எப்படியுள்ளது நம் ராணுவ பலம்?

நமது ராணுவத்தைப் பொறுத்தவரை நம் முன்னே உள்ள பெரிய சவால், அதை வலிமை வாய்ந்ததாக மாற்றுவது மட்டுமல்ல; நம் நாட்டில் தயாராகும் போர்க் கருவிகள், ஆயுதங்கள், குண்டுகள், போக்குவரத்து வாகனங்கள், போர் விமானங்கள், கடற்படைக்கான கப்பல்கள், ரேடார்கள், கவச வாகனங்கள், நவீனக் காலணிகள், பனிமலைகளுக்கான பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுடன் ராணுவத்தைத் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவதும் பெரிய சவாலாகும்.

உலகிலேயே அதிக அளவு ராணுவ சாதனங்களை இறக்குமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா என்பதை மாற்றி, 2011 முதல் இந்தியா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், சீனாவைவிட நாம் அதிகமாக வாங்குகிறோமா? இல்லை, சீனா பெரும்பாலானவற்றை இப்போது உள்நாட்டிலேயே தயாரித்துக்கொள்வதுடன் பிற நாடுகளுக்கும் விற்கத் தொடங்கிவிட்டது. நாம் நம்முடைய தேவைக்கே வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம்.

2004-05-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத் தேவைகளுக்கான இறக்குமதி 111% அதிகரித்துவிட்டது என்று ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வுக் கழகம்’ தெரிவிக்கிறது.

பாகிஸ்தானுக்கு உதவும் சீனா

சீனத்தில் இப்போது ராணுவத் தேவைகளுக்கான எல்லாமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுமதியும் செய்யப்பட்டு நல்ல லாபமும் ஈட்டப்படுகிறது. சீன இறக்குமதியில் முதலிடத்தைப் பிடிப்பது பாகிஸ்தான். பாகிஸ்தானின் ஜே.எஃப்.17 ரக போர் விமானம் உள்பட எல்லாமே சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவ்வளவு ஏன், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்துமே சீனத்தில் வடிவமைக்கப்பட்டவைதான். மியான்மர், வங்கதேசம், இலங்கை ஆகிய இந்தியாவைச் சுற்றி யுள்ள நாடுகளுக்கும் சீனாதான் தொடர்ந்து ஆயுதங்களை விற்றுவருகிறது.

அமெரிக்கா எங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எங்களுக்கு இதெல்லாம் தேவை என்று ஆப்கானிஸ்தான் சில ஆயுதங்கள், தளவாடங்கள், கருவிகள் அடங்கிய பட்டியலை இந்தியாவிடம் அளித்தது. அவற்றில் பெரும்பாலானவற்றைத் தர முடியாது என்று இந்தியா கூறிவிட்டது. இது ஒன்றே போதும் நம்முடைய பாது காப்புத் துறை எந்த அளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக் கிறது என்பதைப் புரிந்துகொள்ள.

போஃபர்ஸ் பீரங்கி

அக்னி-5 ரக ஏவுகணையும், கடற்படைக்குத் தேவைப்படும் அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்களும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தால்தான் நாம் ஓரளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்று பொருள். பெரிய அளவில் எந்த ராணுவ சாதனத்தையும் ஏற்றுமதி செய்யும் நிலையில் நாம் இல்லை. நம்முடைய நாட்டில் தயாராகும் ‘இன்சாஸ்’ ரக துப்பாக்கியைக்கூடப் பிற நாடுகள் வாங்காது என்பதே நம்முடைய ஆயுதங்களின் தரம். இந்தியாவுக்குத் தேவைப் படும் ராணுவ சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்கும் பொறுப்பு எவருடையது, இதில் ஏற்படும் காலதாமதங்களுக்கு யாரைத் தண்டிப்பது என்பதில்கூட நம்மிடையே தெளிவான பதில் இல்லை. போஃபர்ஸ் எஃப்.எச்.77 ரக பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதில்கூட முடிவெடுக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தியது நம்முடைய திறமைக்கும் அக்கறைக்கும் நல்லதொரு சான்று!

