தேவயானி கோப்ரகடே – இவர் அமெரிக்காவிற்கான முன்னால் இந்திய துணைத்தூதர், இந்நாள் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதி, உலகிலேயே அமெரிக்காவின் விசுவாச அடிமைகள் என்று வர்ணிக்கப்படும், இந்திய ஆட்சியாளர்களின் தேசபக்திக்கு ஆதாரமாக விளங்குபவர். இந்திய செய்தி ஊடகங்களின் தாகம் தணிக்கும் ஊற்றாகவும், மொத்தத்தில் இப்போதைய நிலையில் இந்திய மக்களால் அதிகமாக அறியப்பட்டவராகவும் திகழ்பவர் இவர்தான்.
இப்படி இந்தியாவிலுள்ள அனைவருக்கும் பரிச்சயமானவராக தேவயானியை ஆக்கிய பெருமை அமெரிக்காவையே சேரும். தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்தார், பணிப்பெண்ணுக்கு உரிய சம்பளத்தை அளிக்கவில்லை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தேவயானியை அமெரிக்க போலிசார் நியூயார்க் கடைத்தெருவில் வைத்து கைவிலங்கிட்டு கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேவயானியை நிர்வாணமாக்கி சோதனை செய்த அமெரிக்க போலிசு, பின்னர் போதைப்பொருள், பாலியல் குற்றச்சாட்டுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதிகளோடு சிறையில் சேர்த்து அடைத்தனர்.
“துணைத்தூதர் தேவயானியின் மீதான குற்றச்சாட்டு எதுவாயினும் அவரை கைது செய்த அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. வெளிநாட்டு தூதர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பூர்வ உரிமையை அவருக்கு அமெரிக்கா அளிக்காதது தவறு. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தேவயானியை மட்டுமல்ல இந்தியாவையே அவமதிக்கும் செயலாகும்.
எனவே துணைத்தூதர் மீதான வழக்கை அமெரிக்கா கைவிடுவதோடு மன்னிப்பும் கோரவேண்டும்” என இந்திய அரசு பகிரங்க கோரிக்கை வைத்தது.
இந்தியாவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா தேவயானிக்கு தூதர்களுக்கு உரிய சலுகையை வழங்க முடியாது; அவர் மீது அமெரிக்க சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
இந்தப் பிரச்சனை இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரலில் அமெரிக்காவின் ஆணவமிக்க நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் அடுத்த கட்டமாக இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளையும் இந்தியா திரும்ப பெற்றது. இதன் உச்சக்கட்டமாக அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்திய அரசு வழங்கியிருந்த சிறப்பு அனுமதி அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதோடு, அமெரிக்க தூதரகத்திற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டது.
இந்தியாவின் இந்த பதிலடிக்குப் பின்னரும் கூட அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
இதனால் வேறுவழியின்றி தேவயானிக்கு அமெரிக்க சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதற்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரத் தூதராக அவருக்கு பதவி உயர்வு அளித்தது இந்திய அரசு. ஆனாலும் இந்த சலுகையை அளிக்கும் அதிகாரம் ஐநாவுக்கு இல்லை என்றும் இதை அமெரிக்க அரசாங்கம்தான் தர வேண்டும் என்றும் ஐநா கைவிரித்துவிட்டது.
அதே நேரத்தில் அமெரிக்காவோ தேவயானி செய்துள்ள குற்றம் கடுமையானது; அதிலிருந்து வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க முடியாது, தூதரக விவகாரங்களில் மட்டுமே இந்த விலக்கு வழங்கமுடியும் என்று இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
ஆனாலும் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண முயற்சித்து வருவதாக இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.
சரி, அப்படி என்னதான் அமெரிக்க சட்டத்திற்கு புறம்பாக தேவயானி செயல்பட்டார் என்பதை இனி பார்ப்போம்.
அமெரிக்காவில் தனது வீட்டில் வேலை செய்வதற்காக சங்கீதா என்ற பெண்ணை மாதம் ரூ 30,000/- சம்பளத்திற்கு அமர்த்தியுள்ளார் தேவயானி.
