ஆசிரியர் மாணவர் உறவு சீரழிய காரணம் என்ன?

வீட்டுப்பாடம் எழுதாத மாணவியின் முதுகு சிவக்கும் அளவு பிரம்படி, படிக்காத சிறுவனின் கையை முறித்தது, பக்கத்து மாணவரிடம் பேசியதால் கண்ணில் காயம் ஏற்படுத்தியது, பாடம் கற்றுத்தரும் சாக்கில் பாலியல் வன்முறை, தவறு செய்யும் மாணவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி துன்புறுத்தியது… என கடந்த வாரம் ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள். மாணவர்களும் பள்ளிகளில் வயதை மீறிய சேட்டைகள் செய்ய துவங்கி விட்டனர். போதையோடு வருவது, ஆசிரியைகளை கிண்டலடிப்பது, ஜாதி ரீதியாக மோதிக்கொள்வது, ஆசிரியர்களின் சிறுசிறு கோபங்களை கூட தாங்கிக் கொள்ளாமல், “தற்கொலை முயற்சி’ என்ற அபத்தமான அஸ்திரத்தை கையில் எடுப்பது என்று நம் மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என்ற கவலை மறுப்பக்கம்.

ஆசிரியர் கண்டிப்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர் சிலர்…குழந்தைகளை கண்டிக்கவே கூடாது என நினைக்கும் பெற்றோர் பலர். இந்த சூழ்நிலையில் ஆசிரியர்-மாணவர் உறவு இப்படி சீரழிய என்ன காரணம்? இது வலுவாக என்ன செய்ய வேண்டும்? சிலரதுகருத்துக்கள்…

* ஜி.உமா மகேஸ்வரி, குடும்பத்தலைவி மதுரை: மாணவர்களை அடிக்கும் போது, முழங்காலுக்கு கீழே அடிக்கலாம். அதிக கடுமை காட்டும் போது தானே பிரச்னை வருகிறது. எல்லா பெற்றோர்களும், பிள்ளைகளை அடிப்பதற்காக பிரச்னை செய்வதில்லை. தற்போதைய மாணவர்கள், சொன்னதை உடனடியாக புரிந்து கொள்ளும் திறமையுள்ளவர்கள். என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். பள்ளியில் அடித்ததில்லை. வெறும் பாடங்கள் போரடிக்கும். பாடம் நடத்தும் முறையை சுவாரசியமாக்கினால் தான், மாணவர்களுக்கு பிடித்தமான இடமாக, வகுப்பறை இடம்பெறும்.

* டாக்டர் கே. ராதிகா (பெற்றோர்), மதுரை: என் மகன் பத்தாவது படிக்கிறான். பள்ளியில் இதுவரை அவனை யாரும் அடித்ததில்லை. பிள்ளைகளை அடித்து திருத்த நினைக்கக்கூடாது. மென்மையாக அணுகினால், பாதி பிரச்னைகள் குறைந்து விடும். எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள். அறிவுப்பூர்வமாக மாணவர்களை அணுகவேண்டும். 100 சதவீத தேர்ச்சி தரவேண்டும் என பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் நெருக்கடி செய்யும் போது, ஆசிரியர்களுக்கு மனஅழுத்தமும், இதுபோன்ற விபரீதங்களும் ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும்.

