இந்தியா உலகின் 3வது பொருளாதார வல்லரசாக உயரும்!

ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2028ம் ஆண்டு இந்தியா உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.
உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028ல் உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என்றும் வரும் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி பொருளாதாரா வல்லரசாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 11 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
வரும் 2018 ஆம் ஆண்டு 2,481 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2018ம் ஆண்டு ரஷ்யா 6 வது இடத்திலும், மெக்சிகோ 12 வது இடத்தினையும், கொரியா 13 வது இடத்திலும் துருக்கி 17 இடத்தினையும் வகிக்கும். மேலும் வரும் 2023ஆம் ஆண்டு 4,124 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 4 ஆவது இடத்தை பிடிக்கும் என்றும், ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு 6,560 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 3வது இடத்தை பிடிக்கும் என்று சிபர் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் கனடா பத்தாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
(tt)
Advertisements

தேவயானி கோப்ரகடே : இந்தியா – அமெரிக்கா நாடகமேயன்றி வேறல்ல

தேவயானி கோப்ரகடே – இவர் அமெரிக்காவிற்கான முன்னால் இந்திய துணைத்தூதர், இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதி, உலகிலேயே அமெரிக்காவின் விசுவாச அடிமைகள் என்று வர்ணிக்கப்படும், இந்திய ஆட்சியாளர்களின் தேசபக்திக்கு ஆதாரமாக விளங்குபவர். இந்திய செய்தி ஊடகங்களின் தாகம் தணிக்கும் ஊற்றாகவும், மொத்தத்தில் இப்போதைய நிலையில் இந்திய மக்களால் அதிகமாக அறியப்பட்டவராகவும் திகழ்பவர் இவர்தான்.

இப்படி இந்தியாவிலுள்ள அனைவருக்கும் பரிச்சயமானவராக தேவயானியை ஆக்கிய பெருமை அமெரிக்காவையே சேரும். தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்தார், பணிப்பெண்ணுக்கு உரிய சம்பளத்தை அளிக்கவில்லை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தேவயானியை அமெரிக்க போலிசார் நியூயார்க் கடைத்தெருவில் வைத்து கைவிலங்கிட்டு கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேவயானியை நிர்வாணமாக்கி சோதனை செய்த அமெரிக்க போலிசு, பின்னர் போதைப்பொருள், பாலியல் குற்றச்சாட்டுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதிகளோடு சிறையில் சேர்த்து அடைத்தனர்.

“துணைத்தூதர் தேவயானியின் மீதான குற்றச்சாட்டு எதுவாயினும் அவரை கைது செய்த அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. வெளிநாட்டு தூதர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பூர்வ உரிமையை அவருக்கு அமெரிக்கா அளிக்காதது தவறு. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தேவயானியை மட்டுமல்ல இந்தியாவையே அவமதிக்கும் செயலாகும்.

எனவே துணைத்தூதர் மீதான வழக்கை அமெரிக்கா கைவிடுவதோடு மன்னிப்பும் கோரவேண்டும்” என இந்திய அரசு பகிரங்க கோரிக்கை வைத்தது.

இந்தியாவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா தேவயானிக்கு தூதர்களுக்கு உரிய சலுகையை வழங்க முடியாது; அவர் மீது அமெரிக்க சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

இந்தப் பிரச்சனை இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரலில் அமெரிக்காவின் ஆணவமிக்க நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் அடுத்த கட்டமாக இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளையும் இந்தியா திரும்ப பெற்றது. இதன் உச்சக்கட்டமாக அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்திய அரசு வழங்கியிருந்த சிறப்பு அனுமதி அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதோடு, அமெரிக்க தூதரகத்திற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்தியாவின் இந்த பதிலடிக்குப் பின்னரும் கூட அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால் வேறுவழியின்றி தேவயானிக்கு அமெரிக்க சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதற்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரத் தூதராக அவருக்கு பதவி உயர்வு அளித்தது இந்திய அரசு. ஆனாலும் இந்த சலுகையை அளிக்கும் அதிகாரம் ஐநாவுக்கு இல்லை என்றும் இதை அமெரிக்க அரசாங்கம்தான் தர வேண்டும் என்றும் ஐநா கைவிரித்துவிட்டது.