ஆனால் அமெரிக்க விசா விதிகளின் படி சங்கீதா சார்பில் விசா விண்ணப்பத்தை 2012 அக்டோபர் மாதத்தில் தேவயானி அனுப்பியுள்ளார். இந்த விண்ணப்பத்தில் பணிப்பெண் சங்கீதாவுக்கு மாத சம்பளம் 4500 டாலர் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தாராம்.
இந்த விண்ணப்பத்தின் படி சங்கீதாவை நவம்பர் – 1 ம் தேதி நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்த அமெரிக்க அதிகாரிகள் தேவயானியும், சங்கீதாவும் செய்து கொண்ட பணி ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த பணி ஒப்பந்தத்தில் சங்கீதாவுக்கு வேலை நேரம் வாரம் 40 மணி நேரம் என்றும் ஒரு மணி நேரத்திற்கு சம்பளம் 9.75 டாலர் என்றும் குறிப்பிட்டிருந்ததாம். மேலும் வாரம் ஞாயிறு விடுமுறை நாள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அமெரிக்க பணியாளர் நலன் சட்டப்படி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள், மருத்துவ விடுமுறை நாட்கள், ஆண்டு விடுமுறை ஆகியவையையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பணி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா, சங்கீதாவிற்கு நவம்பர் 14-ம் தேதி விசா வழங்கியது. நவம்பர் 24- ம் தேதி சங்கீதாவை நியூயார்க் அழைத்துச் சென்றுள்ளார் தேவயானி. அன்றிலிருந்து சங்கீதா 2013 ம் ஆண்டு ஜீன் மாதம் வரை 7 மாதம் தேவயானி வீட்டில் வேலை செய்துள்ளார்.
ஜீன் மாதம் தேவயானியின் வீட்டிலிருந்து வெளியேறிய சங்கீதா, நியூயார்க் போலிசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் இம்மாதம் டிசம்பர் 12-ம் தேதி தேவயானியை அமெரிக்கப் போலிசு கைது செய்துள்ளது.
தேவயானி, சங்கீதா சார்பில் விண்ணப்பித்த விசா விண்ணப்பத்தில் மோசடி செய்தார். ஒப்பந்தப்படி சங்கீதாவுக்கு சம்பளம் அளிக்காததுடன் கூடுதலாகவும் வேலை வாங்கியுள்ளார் என்பது தேவயானி மீது அமெரிக்கா சாட்டியிருக்கும் குற்றச்சாட்டாகும்.
அமெரிக்கப் பணியாளர் சட்டத்தை தேவயானி மட்டுமல்ல இந்தியாவிலிருந்து வீட்டு வேலைகளுக்காக பணியாட்களை யார் அழைத்துச் சென்றாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பணியாளர்களை அழைத்துச் செல்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தான். இந்த அடிப்படையில் விசாவிற்காக விண்ணப்பிக்கும் போதே அந்த விசாவை அமெரிக்கா நிராகரித்துவிட முடியும். பணியாளர்கள் புகார் அளிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை..
அப்படியானால் இப்படிப்பட்ட விசாக்களை அமெரிக்கா அளிப்பதற்கான காரணம் உள்நோக்கமுடையது. தனக்கு தேவைப்படும்போது அமெரிக்கா விசா முறைகேட்டை பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் இதில் புதைந்திருக்கும் உண்மையாகும்.
சங்கீதா சார்பில் விசா விண்ணப்பம் அளித்த தேவயானி பணிப்பெண்ணுக்கு மாத சம்பளம் 4500 டாலர் என்று குறிப்பிட்டிருந்தார் என்றும் இது மோசடி என்றும் இப்போது கூறுகிறது.
