட்டு ஏவுகணைகள் ஏதாவது நமது பகுதிக்கு உள்ளே வந்தால் அதைத் துல்லியமாக உணரக்கூடிய ராடார் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரக ஏவுகணைகளை 2014ஆம் ஆண்டுக்குள் தேசியத் தலைநகரான தில்லி பகுதியில் நிறுத்தத் தாங்கள் தயாராகி வருவதாக பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி அவினாஷ் சந்தர் தெரிவித்தார்.

சூப்பர்சானிக் ரக ஏவுகணை ஏற்கெனவே சில முறை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இப்போதைய சோதனைக்கு முன் கடைசியாக, இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி இதே ரக ஏவுகணை ஏவப்பட்டது. அதற்கு முன், ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து 2006 நவம்பர் மாதமும், 2009 மார்ச் மாதமும் சூப்பர்சானிக் ஏவுகணைச் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

(di)

இ மெயிலை (E-Mail) கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்!

ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்.

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே  இ – மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான  தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ – மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14 வயதில்

இ – மெயிலைக் கண்டுபிடித்துச் சாதனை செய்த சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க்  என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையிலிருந்தே அவரிடம் பேசினோம்:

“”என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.

நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும்  இருந்தார்.

எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.

பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி’யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.

தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.

நான் இந்த E MAIL -ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY  எல்லாம் நான் உருவாக்கியவை.

அதற்குப் பிறகு “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ – மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.

எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல்  இ – மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு காப்புரிமை கிடைத்தது.

ஆனால் பலர்  தாங்கள்தாம் இ – மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ – மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற  மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

இ – மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம்,  1. நான் ஓர் இந்தியன்,

2. நான் புலம் பெயர்ந்தவன், 3. தமிழன், 4. கறுப்புநிறத்தவன். 5.நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன். இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. அது போகட்டும்.

அதற்குப் பின்பு  நான்தான் இ – மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை அங்கீகரித்தது, உலக அளவில் புகழ்பெற்ற “சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்’.

இ – மெயிலை நான் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code  கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்னை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.

1993 இல் அப்போதைய அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, வெள்ளை மாளிகைக்கு  ஒரு நாளைக்கு 5000 – 6000 இ-மெயில்கள் வந்தன. அந்த

இ – மெயில்களைத் திறந்து படித்துப் பார்த்து, அவற்றுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சொல்லவோ, இ – மெயில்களுக்குப் பதில் அனுப்பவோ இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்பட்டனர். அதனால் பில் கிளிண்டன் ஒரு போட்டியை அறிவித்தார். இந்த இ – மெயில்களைக் கையாள்வதை தானியங்கிமயமாக்குபவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தார். அதாவது வெள்ளை மாளிக்கைக்கு வரும் இ – மெயில்களைப்  படித்துப் பார்த்து, அந்த இ – மெயில் எதைப் பற்றியது? என்ன சொல்கிறது? குறை சொல்கிறதா? பாராட்டுகிறதா? என்ன வேண்டும் என்று அது கேட்கிறது? எதைப் பற்றிப் புகார் சொல்கிறது? இது எந்தவகையான இ – மெயில்? என்று ஒரு மனிதன் எப்படிப் படித்துப் பார்த்து முடிவெடுத்துச் செயல்படுவானோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டர் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குப் பரிசு என்று அறிவித்தார்.

அந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட தனிநபர் நான் மட்டுமே.

பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டபடி நான் ECHO MAIL என்ற சிஸ்டத்தை  உருவாக்கிக் கொடுத்தேன். எனக்குப் பரிசு கிடைத்தது. நான் உருவாக்கிய இந்த ECHO MAIL என்ற சிஸ்டம் உலகிலேயே முதன்முதல் உருவாக்கப்பட்ட இ மெயில் மேனேஜ்மென்ட் சிஸ்டமாகும். இது எனது குறிப்பிடத்தக்க இன்னொரு கண்டுபிடிப்பு.

பின்பு 1994 இல் ECHO MAIL.Inc என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அந்த சிஸ்டத்தை பல அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவி வருகிறேன்.

எனக்கு கம்ப்யூட்டர்துறையில் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் ஆர்வம் உண்டு.

எனது சிறிய வயதில் எனது அப்பாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள முகவூருக்குப் போயிருக்கிறேன். எனது அப்பாவின் அம்மா சின்னத்தாய், ஒரு சித்த மருத்துவர். அவர் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்களுக்கு மூலிகைகளிலான மருந்துகளைக்  கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அது இயல்பாகவே எனக்கு நமது பாரம்பரிய மருத்துவத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம் எப்படி அறிவியல்பூர்வமாகச் செயல்படுகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சி  செய்து வருகிறேன். இன்றைய உலக மருத்துவத்துக்கு நிகரான – அதைவிட மேம்பட்ட – பல மருத்துவ வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போனவை நிறைய.

நான் “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் வகுப்புகளை எடுக்கும் பேராசியராகவும் இருக்கிறேன்.

ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே… 2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து “அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்’ (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்.  மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்” என்கிறார் சிவா அய்யாதுரை.

அவருடைய கண்டுபிடிப்பான இ – மெயிலுக்குக் காப்புரிமை பெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, “இன்னோவேஷன் கார்ப்ஸ்’ என்ற நிறுவத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதன் மூலம் இவர் வளர்ந்த நெவார்க் நகரத்தில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால், அவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை அமெரிக்காவின் பிற ஊர்களுக்கு மட்டுமல்ல, சென்னை வரை இதை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்று கேட்டோம்.

“”இந்த நெவார்க் நகரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதனால் அதற்குத் திருப்பி எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு அமைந்ததைப் போன்ற குடும்பம், எனக்கு அமைந்ததைப் போன்ற சூழல் எல்லாருக்கும் அமைந்தால், எல்லாரும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். உருவாக்குவார்கள்.

இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் – 50 கோடிக்கும் மேல் உள்ளனர். வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் மூலமாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பெல்லாம் வருங்காலத்தில் இந்த இளம் வயதினருக்குப் போதவே போதாது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகத்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகளை பெரிய பெரிய பல்கலைக் கழகங்களின் மூலமாக, தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது. உண்மையில் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கண்டுபிடிப்பவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து தரப்பட்டாலேயே போதும். அதற்கு ஊக்கமூட்டும்விதமாகவே இந்த பரிசளிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன்” என்ற அவரிடம், அவருடைய குடும்பத்தினரைப் பற்றிக் கேட்டோம்.

“”அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார்கள். அம்மாவால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன் . அம்மா இல்லாதது எனக்குப் பெரிய இழப்பு. மனவேதனை. அப்பாவுக்கு 80 வயதாகிவிட்டது. சகோதரி உமா தனபாலன் டாக்டராக இருக்கிறார்” என்றார்.

சிவா அய்யாதுரையின் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி:

கணையத்தில் வரும் புற்றுநோய்க்கு மருந்து.

(di)