அதே நேரத்தில் அமெரிக்காவோ தேவயானி செய்துள்ள குற்றம் கடுமையானது; அதிலிருந்து வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க முடியாது, தூதரக விவகாரங்களில் மட்டுமே இந்த விலக்கு வழங்கமுடியும் என்று இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

ஆனாலும் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண முயற்சித்து வருவதாக இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.

சரி, அப்படி என்னதான் அமெரிக்க சட்டத்திற்கு புறம்பாக தேவயானி செயல்பட்டார் என்பதை இனி பார்ப்போம்.

அமெரிக்காவில் தனது வீட்டில் வேலை செய்வதற்காக சங்கீதா என்ற பெண்ணை மாதம் ரூ 30,000/- சம்பளத்திற்கு அமர்த்தியுள்ளார் தேவயானி.

ஆனால் அமெரிக்க விசா விதிகளின் படி சங்கீதா சார்பில் விசா விண்ணப்பத்தை 2012 அக்டோபர் மாதத்தில் தேவயானி அனுப்பியுள்ளார். இந்த விண்ணப்பத்தில் பணிப்பெண் சங்கீதாவுக்கு மாத சம்பளம் 4500 டாலர் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தாராம்.

இந்த விண்ணப்பத்தின் படி சங்கீதாவை நவம்பர் – 1 ம் தேதி நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்த அமெரிக்க அதிகாரிகள் தேவயானியும், சங்கீதாவும் செய்து கொண்ட பணி ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த பணி ஒப்பந்தத்தில் சங்கீதாவுக்கு வேலை நேரம் வாரம் 40 மணி நேரம் என்றும் ஒரு மணி நேரத்திற்கு சம்பளம் 9.75 டாலர் என்றும் குறிப்பிட்டிருந்ததாம். மேலும் வாரம் ஞாயிறு விடுமுறை நாள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அமெரிக்க பணியாளர் நலன் சட்டப்படி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள், மருத்துவ விடுமுறை நாட்கள், ஆண்டு விடுமுறை ஆகியவையையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பணி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா, சங்கீதாவிற்கு நவம்பர் 14-ம் தேதி விசா வழங்கியது. நவம்பர் 24- ம் தேதி சங்கீதாவை நியூயார்க் அழைத்துச் சென்றுள்ளார் தேவயானி. அன்றிலிருந்து சங்கீதா 2013 ம் ஆண்டு ஜீன் மாதம் வரை 7 மாதம் தேவயானி வீட்டில் வேலை செய்துள்ளார்.

ஜீன் மாதம் தேவயானியின் வீட்டிலிருந்து வெளியேறிய சங்கீதா, நியூயார்க் போலிசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் இம்மாதம் டிசம்பர் 12-ம் தேதி தேவயானியை அமெரிக்கப் போலிசு கைது செய்துள்ளது.

தேவயானி, சங்கீதா சார்பில் விண்ணப்பித்த விசா விண்ணப்பத்தில் மோசடி செய்தார். ஒப்பந்தப்படி சங்கீதாவுக்கு சம்பளம் அளிக்காததுடன் கூடுதலாகவும் வேலை வாங்கியுள்ளார் என்பது தேவயானி மீது அமெரிக்கா சாட்டியிருக்கும் குற்றச்சாட்டாகும்.

அமெரிக்கப் பணியாளர் சட்டத்தை தேவயானி மட்டுமல்ல இந்தியாவிலிருந்து வீட்டு வேலைகளுக்காக பணியாட்களை யார் அழைத்துச் சென்றாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பணியாளர்களை அழைத்துச் செல்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தான். இந்த அடிப்படையில் விசாவிற்காக விண்ணப்பிக்கும் போதே அந்த விசாவை அமெரிக்கா நிராகரித்துவிட முடியும். பணியாளர்கள் புகார் அளிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை..

