ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தடுக்க கர்நாடகா முயற்சி!

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்தும், எல்லை பிரச்னை குறித்தும், மீண்டும் கர்நாடகா பிரச்னை கிளப்பி இருப்பதோடு, இது குறித்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகா மனு தாக்கல் செய்ய இருப்பதாக, அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் பசவராஜ் தெரிவித்துள்ளார். எல்லை பிரச்னைக்கு ஏற்கனவே முடிவு எட்டிய நிலையில், மீண்டும் பிரச்னை கிளப்புவது, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி, இரு மாநில உறவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான, ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி, இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் சிறுமலை மற்றும் சினிபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளை, 2005ல் கர்நாடக வனத்துறையினர் தங்களுக்குரிய பகுதி என, கூறி பிரச்னையை கிளப்பினர்.

சர்வே: பின் இரு மாநிலங்களுக்கும் இடையில் சர்வே செய்யப்பட்டது. அதன் பின் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடக அரசு ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை எழுப்பி வருகிறது. கடந்த, 25ம் தேதி கர்நாடக மேலவையில் கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் அஸ்வத் நாராயணன் கேள்விக்கு, பதில் அளித்த, அம்மாநில அமைச்சர் பசவராஜ் பொம்மை, “ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் மாற்றம் செய்திருப்பதாகவும், எல்லைகள் அதிகப்படுத்தபட்டுள்ளது. இத்திட்டத்துக்குரிய இடம் விவாதத்துக்குரியது. மத்திய அரசு கூட்டு சர்வே செய்ய அக்கறை காட்டவில்லை. எனவே சட்ட முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, கூறியுள்ளார். எல்லை பிரச்னைக்கு, 2005ம் ஆண்டு இரு மாநில வனத்துறையினர் கூட்டாக சர்வே பணி முடித்துள்ளனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணி நடக்கும் பகுதி முழுவதும் தமிழக எல்லைக்குள் வருகிறது. தமிழகத்தில் காவிரி நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் இருந்து, 64 கி.மீ., தூரம் தமிழக, கர்நாடகா எல்லை வனப்பகுதி உள்ளது. ஒரு கரைப்பகுதி தமிழக பகுதியான ராசிமணல், பிலிகுண்டுலு, ஊட்டமலை, கூத்தப்பாடி, ஒகேனக்கல் ஆகிய பகுதிகள் உள்ளன. மறு கரைப்பகுதியில் கர்நாடக மாநில கிராமங்களான மாறுகொட்டாய், ஜம்புபட்டி, செங்கம்பாடி ஆகிய கிராமங்கள் உள்ளன. காவிரியின் ஒரு கரைப்பகுதி தமிழகத்துக்கும், மறு கரைப்பகுதி கர்நாடக மாநிலத்துக்குமாக பிரித்து, பிரிட்டிஷ் அரசு வன நீர் பரப்பு எல்லையாக வரையறுத்துள்ளது.

பிரிவினை: நீர் பரந்து விரிந்து வரும் கரைக்கு இடைப்பட்ட பரப்பு, இரு மாநிலத்துக்கும் சரி சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு கரைக்கும் இடைப்பட்ட நீர் பரப்பு பகுதியானது, 50 கி.மீ., தூரத்தில், 500 மீட்டர் முதல், 2,000 மீட்டர் இடைவெளியில் உள்ளது. இந்த பரப்பும் சரிசமமாக இரு மாநிலங்களுக்கும் பிரித்து, பிரிட்டிஷ் ஆட்சியில் வனத்துறை வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊட்டமலையில் இருந்து வரும் காவிரி நீர் பெரிய நீர்வீழ்ச்சி அருகே, இரு பிரிவாக பிரியும் மையப்பகுதியில் பாறை பரப்பாக உள்ளது. கடந்த, 2005ம் ஆண்டு இரு மாநில வனத்துறையினர், பிரிட்டிஷ் வனத்துறை சர்வே அடிப்படையில் ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், மீண்டும் கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும் தகவல்கள் முரண்பாடாக உள்ளன. பிரிட்டிஷ் வரைபட அமைப்பு படியும், உபயோக அடிப்படையிலும், கர்நாடக மாநில அமைப்புகள் உரிமை கோரும் பகுதி அனைத்தும் தமிழக எல்லையில் உள்ளது. ஆனால், தேவையற்ற எல்லை பிரச்னையை, கர்நாடக மாநில அமைச்சர் பசவராஜ் பொம்மை கிளப்பி வருவது, இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற சர்ச்சையை கிளப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை: கர்நாடக அரசு கூறுவது போல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியில் எந்த மாற்றமும், விரிவுப்படுத்தவும் இல்லை. பணி துவங்கப்பட்ட போது திட்டமிட்டப்படியே பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தால், கர்நாடக மாநிலத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.கடந்த, 1998ம் ஆண்டு பெங்களூரு குடிநீர் திட்டமும், ஒகேனக்கல் குடிநீர் திட்டமும், இரு மாநில அரசுகளால் ஒப்பு கொள்ளப்பட்டவை. 2002ம் ஆண்டு, பெங்களூரு குடிநீர் திட்டத்தை, உலக வங்கி நிதியுதவியுடன் கர்நாடக அரசு நிறைவேற்றியது. கடந்த, 1998ம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியின் போது, பொக்ரான் அணுகுண்டு பரிசோதனை காரணமாக, ஜப்பான் பன்னாட்டு வங்கி நிதியுதவி தடைபட்டதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு பணியோடு நின்றன. குடிநீர் பெறுதல் என்பது அடிப்படை மனித உரிமை. இதை தடுப்பது மனிதநேயமற்ற செயல். சர்வதேச சட்ட மரபுக்கும், இந்திய அரசியல் சாசனத்துக்கும் மாறானது. மேலும், காவிரி நதி நீர் பங்கீடு குறித்த பிரச்னையுடன், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை அணுக கூடாது. குடிநீர் பிரச்னை வேறு, நதி நீர் பங்கீடு வேறு என்பதை கர்நாடக அரசு உணர வேண்டும்.

dm

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s