“நாட்டை ஆள்வது ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியே’ : அரவிந்த் கெஜ்ரிவால்

“”நாட்டை ஆள்வது, கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களே. காங்கிரசுக்கு ஓட்டு போட்டாலும், பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போட்டாலும், முடிவெடுப்பது, நிறுவனங்களின் தலைவர்களே,” என, நேற்று தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், நீரா ராடியா, “டேப்’ விவரங்களை சுட்டிக் காட்டி, தி.மு.க., ரிலையன்ஸ், காங்கிரஸ் மீது சாடியுள்ளார்.

“ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடும், நான்காவது ஊழல், முறைகேடு தகவல் இது. முதலில், அமைச்சர் சல்மான் குர்ஷித் முறைகேடு, இரண்டாவது, சோனியா மருமகன் ராபர்ட் வதேரா, மூன்றாவது, நிதின் கட்காரி என, ஊழல் பட்டியல் வாசித்த கெஜ்ரிவால், நேற்று, தன் நான்காவது பட்டியலில், சரமாரியாக பலரையும் இணைத்தார்.

நீரா ராடியா “டேப்’ : முன்னதாக அவர், “ஆடியோ டேப்’ ஒன்றை போட்டுக் காட்டினார். அரசியல் தரகர், நீரா ராடியாவுக்கும், முன்னாள் பிரதமர், வாஜ்பாய் மருமகனுக்கும் இடையே நடந்த, போன் உரையாடல் அது. அதில், தயாநிதிக்கு, தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி என்பது பற்றி பேசப்பட்டிருந்தது. அமைச்சர் பதவி குறித்து, தி.மு.க., மேலிடம், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம், நேரடியாக பேரம் பேசிய விவரங்களை, நீரா ராடியாவும், வாஜ்பாய் மருமகன், ரஞ்சன் பட்டாச்சார்யாவும், தங்கள் போன் உரையாடலில் பேசிய விவரங்கள், அதில் இடம் பெற்றிருந்தன. அந்த உரையாடலில், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான, குலாம் நபி ஆசாத்திற்கும், தனக்கும், “ஹாட் லைன்’ தொடர்பு இருப்பதாக, ரஞ்சன் பட்டாச்சார்யா கூறுகிறார். இரண்டாவது, “டேப்’ உரையாடல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி தொடர்பானது. அதில் பேசிய, ரஞ்சன் பட்டாச்சார்யா, “காங்கிரசும் என் சொந்த கடை போன்றது தான்’ என, பேசுகிறார். தன் கூட்டாளியும், பிரபல வழக்கறிஞருமான, பிரஷாந்த் பூஷனுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: நீரா ராடியா போன் உரையாடல், இந்த நாட்டின் உண்மையான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்புகளை அம்பலம் ஆக்குகிறது. இந்த நாட்டை, கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தான் ஆள்கின்றனர். காங்கிரசுக்கு ஓட்டு போட்டாலும், பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போட்டாலும், முடிவெடுப்பது நிறுவனங்களின் தலைவர்களே.

அதிக விலை : பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த, ஜெய்பால் ரெட்டியை, அந்த பொறுப்பிலிருந்து அகற்ற காரணம், ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியே. கிருஷ்ணா – கோதாவரி பேசின் பகுதியில் ரிலையன்ஸ் எடுக்கும் வாயுவுக்கு அதிக விலை கேட்டு, அதற்கு ஜெய்பால் அனுமதி அளிக்காததால் தான், அவருக்கு அறிவியல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டது. மணிசங்கர் அய்யர், ஜெய்பால் ரெட்டி தவிர்த்து, பிற பெட்ரோலிய அமைச்சர்கள், அம்பானிக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, முரளி தியோரா, நிதியமைச்சராக இருந்த, பிரணாப் முகர்ஜி ஆகியோர், ரிலையன்ஸ்சுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.
செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, “காஸ்’ விலையை அம்பானி உயர்த்தியுள்ளார். அதற்கு, ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் உதவி செய்துள்ளனர். அமைச்சர்களை, மக்களா தேர்ந்தெடுக்கின்றனர்? இல்லை; கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர். தொலை தொடர்பு அமைச்சரை, டாடா நிறுவனம் நியமிக்கிறது; பெட்ரோலிய அமைச்சரை ,ரிலையன்ஸ் நிறுவனம் நியமிக்கிறது. இது தான், இந்த நாட்டின் லட்சணம். பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஊழல் செய்பவர்களுக்கு உதவுவதும் குற்றமே; அந்த வகையில், பிரதமர் மீதும் வழக்கு பதிவு செய்யலாம். இவ்வாறு, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

(dm)
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s