அப்படியானால் இப்படிப்பட்ட விசாக்களை அமெரிக்கா அளிப்பதற்கான காரணம் உள்நோக்கமுடையது. தனக்கு தேவைப்படும்போது அமெரிக்கா விசா முறைகேட்டை பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் இதில் புதைந்திருக்கும் உண்மையாகும்.

சங்கீதா சார்பில் விசா விண்ணப்பம் அளித்த தேவயானி பணிப்பெண்ணுக்கு மாத சம்பளம் 4500 டாலர் என்று குறிப்பிட்டிருந்தார் என்றும் இது மோசடி என்றும் இப்போது கூறுகிறது.

அமெரிக்கா துணைத்தூதர் தேவயானியின் மாத சம்பளமே 4500 டாலர்கள்தான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ2,70,000/- . இப்படி இருக்கும்போது தனது பணியாளருக்கு அவர் மாத சம்பளமாக ரூ2,70,000/- குறிப்பிட்டிருந்தது எப்படி சாத்தியம் என்பது அப்போதே அமெரிக்காவுக்கு தெரியதா? இது தவறானது, மோசடியானது என்று அப்போதே அந்த விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரிக்காதது ஏன்?

மோசடியான விசா விண்ணப்பத்தை நிராகரிக்காத அமெரிக்கா, அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சங்கீதாவை நேர்முகம் கண்டுள்ளது. இந்த நேர்முகத்தில் அமெரிக்க பணியாளர்கள் நல சட்டப்படி பணி ஒப்பந்தத்தை சங்கீதா அளித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் வாரம் 40 மணி நேரம் வேலை நேரம் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு 9.75 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்றும் இப்போது அமெரிக்கா கூறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 9.75 டாலர் என்றால் ஒரு மாதத்திற்கு 1560 டாலர்கள் சம்பளமாக ஆகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.93,600/- ஆகிறது.

விசா விண்ணப்பத்தில் பணியாளர் மாத சம்பளமாக ரூ 2,70,000/- என்று குறிப்பிட்டுவிட்டு, நேர்முகத்தில் அளித்த பணி ஒப்பந்த நகலில் மாத சம்பளம் ரூ93,600/- குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இந்தத் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதால் விசா வழங்க முடியாது என்று விண்ணப்பத்தை அமெரிக்க அதிகாரிகள் அப்போதே நிராகரித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக விசா வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு ரூ2,70,000/- சம்பளம் வாங்கும் ஒருவர் தனது பணியாளருக்கு ரூ93,600/- சம்பளமும், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, உணவு உள்ளிட்ட சலுகைகளையும் வழங்கினால் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக மாத சம்பளமாக வழங்க வேண்டும். இது நடப்பது சாத்தியம் இல்லை என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கும்.

எனவே தேவயானி மீதான அமெரிக்க நடவடிக்கை முற்றிலும் சட்டப்படியானது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமாக காட்டுபவர்களின் வாதத்திற்குப் பொருந்துவதாக இல்லை.

மேற்கண்ட தகவலோடு, சங்கீதாவின் குடும்பத்தினரை அவசரம், அவரசரமாக இலவசமாக அமெரிக்கா அழைத்துச்சென்று அவர்களை இலவசமாக மீண்டும் அனுப்பிவைத்தார்கள் போன்ற தகவல்களும் அமெரிக்காவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் செயலாகவே உள்ளது.

அமெரிக்க அரசின் நடவடிக்கை மட்டுமல்ல, இந்திய அரசின் நடவடிக்கைகளும் உள்நோக்கமுடையதாகத்தான் இருக்கிறது.