* கே.நாகசுப்ரமணியன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட பொறுப்பாளர்: ஒரு ஆசிரியராக, எங்களின் பிரச்னைகளை யாரும் புரிந்து கொள்வதில்லை. பையன் படிக்கவில்லை என்பதற்காக தானே கண்டிக்கிறோம். நாங்கள் அடித்தால், எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கு பயந்து மாணவர்களை கண்டிக்காமல் விட்டால், புகையிலை, சிகரெட் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எளிதில் ஆளாகின்றனர். பெற்றோர்களை அழைத்து வரச் சொன்னால், தற்கொலை செய்து கொள்கின்றனர். பிள்ளைகளை வழி நடத்தாத பெற்றோர்கள் தான், எங்களை புரிந்து கொள்ளாமல் பிரச்னை செய்கின்றனர். மாணவர்கள் நன்றாக படிப்பதைத் தவிர, எங்களுக்கு வேறென்ன தேவை இருக்க முடியும். இதற்காக தான் ஆசிரியப் பணிக்கு வந்துள்ளோம். அடிக்ககூடாது, திட்டக்கூடாது, கண்டிக்ககூடாது என… ஆசிரியர்களின் கைகளை கட்டி போட்டு விட்டு, வெறுமனே பாடம் நடத்தச் சொல்கின்றனர். வாங்கிய சம்பளத்திற்கு பாடம் மட்டுமே நடத்துவது கொடுமை. இன்றைய மாணவ சமுதாயம், நாளைய நல்ல சமுதாயமாக மாற வேண்டாமா? தவறு செய்யும் ஓரிரு ஆசிரியர்களை “கவுன்சிலிங்’ மூலம் திருத்தலாம்.

* எம்.சாந்தி, முதல்வர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: அடுத்தவர் முன்னிலையில் நம்மைத் திட்டினால், ஏற்றுக் கொள்வோமா? அதை ஆசிரியர்கள் உணரவேண்டும். தவறே செய்திருந்தாலும், சக மாணவர்கள் முன்னிலையில் திட்டக்கூடாது. தனியாக அழைத்துச் சென்று எடுத்துக் கூறலாம். முடிந்தவரை, நாமே திருத்தப் பார்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும் பெற்றோரை அழைத்து அவமானப்படுத்தக்கூடாது. வயதுத் தோழர்களை அழைத்து, அவர்களுடன் கலந்து பேச அனுமதிக்க வேண்டும். இந்தமுறை, நல்ல பயன் தரும். மாணவர்களின் தனித்துவத்தை அனுமதிக்க வேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு, மாணவர்களின் கையில் தான் இருக்கிறது. அவர்களின் வயதுடன் ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது. ஒரு மாணவன் தப்பு செய்தால், இவன் இப்படித்தான் என முத்திரை குத்தக்கூடாது. அவனது குடும்பத்தால் ஏற்பட்ட பாதிப்பா, நண்பர்களின் சகவாசம் தவறா என்பதை ஆராய வேண்டும். அதை சரிசெய்ய வேண்டும். இதுதான் ஆசிரியர்களின் கடமை.

* ஆர். திருநாவுக்கரசு, போலீஸ் துணை கமிஷனர்: ஆசிரியர்கள் என்பதைத் தாண்டி, மாணவர்களின் “இரண்டாவது பெற்றோர்’ என்ற சிந்தனை வரவேண்டும். கிராமப்புறங்களில் தான் ஆசிரியர்கள் அடிப்பது தொடர்பான புகார்கள் அதிகம் வருகிறது. மாணவர்களை அணுகத் தெரியாதவர்கள் தான் எளிதில் கோபப்பட்டு, அடிக்கின்றனர். கையில் பிரம்புடன் வரும் ஆசிரியர்களைக் கண்டு, மாணவர்கள் பயப்படத் தான் செய்வர். படிக்க மாட்டார்கள். பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு இல்லாததே, குழந்தைகள் வரம்பு மீறி தவறு செய்வதற்கு காரணம். 30 வயதுக்கு மேல் நல்லது, கெட்டதை தெரிந்து கொண்டு, “டிவி’யில் கண்டதைப் பார்ப்பதற்கும், ஒன்றுமே தெரியாமல் குழந்தைகள் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. குழந்தைகளுக்காக சில விஷயங்களை தியாகம் செய்யத் தான் வேண்டும். எந்த அப்பா, குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுகிறாரோ, அங்கே நல்ல சூழ்நிலை உருவாகும். குழந்தையும் தவறு செய்யாது. பெற்றோர்கள், குழந்தையுடன் நேரத்தை செலவிட்டால், பள்ளி வரை தவறுகள் நேராது. இவ்வாறு கூறினர்.

