சட்டத்தில் ஓட்டை : இதுவே தீர்வாகாது!

வெளிநாடுகளில் மேல்படிப்புக்காகச் செல்லும் டாக்டர்களில் இந்தியா திரும்புவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேல்படிப்புக்கு வெளிநாடு சென்றவர்களில் 3,000 டாக்டர்கள் நாடு திரும்பவில்லை.

இந்நிலையில், 2012-ஆம் ஆண்டு முதலாக மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்கள் யாராக இருந்தாலும், படிப்பை முடித்தவுடன் இந்தியா திரும்புவேன் என்று உறுதிமொழிப் பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் செல்ல முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்.

அமெரிக்கா மட்டும்தான், மேல்படிப்புக்காக வரும் டாக்டர்கள் அவர்தம் நாட்டிலிருந்து தடையில்லா சான்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆகவே, அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் டாக்டர்களுக்கு மட்டும் இந்த நிபந்தனை விதிக்கப்படும். இந்த உறுதிமொழியை அவர்கள் மீறினால், இவர்கள் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று இந்தியா வலியுறுத்த முடியும் என்று ஆசாத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மட்டும் இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற 60,000 பேர் பணியாற்றுகிறார்கள்.

ஒருவர் தான் கற்ற கல்விக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வெளிநாட்டில் கிடைக்கும்போது அவர் இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? குறிப்பாக, டாக்டர்களை மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? லட்சக்கணக்கில் கணினிப் பொறியாளர்கள் வெளிநாடுகளில் படிக்கச் சென்று அங்கே வேலையில் சேர்ந்துவிடுவதில்லையா என்கிற கேள்விகள் கேட்கப்படலாம்.

இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லாமல், அபரிமிதமான எண்ணிக்கையில் இருப்பார்களேயானால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கவலையில்லை என்று சும்மா இருக்கலாம். ஆனால், டாக்டர்கள் விவகாரத்தில் நிலைமை அதுவல்ல.

இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு டாக்டர்தான் இருக்கிறார். இதுவே அமெரிக்காவில் 350 பேருக்கு ஒரு டாக்டர், இங்கிலாந்தில் 469 பேருக்கு ஒரு டாக்டர், ஜப்பானில் 606 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலைமை உள்ளது. இந்திய மக்கள்தொகைக்கு ஏற்ப கணக்கிட்டால் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை. செவிலியர்களில் 10 லட்சம் பேரும், பல் மருத்துவர்களில் 2 லட்சம் பேரும் பற்றாக்குறை. இந்நிலையில், இந்தியாவில் இளநிலை படிப்பை முடித்துவிட்டு, முதுநிலை படிப்பு அல்லது சிறப்பு மருத்துவம் பயிலுவதற்காக வெளிநாடு செல்வோரும் திரும்பி வரவில்லை என்றால் இந்தியாவின் நிலைமைதான் என்ன?

மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் ஒரு மருத்துவரை உருவாக்கச் செலவிடும் தொகை மிக அதிகம். எம்பிபிஎஸ் படிப்பை ஐந்தரை ஆண்டுகளில் ஒரு மாணவர் படித்து முடிக்கிறார் என்றால், மருத்துவக் கல்வி அளிக்கும் நிறுவனம், கல்விப்புலம், நூலகம், ஆய்வகம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, அதைப் பராமரிக்கும் செலவுகளைக் கணக்கிடும்போது, ஒரு மருத்துவ மாணவருக்கு அரசு ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் வரை செலவிடுகின்றது. இத்தனை செலவுகளை இந்திய அரசு ஏற்பதால், அவர்கள் இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயம்தானே!

இந்தியா திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையை இந்தியா அறிமுகம் செய்யப்போகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருந்தாலும், நல்வாழ்வு மற்றும் மனிதவளத்துக்கான தேசிய ஆணையத்தின் வரைவு மசோதாவில் இது தொடர்பான புதிய நிபந்தனைகள் வலுவாக இல்லை என்பதையும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த மசோதாவில் பிரிவு 59-இல் “இந்தியாவுக்குச் சேவை செய்யும் கடமை’ இடம்பெறுகிறது. இதில் இந்திய அரசின் உதவி பெறும் நிறுவனம் அல்லது அரசுக் கல்லூரியில் இளநிலை டாக்டர் பட்டம் பெற்று, மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றவர், இந்தியா திரும்பிவந்து 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர் இந்தியாவில் தேசிய அல்லது மாநில அளவிலான மருத்துவர் பெயர் பதிவேட்டிலிருந்து அவரது பெயர் நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்தப் பிரிவின் மூன்றாவது உட்பிரிவில், மத்திய-மாநில அரசுகளின் நிதியுதவி பெறாத கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படித்த டாக்டர்கள், மேல்படிப்பு அல்லது சிறப்பு மருத்துவப் படிப்புக்காக வெளிநாடு சென்று, மூன்று ஆண்டுகளில் இந்தியா திரும்பாவிட்டால், தங்கள் வாழிடம் குறித்து தகவல் தெரிவிக்காவிட்டால், தொழில் நடத்தைபிறழ்வாகக் கொள்ளப்படும் என்கிறது. அதாவது அரசுக் கல்லூரியில் படித்த டாக்டர்களுக்கும் தனியார் கல்லூரியில் படித்த டாக்டர்களுக்கும் சிறிய வேறுபாட்டை இந்த மசோதா உருவாக்குகிறது. இது நியாயமல்ல.

மேலும் இதே பிரிவு 59-ல் உட்பிரிவு 2-இல், மருத்துவர் பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட ஒரு டாக்டர் தனது பெயரை மீண்டும் இந்தியாவில் பதிவு செய்துகொள்ள, கமிஷன் குறிப்பிடும் கட்டணம், அவர்கள் சொல்லும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது.

இந்த உறுதிமொழிப் பத்திரத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டுமே தொழில்செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆனால், அவர் அமெரிக்காவில் படித்துவிட்டு, கனடா அல்லது ஆஸ்திரேலியாவில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிச் சம்பாதித்துவிட்டு, ஓய்வாக தாய்நாடு திரும்ப விரும்பினால், மேற்சொன்ன விதிமுறைப்படி, கமிஷனின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் போதுமானது. இதுவும் சட்டத்தில் ஓட்டையைத்தான் ஏற்படுத்துகிறது.

எல்லா டாக்டர்களும், அவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி என எங்கு படித்திருந்தாலும், இந்தியாவுக்குத் தேவை. எல்லாருக்கும் பொதுவான, உட்சலுகைகள் இல்லாத ஒரு விதியை உருவாக்கினால்தான் இந்தியாவில் மருத்துவர் எண்ணிக்கை உயரும்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s