தேவயானிக்கு முன்பே அவரை விட உயர் பதவிகளில் இருந்துள்ள இந்திய குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை எல்லாம் அமெரிக்கா அவமதித்தபோதெல்லாம் வாய் மூடி மவுனியாக இருந்த இந்திய அரசு, இப்போது தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கோரும்வரை ஓயமாட்டோம் என்று கொக்கரிப்பது தேசபக்தியைப் போன்று தோன்றினாலும், உண்மை அதுவல்ல.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அண்மை ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. தமது குடிமக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் குட்டிநாடான இலங்கையின் செயல் இந்திய ஆட்சியாளர்களின் தேசபக்தியைத் தூண்டவில்லை. ஆனால் தேவயானி மீதான அமெரிக்காவின் கைது நடவடிக்கை இந்திய ஆட்சியாளர்களிடையே தேசபக்தியைத் தூண்டிவிட்டதாக கருதுவது கேழ்வரகில் நெய் வடியும் கதைதான்.

அமெரிக்காவும், இந்தியாவும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எதிர்ப்பதைப் போன்று காட்டிக்கொண்டாலும், இவைகள் நம்மை உசுப்பிவிடுவதற்கான நாடகமேயன்றி வேறல்ல.

(source: http://www.keetru.com/)

“மாஃபியா ‘ கும்பலின் பிடியில் ஏழை இளைஞர்கள்!

தமிழகம் முழுவதும் பணத்தாசை காட்டும், செல்வந்தர்களிடம் மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 22 ஆயிரத்து, 877 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது. இதில், 19 ஆயிரத்து, 388 சதுர கி.மீ., காப்புக்காடாக உள்ளது. காப்புக்காடுகளில் பொதுமக்கள் நுழைய தடை உள்ளது. திறந்தவெளி காடுகளில் மட்டுமே, கால்நடைகளை மேய்க்கவும், விறகு பொறுக்கவும் மக்களுக்கு அனுமதி உண்டு.

மாநிலம் முழுவதும் வனச்சொத்துக்களை பாதுகாக்கவும், வனக்குற்றங்களை தடுக்கவும், வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இன்றளவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மர்ம நபர்களின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது. வனக்குற்றத்தை தடுக்க, வனத்துறையினர் மேற்கொண்ட எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை.
வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ;

சில மாதத்தில் மட்டும், மாநிலம் முழுவதும் வனக்குற்றத்தில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்டோர் மீது, வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில், பலரும் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்களாகவே உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணையில், பணத்துக்கு ஆசைப்பட்டு, முகம் தெரியாத நபர்கள், செல்வந்தர்களின் பேச்சில் மயங்கி, ஏழை இளைஞர்கள் பலர் வனக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,பணத்தாசைக்கு மயங்கும் ஏழை இளைஞர்களால், வனக்குற்றங்கள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏழை இளைஞர்களை வனக்குற்றத்தில் ஈடுபடுத்தி, வனத்துறையினருக்கு, பெரும் சவாலாக உள்ள, “மாஃபியா’ கும்பல் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் படித்த, படிக்காத ஏழை இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். வனப்பகுதி அருகே வசிக்கும், படிப்பறிவு இல்லாத இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்களை, சமூக விரோத செயலுக்கு, மர்ம கும்பல் பயன்படுத்தி ஏவியவர்கள் எங்கோ இருக்க, வனக்குற்றத்தில்ஈடுபட்டவர்களை மட்டுமே, வனத்துறையினர் கைது செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஏழை இளைஞர்களுக்கு குறி வைக்கும் மாஃபியா கும்பல் மீது, வனத்துறையினரும், அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனப்பகுதி அருகே வசிக்கும் மக்களிடம், வனக்குற்றத்துக்கான தண்டனை குறித்தும், வனம், வனச்சொத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வனம் அருகே வசிப்போரிடம், சகோதரத்துவத்தோடு வனத்துறையினர் பழகினால், மாஃபியாக்கள் குறித்த தகவலை எளிதாக சேகரிக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

(dm)

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட “தமிழ்மொழி’

சிங்கப்பூர் “சாங்கி’ பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு பலகைகளில், “தமிழ்’ மொழி நீக்கப்பட்டது. இது குறித்து தமிழக பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு, இங்கிலாந்து ஆட்சி காலத்திலும், தற்போதும் அளவில்லாதது. அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும், தமிழர்கள் அதிகம் உள்ளனர். அங்கு சுற்றுலா செல்பவர்களிலும் தமிழர்களே அதிகம்.