மாணவர்கள் எதையும் தாங்கும் சக்தி இல்லாதவர்கள்! மனநல டாக்டர் சி.ராமசுப்ரமணியன்: மாணவர்களை அடிப்பது, அவமானப்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இதற்காக ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்தையும் குறைசொல்ல முடியாது. மாணவர்கள் பள்ளியில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அந்தநேரம் ஆக்கப்பூர்வமாக செலவிடப்படவில்லை, என்பது தான் குறை. பிள்ளைகள் இப்படித் தான் வளரவேண்டும், வாழவேண்டும் என்பதற்கான, புத்தக கையேடு எதுவும் இல்லை. நமது சுற்றுப்புறத்தைப் பார்த்துத் தான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. மனிதனை மனிதனாக, ஒழுக்கசீலனாக உருவாக்கும் புனிதமான தலம் தான், கல்விச்சாலைகள். வகுப்பில் உள்ள 40 மாணவர்களும், 40 விதத் திறமைகளுடன் இருக்கலாம். அதை கண்டறிந்து, வெளிப்படுத்துவதே, ஆசிரியரின் கடமை. எல்லோரையுமே நிறைய மதிப்பெண் பெற வைப்பதால், சமுதாயத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எதிர்கால சமுதாயம் தீயவழியில் செல்லாமல் இருப்பதே முக்கியம். 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆசிரியர், மாணவர்கள் மனநிலை வேறு. இப்போதும் அதேபோல அடிப்பது, அவமானப்படுத்துவதைத் தொடரக்கூடாது. சமுதாய வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சியில் நாம் முன்னேறினாலும், மாணவர்கள் எதையும் தாங்கும் சக்தி இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். அதனால் தான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுக்கு செல்கின்றனர். அன்பு, முறையான வழிகாட்டுதலே மாணவர்களை திருத்தும் வழி. மாணவன் தவறு செய்தால், அவன் மனம் திருந்தும் வகையில் தண்டிக்கவேண்டும். மனம் வருந்தச் செய்யக்கூடாது. மற்றவர்கள் முன்னிலையில் அடிக்கும் போது, ஏளனமாக பேசும் போது, மனதில் ஏற்பட்ட ரணத்தை, அவன் சாகும்வரை மாற்றமுடியாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்களுக்கு, தண்டனை தருவதோ, தற்காலிக பணிநீக்கம் செய்வதோ தீர்வாகாது. அவர்களை உளவியல் ரீதியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

மாணவர்களை எப்படி கையாள வேண்டுமென்ற, அடிப்படை அணுகுமுறையை கற்றுத்தர வேண்டும். தொட்டதற்கெல்லாம் அடிப்பதும், திட்டுவதும், ஏளனம் செய்வதுமாக இருந்தால், மாணவர்கள் மிகப்பெரிய மனநோயாளியாக மாறிவிடுவர். காலை 9 முதல் மாலை 4 மணி வரை, தொடர்ந்து பாடங்களை எழுதுவது, கேட்பதென, மாணவர்கள் சோர்ந்து விடுகின்றனர். ஆசிரியர்களும் களைத்து விடுகின்றனர். ஒவ்வொரு பாடவகுப்பு துவக்கத்திலும், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி மனதளவில் இளைப்பாற்ற வேண்டும். உட்கார்ந்து, எழச் சொல்வது, கையை தூக்கி, இறக்கி விடச் சொல்வது, புதிர், விடுகதை சொல்வதென ஐந்து நிமிடங்கள் மாணவர்களை சந்தோஷப்படுத்தினால், அடுத்த ஒருமணி நேரம் புத்துணர்வோடு பாடத்தை கவனிப்பர். வீட்டுப்பாடம் எழுதாதவர்கள், படிக்காதவர்களை கைதூக்கச் சொல்வதற்கு பதிலாக, எழுதியவர்கள், படித்தவர்களை கைதூக்கச் சொல்லலாம். மாணவப் பருவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தான், முக்கியமான கடமை.

dm

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s