நல்ல சட்டம்: சரியான முறையில் செயல்படுமா?

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பு இன்று முதலாகவே நடைமுறைக்கு வரும் என்றும் நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு சில மாதங்களுக்கு முன்பே இத்திட்டத்தை ஏற்று அறிவித்திருப்பதோடு, எப்படிச் செயலாற்ற வேண்டும் என்கிற விதிமுறைகளையும் ஏற்படுத்திவிட்டது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை.

ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் ஏழை மாணவர்கள் தகுதியைப் பெறுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், அரசு ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் பதவிகள் மூலம் நெருக்கடி தந்து இந்த 25% விழுக்காட்டினைப் பெற்றுப் பயனடைதல் சாத்தியமில்லை.

இருப்பினும், ஒரு பள்ளியில் 25%க்கும் அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தால் “ரேண்டம்’ முறையில் தீர்மானிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த “ரேண்டம்’ முறைத் தேர்வு எப்படி நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த “ரேண்டம்’ முறை பள்ளி வளாகத்தில் பொது இடத்தில் வைத்து, விண்ணப்பித்த அனைத்துப் பெற்றோரின் முன்னிலையில் நடத்தப்பட்டால் மட்டுமே, இதில் ஊழல் இல்லாத நிலையை உருவாக்க முடியும். இல்லாவிட்டால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள் தலையீட்டால் மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடக்கும்.

25% இடங்கள் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டால் தங்கள் லாபம் குறைந்துவிடும் என்று முணுமுணுக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம் இருக்க, அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை மேலும் குறைந்துவிடும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர் அமைப்புகளும்கூட எதிர்ப்புத் தெரிவித்தன. அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணி தரமாக நடைபெற்றால் நிச்சயமாக மாணவர்கள் வரவே செய்வார்கள் என்பதை ஆசிரியர் சங்கங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசு அறிவிக்கை வெளியான போதிலும்கூட, இன்னும் சில நடைமுறைகளை அரசு விரிவாகச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்தச் சட்டம் 6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே. அதாவது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதைக் காரணமாகக் காட்டி பிளஸ் 2 படிப்பில் கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தை நாடும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இந்த 25% ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்பதை ஆணித்தரமாக அறிவித்து, இதுதொடர்பாகத் தடையுத்தரவு கோரும் மனுக்களை விசாரிக்கும் முன்பாக, தமிழக அரசிடம் கருத்தறிய வேண்டும் என்றும் “கேவியட்’ தொடுத்து வைப்பது அவசியம்.

ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணம் மட்டும் நிர்வாகத்துக்குத் தரப்படவுள்ளது. இந்த இடஒதுக்கீட்டில் படிக்க வரும் மாணவர்களிடம் கற்பித்தல் மற்றும் வகுப்பறைச் சூழலில் எந்தவித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்பதை இந்த அறிவிக்கை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இலவசமாகத்தான் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான ஷூக்கள், டை, வண்ண உடைகள், உடற்பயிற்சி வகுப்பு நாளில் வெள்ளை உடை மற்றும் கேன்வாஸ் ஷு என்று பல வகை உடைகளை நிர்ணயித்து லாபம் பார்த்து வருகின்றன. அங்கே சேரும் இந்த ஏழை மாணவர்கள் இந்தச் செலவுகளை எப்படி ஏற்க முடியும்? அதனால், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி என அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரேவிதமான சீருடையை மாணவ – மாணவியருக்கு அறிவுறுத்துவதும் அவசியம்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் மற்றொரு வருவாய், பள்ளி வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வரும் பேருந்துக் கட்டணத்தால் கிடைக்கிறது. ஏழைக் குழந்தைகளால் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த முடியாது. தற்போதுள்ள நடைமுறைப்படி தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் கிடைப்பதில்லை. 25% இடஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதலாகவே அமலுக்கு வரும் என்ற நிலையில், இத்தகைய இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எந்தத் தனியார் பள்ளியில் படித்தாலும் அவர்களுக்கு அரசின் இலவச பஸ் பாஸ் வழங்குவதை இப்போதே உறுதி செய்யவும் வேண்டும்.

தனியார் பள்ளியில் படிக்கும் உயர் வருவாய்ப் பிரிவினரின் குழந்தைகளுக்கு இணையாக இந்த ஏழைக் குழந்தைகளும் படிப்பில், தேர்வில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதற்காகத்தான் இந்தச் சட்டத்தில், இத்தகைய குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு இணையான அறிவுத்திறன் பெறும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சி இல்லாவிட்டால், ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடும். ஆகவே, சிறப்புப் பயிற்சியை ஏழை மாணவர்களுக்கு உறுதி செய்வது மிகமிக அவசியம்.

பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தீர்ப்பு வருவதற்கு முன்பே அவசர அவசரமாக முடிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. 2012-13 நிதியாண்டில் 25% மாணவர் ஒதுக்கீடு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தும்கூட இந்த மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டிருப்பது, அரசுக்கு நெருக்கடி தந்து, இந்த 25%க்குக் கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டிக்கொள்ளலாம் என்ற (கல்வி அதிகாரிகள் கொடுத்த) தைரியம்தான், வேறென்ன!

நல்லதொரு சட்டம் இயற்றப்பட்டு, உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டிருக்கிறது. இதை நடைமுறைச் சாத்தியமாக்கும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. சட்டம் செயலாக்கப்பட்டாலே போதும், கல்வி குடிசைகளைப் போய்ச் சேரத் தொடங்கிவிடும்!

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s