வேலைக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படும் “தற்காலிக அனுமதி கடிதம்’ கூட தமிழில் இருக்கும். அரசின் அலுவலக மொழிகளாக தமிழ், ஆங்கிலம், சீனா, மலாய் உள்ளதால், நகரின் பெரும்பாலான அறிவிப்பு பலகைகளில் நான்கு மொழிகளுமே காணப்படும்.

 

மேலும், சேமநலநதி,பொது பயன்பாட்டு பில்கள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு பரிமாற்ற அச்சிதழ்களும் 4 மொழிகளில் இருக்கும். சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து தினமும் 25 விமானங்களும், திருச்சியிலிருந்து 4 விமானங்களும் இயக்கப்படுகின்றன.

 

அங்குள்ள “சாங்கி’ பன்னாட்டு விமான நிலையத்தில், இந்த 4 மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகள் காணப்பட்டன. ஆனால், அண்மை காலமாக, அந்த விமான நிலைய புதிய அறிவிப்பு பலகைகளில், தமிழ் தவிர மற்ற 3 மொழிகளும் இடம்பெறுகின்றன. இதனால் தொடர்ந்து சிங்கப்பூர் சென்று, வரும் தமிழர்கள் விமான நிலையத்தில் “தமிழ்’ மறைக்கப்பட்டதைப் பார்த்து, கவலை தெரிவிக்கின்றனர்.

(dm)

புற்றுநோயை குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள்!

உலகில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இந்நோயை குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் மத்தியில் நோய்க்கான காரணம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டால், இந்நோயால் இறப்போரின் எண்ணிக்கையையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கிருஷ்ணகுமார், விஜயபாஸ்கர், கிருஷ்ணகுமார் ரத்தினம், ஆனந்த செல்வக்குமார், ரத்தயியல் நிபுணர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:மனித உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒருபுறம் உற்பத்தியாகும் அதேநேரத்தில், மறுபுறம் அழிந்துகொண்டே வரும். ரத்தத்தில் 120 நாள்களுக்கு ஒருமுறை புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. பழைய செல்கள் அழிந்து விடுகின்றன.

இதில் சில ரோகோ செல்கள் (மோசமான செல்கள்) உண்டாகின்றன. இந்த செல்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கின்றன. இந்த செல்கள் 3 மாதங்களில் புற்றுநோய் செல்லாக மாறுகின்றன. இது ஒவ்வொரு 3 மாதத்துக்கும் மடங்குகளாக உற்பத்தியாகி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. துவக்கத்தில் இது சிறிய புற்றுநோய் கட்டியாக இருக்கும். இக்கட்டியால் பிரச்னை இருக்காது. எனவே, யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து விடுகிறது. நோய் பாதித்தவர்களுக்கு நாள்பட்ட இருமல், சளியுடன் ரத்தம், குரலில் மாற்றம், அதிக ரத்தப்போக்கு, ஆறாத புண், மரு மற்றும் மச்சத்தில் மாற்றம், புதிய கட்டிகள் போன்ற அறிகுறிகள் தெரியும்.

நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால், நவீன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த வாய்ப்புள்ளது. முன்பு நோயை குணப்படுத்த முடியாது என்ற கூறப்பட்டது. இது வதந்திதான். இன்றைய காலகட்டத்தில் நவீன சிகிச்சைகள் மூலம், நோயின் தாக்கத்தை சிகிச்சைகள் மூலம் 80 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும். உயிரிழப்பையும் தடுக்க முடியும்.