ஸ்வீடனிலிருந்து 410 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க சுமார் ரூ.1,710 கோடி மதிப்பில் 1986-ல் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு தேவைப்படும் 1,000 பீரங்கிகளை இந்தியாவிலேயே தயாரித்துக்கொள்ள உதவ வேண்டும் என்று அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்தக் கொள்முதலுக்காக கமிஷன் பெறப்பட்டதாகக் கூறி பிரச்சினை பெரிதானதால் அந்த ஒப்பந்தம் பாதியில் கைவிடப்பட்டது. இந்தியாவுக்குத் தேவைப்படும் பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இறக்குமதி செய்யவும் மாற்று வழி யோசிக்கப்படவில்லை. ராணுவம் தன்னுடைய தேவைக்காக மாற்று நிறுவன பீரங்கிகள் வேண்டும் என்று கேட்டபோது சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பீரங்கிகள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றுடனும் கமிஷன் புகார் உருவானதால் அவையும் நிராகரிக்கப்பட்டன.

யார் பொறுப்பு

போஃபர்ஸ் பீரங்கி மட்டும் இல்லையென்றால், கார்கில் போரில் இந்திய ராணுவம் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போஃபர்ஸ் பீரங்கிகளை இந்தியாவில் தயாரித்துக் கொள்வதற்கு வசதியாக அதன் வடிவமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய விவரம் ஆகிய அனைத்தும் 1987-லேயே இந்திய அரசிடம் ஸ்வீடனால் தரப்பட்டுவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவை தூசிபடிந்து கிடந்தன. வேறு எந்த மாற்றும் இல்லையென்ற நிலைமைக்குப் பிறகே அதில் கவனம் செலுத்தினார்கள். உள்நாட்டிலேயே பீரங்கியைத் தயாரிக்கும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பிறகு, அதில் வெற்றி ஏற்பட்டது. ஸ்வீடன் தயாரித்துத் தந்த பீரங்கியால் 30 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கைத்தான் சுட முடியும். இப்போது இந்தத் திறன் 38 கிலோ மீட்டராக அதிகமாகியிருக்கிறது. ஒரே சமயத்தில் பல ராக்கெட்டுகளை வெடிக்க வைக்கும் லாஞ்சர்களையும் அடுத்து வெற்றிகரமாகத் தயாரித்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த பீரங்கியின் வடிவமைப்புத் தகவல்களை வாங்கி வெறுமனே வைத்திருந்ததற்கும், உள்நாட்டில் தயாரிக்காமல் காலம் கடத்தியதற்கும் யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்?

உடனடியாகச் செய்ய வேண்டியவை

ராணுவம் தொடர்பான, உயர் தொழில்நுட்பம் தேவைப் படுகிற தொழில்துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு இப்போது நிர்ணயித்துள்ள வரம்பை நீக்க வேண்டும்.

ராணுவத்துக்குத் தேவைப்படும் சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்க அரசுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் உள்ள ஏகபோக உரிமை முடிவுக்கு வர வேண்டும். அணுசக்தி நீர்மூழ்கிகள், டேங்குகள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் மிகவும் நுட்பமான கருவிகள், பாகங்களைத் தனியார் துறையிடமிருந்துதான் வாங்கிக்கொள்கின்றனர். அப்படியிருக்க, அந்த நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களுடன் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். ஏகபோக உரிமையை நீக்க வேண்டும்.

ராணுவத்துக்குத் தேவைப்படுவனவற்றை இறக்குமதி செய்தோ, அல்லது கருவிகளை இறக்குமதி செய்து இணைத்தோ பூர்த்திசெய்துகொள்ளும் இப்போதைய முறையைக் கைவிட வேண்டும். இறக்குமதி செய்வதற்குப் பதிலாக தனியார் துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பும் (டி.ஆர்.டி.ஓ.) இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும். எடை குறைவான விமானங்கள் தயாரிப்பு போன்றவற்றில் இந்த ஒத்துழைப்பைத் தொடங்கலாம்.

ராணுவத் தொழில்நுட்பம், தற்காப்புச் சாதனங்கள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் அமெரிக் காவிடமிருந்தும் சீனாவால் எளிதில் பெற முடியாது, இந்தியா அப்படியல்ல. இஸ்ரேல், ரஷ்யாவிடமிருந்தும்கூட வாங்கிக்கொள்ள முடிந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சகத்தை சிவில் அதிகாரிகள் நிர்வகிக் கும் இப்போதைய அமைப்பு முறை மாற வேண்டும். முப்படைகளின் தலைமைக்கும் பாதுகாப்புத் துறையின் தலைமைக்கும் நெருங்கிய ஒத்துழைப்பும் நட்பும் தேவை. அப்படியிருந்தால்தான் இப்போதைய அவலநிலை நீங்கும்.

(கட்டுரையாளர் பாகிஸ்தானில் இந்திய ஹைகமிஷனராகப் பதவி வகித்தவர்)
பிசினஸ் லைன், தமிழில்: சாரி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s