அமெரிக்கா துணைத்தூதர் தேவயானியின் மாத சம்பளமே 4500 டாலர்கள்தான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ2,70,000/- . இப்படி இருக்கும்போது தனது பணியாளருக்கு அவர் மாத சம்பளமாக ரூ2,70,000/- குறிப்பிட்டிருந்தது எப்படி சாத்தியம் என்பது அப்போதே அமெரிக்காவுக்கு தெரியதா? இது தவறானது, மோசடியானது என்று அப்போதே அந்த விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரிக்காதது ஏன்?
மோசடியான விசா விண்ணப்பத்தை நிராகரிக்காத அமெரிக்கா, அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் சங்கீதாவை நேர்முகம் கண்டுள்ளது. இந்த நேர்முகத்தில் அமெரிக்க பணியாளர்கள் நல சட்டப்படி பணி ஒப்பந்தத்தை சங்கீதா அளித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் வாரம் 40 மணி நேரம் வேலை நேரம் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு 9.75 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்றும் இப்போது அமெரிக்கா கூறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 9.75 டாலர் என்றால் ஒரு மாதத்திற்கு 1560 டாலர்கள் சம்பளமாக ஆகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.93,600/- ஆகிறது.
விசா விண்ணப்பத்தில் பணியாளர் மாத சம்பளமாக ரூ 2,70,000/- என்று குறிப்பிட்டுவிட்டு, நேர்முகத்தில் அளித்த பணி ஒப்பந்த நகலில் மாத சம்பளம் ரூ93,600/- குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இந்தத் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதால் விசா வழங்க முடியாது என்று விண்ணப்பத்தை அமெரிக்க அதிகாரிகள் அப்போதே நிராகரித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக விசா வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு ரூ2,70,000/- சம்பளம் வாங்கும் ஒருவர் தனது பணியாளருக்கு ரூ93,600/- சம்பளமும், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, உணவு உள்ளிட்ட சலுகைகளையும் வழங்கினால் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக மாத சம்பளமாக வழங்க வேண்டும். இது நடப்பது சாத்தியம் இல்லை என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கும்.
எனவே தேவயானி மீதான அமெரிக்க நடவடிக்கை முற்றிலும் சட்டப்படியானது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமாக காட்டுபவர்களின் வாதத்திற்குப் பொருந்துவதாக இல்லை.
மேற்கண்ட தகவலோடு, சங்கீதாவின் குடும்பத்தினரை அவசரம், அவரசரமாக இலவசமாக அமெரிக்கா அழைத்துச்சென்று அவர்களை இலவசமாக மீண்டும் அனுப்பிவைத்தார்கள் போன்ற தகவல்களும் அமெரிக்காவின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் செயலாகவே உள்ளது.
அமெரிக்க அரசின் நடவடிக்கை மட்டுமல்ல, இந்திய அரசின் நடவடிக்கைகளும் உள்நோக்கமுடையதாகத்தான் இருக்கிறது.
தேவயானிக்கு முன்பே அவரை விட உயர் பதவிகளில் இருந்துள்ள இந்திய குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை எல்லாம் அமெரிக்கா அவமதித்தபோதெல்லாம் வாய் மூடி மவுனியாக இருந்த இந்திய அரசு, இப்போது தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கோரும்வரை ஓயமாட்டோம் என்று கொக்கரிப்பது தேசபக்தியைப் போன்று தோன்றினாலும், உண்மை அதுவல்ல.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அண்மை ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. தமது குடிமக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் குட்டிநாடான இலங்கையின் செயல் இந்திய ஆட்சியாளர்களின் தேசபக்தியைத் தூண்டவில்லை. ஆனால் தேவயானி மீதான அமெரிக்காவின் கைது நடவடிக்கை இந்திய ஆட்சியாளர்களிடையே தேசபக்தியைத் தூண்டிவிட்டதாக கருதுவது கேழ்வரகில் நெய் வடியும் கதைதான்.
அமெரிக்காவும், இந்தியாவும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எதிர்ப்பதைப் போன்று காட்டிக்கொண்டாலும், இவைகள் நம்மை உசுப்பிவிடுவதற்கான நாடகமேயன்றி வேறல்ல.
(source: http://www.keetru.com/)