சர்வதேச அளவில் இருதய நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம் என்ற நிலையில், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், பல்வேறு வகையான புற்றுநோய்களால் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2030 ஆம் ஆண்டில் 2.14 கோடி புதிய புற்றுநோயாளிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தால் 30 சதவீதம் பேரும், வைரசினால் 20 சதவீதம் பேரும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கொழுப்புள்ள உணவுப் பொருள்கள், தொடர்ச்சியாக மது அருந்துதல், பான்பராக், குட்கா போன்ற பொருள்களை உட்கொள்வோரை புற்றுநோய் அதிகளவில் தாக்குகிறது. இதுபோன்ற பழக்கவழக்கம் உள்ளவர்களில் 20 வயதுக்குட்பட்டோர் அதிகளவில் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்களுக்கு வாய், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளிலும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் பகுதிகளில் அதிகளவில் புற்றுநோய் பாதிக்கிறது. குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை ரத்தப் புற்றுநோய் அதிகளவில் தாக்குகிறது. இந்நோய் பாதிப்பு நகர்ப்புறம், கிராமப்புறம் எனப் பாகுபாடின்றி இருக்கிறது. உடல் பரிசோதனைகள் மூலம் நோயை துவக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகமுடியும்.

20 வயது முதல் 40 வயதுக்குள்பட்டோர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில், புற்றுநோய் அறிகுறி தெரிந்தால் உடனடியாக தேவையான சிகிச்சை பெற்று குணமடையலாம். எலும்பு மஞ்ஞை புற்றுநோய்க்கு, மஞ்ஞை மாற்று சிகிச்சைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நோய் குறித்த பீதி இனி தேவையில்லை. பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, புற்றுநோய் பாதித்தவர்கள் உரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சைv மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம். மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தேர்ச்சிபெற்ற நிபுணர்கள் மூலம் நோயாளிகளை குணப்படுத்தி வருகிறோம், என்றனர்.

(di)

 

உடலுக்கு தேவை நடை பயிற்சி!

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது வாக்கிங் போங்க என்பதாக தான் இருக்கும்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம். இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஷாக்ஸ், செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்.

(di)

கம்ப்யூட்டரால் ஏற்படும் பிரச்னைகள்!

கம்ப்யூட்டர் என்பது இன்று அநேகம் பேருக்கு 3வது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம் தான். கம்ப்யூட்டர் தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிற பிரச்சனை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர்.

அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவர்களுக்கு கண்கள் வறண்டு கண்ணீரே இல்லாமல் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு……இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளாக இருக்கும்.

சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க 20-20-20 விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடிய கண்கள் மேல் வைத்து எடுக்கலாம்.

கண்கள் ரொம்ப வறண்டு போனால், கண் மருத்துவரைப் பார்க்கவும். வறட்சியோட அளவைப் பொறுத்து தேவைப்பட்டால் கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கம்ப்யூட்டர் வேலையில் சேருவதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.

கிட்டப்பார்வையும் இல்லாமல், தூரப் பார்வையும் இல்லாமல் கம்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப் பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கிறது. ஸ்பெஷல் கோட்டிங்கோடு. நடுத்தரப் பார்வைக்கான அதை கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்க வேண்டும். பாதங்கள் தரையைத் தொடுகிற மாதிரி உட்கார வேண்டும். 90 டிகிரி கோணத்தில் உட்கார்வது சரியாக இருக்கும். கம்ப்யூட்டருக்கு ஆண்ட்டிரெப்ளெக்ஷன் மானிட்டர் போடுவது கண்களைப் பாதுகாக்கும். பொதுவாக 40ல் இருப்பவர்களுக்கு, வெள்ளெழுத்தோடு சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்த வயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காமல் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

(di)

Free Tamil & Tamil dubbed Movies, Free Tamil books & News, Articles, Health tips…