குஜராத்தில் சூரிய ஒளி மெகா மின் உற்பத்தி திட்டம் ஆரம்பம்

குஜராத் மாநிலத்தில், 600 மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி பூங்காவை முதல்வர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக சூரிய ஒளி மூலம் மிகப்பெரும் அளவு மின்உற்பத்தி செய்யும் திட்டம் இது.

21 நிறுவனங்கள்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து, 250 கி,மீ., தொலைவில் உள்ள சாரங்கா என்ற கிராமத்தில், சூரியசக்தி பூங்காவை, குஜராத் மாநில அரசு உருவாக்கியுள்ளது. இங்கு, 231 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தியை துவக்க, 21 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தியையும் சேர்த்து, மொத்தம், 600 மெகாவாட் மின் உற்பத்தியை, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நேற்று, சாரங்கா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.

விலை குறைவு: அப்போது மோடி பேசியதாவது: வருங்கால சந்ததியினருக்கு. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம் என்பதால், இந்நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியசக்தி கொள்கையை, 2009ம் ஆண்டு குஜராத் அரசு வெளியிட்ட போது, இதை பெரிய அளவில் செய்ய வேண்டுமென விரும்பினேன். இதற்கு காரணம், பெரிய அளவில் திட்டத்தை செயல்படுத்தும் போது, மாநில அரசின் அதிகபட்ச கவனம் இதில் இருக்கும். அடுத்ததாக, ஒட்டுமொத்தமாக சூரியசக்தி பொருட்களை வாங்கும் போது, அதன் விலை குறையும். திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும்போது, இதன் உற்பத்தி செலவு யூனிட் ஒன்றுக்கு, 15 ரூபாயாக இருந்தது. இன்று, இதன் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு, 8 ரூபாய் 50 காசாக குறைந்துள்ளது. நாளை இன்னும் குறையும். மற்ற எரிசக்தி ஆதாரங்களால் உற்பத்தி செய்யப்படும், மின்சாரத்துக்கு ஆகும் கட்டணம் அளவுக்கு, சூரியசக்தி மின்சாரத்தின் கட்டணமும் இருக்கும். மேலும், இதன்மூலம் இந்தியாவுக்கு மிகப் பெரிய பங்களிப்பை குஜராத் செய்துள்ளது. காரணம், மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும்.

முன்னோடி: இத்திட்டம் சாரங்கா கிராமத்துடனோ, குஜராத் மாநிலத்துடனோ, இந்தியாவுடனோ நின்றுவிடப் போவதில்லை. பூகோள அளவில் சுற்றுச்சூழல் நண்பனாக திகழும். எனவே இந்நிகழ்ச்சி உலகளவிலானது. பருவநிலை மாறுதலால் பாதிக்கப்படப் போகிற எதிர்கால சந்ததியினரின் கவலை கவனிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பருவநிலை மாறுதலுக்காக, தனியாக துறை வைத்துள்ள, நான்கு அரசுகளில் குஜராத்தும் ஒன்று. இதற்காக மிக அதிக அளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக குஜராத் திகழ்கிறது. முன்பு, மின் பற்றாக்குறையில் குஜராத்தும் இருந்தது. தற்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் என்ற மிகப் பெரிய தொகையை அரசு செலவிடுகிறது, உலகம் வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் இதுவும் ஒன்று. குஜராத் மாநிலம், பூகம்பம், வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாநிலம். இதுபோன்று மற்ற மாநிலங்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தான் இந்த திட்டம்.

தியாகம்: இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதற்கு காரணம், நாளைய தலைமுறையினருக்காக, இன்றைக்கு நாம் செய்யும் தியாகம். குஜராத்தில், 1,600 கி.மீ., நீள கடலோர பகுதி உள்ளது. இங்கு, 2,884 மெகாவாட் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எங்களது எதிர்கால நோக்கம், கூரைகள் மேல் சூரியசக்தி மின்சார உற்பத்தியை அதிகரிப்பது தான். ஆரியபட்டா ராக்கெட், அக்னி -5 ஏவுகணை போன்று, இந்த சூரியசக்தி மின்சாரமும் உலகத்துக்கு இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும். ஐ.டி., (தகவல் தொழில்நுட்பம்), பி.டி., (உயிரி தொழில்நுட்பம்), இ.டி., (சுற்றுசூழல் தொழில்நுட்பம்) ஆகியவற்றில் குஜராத் கவனம் செலுத்தும். சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் தான் இந்த சூரியசக்தி மின்சாரம். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

லாபம்: மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சவுரவ்பாய் பேசும் போது, “”கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், குஜராத் மின்நிலைமை மிகவும்மோசமாக இருந்தது. மின்வாரியம் ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வந்தது. தற்போது ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் லாபத்தை சம்பாதிக்கிறது. 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான். உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதும் குஜராத் தான்,” என்றார். அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதர் பீட்டர் ஹெயர்ஸ், ஆசிய வளர்ச்சி வங்கி மேலாளர் நாவோகி சகாய் உட்பட பலர் பேசினர்.

ஓராண்டில் 600 மெகாவாட் முடித்து காட்டி சாதனை: சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு அடிக்கல் நாட்டி ஓராண்டில், 600 மெகாவாட் மின்சார உற்பத்தியை துவக்கி காட்டியுள்ளது, குஜராத்தின் நரேந்திர மோடி அரசு. குஜராத் மாநில அரசு, 2009ம் ஆண்டு ஜனவரியில் சூரியசக்தி கொள்கையை வெளியிட்டது. 500 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பது என்று கொள்கை வெளியிட்ட போதிலும், சூரியசக்தி மின்சாரத்தை வாங்கிக் கொள்வதற்காக, 85 தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன், 968.5 மெகாவாட் மின்சாரத்துக்கு, 2010ம் ஆண்டு ஒப்பந்ததம் செய்தது. இதற்காக, சூரிய பூங்காவை உருவாக்கி, அதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த, 2010 டிசம்பர் 30ம் தேதி அடிக்கல் நாட்டினார். அனைத்து நிறுவனங்களும், 2012 ஜனவரிக்குள் திட்டத்தை முடிக்க வேண்டுமென, கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரியில், 605 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் நிறுவப்பட்டது. இந்தியா முழுவதுமே, சூரியசக்தி மின்சார நிறுவு திறன், 200 மெகாவாட்டுக்கும் குறைவாக உள்ள நிலையில், குஜராத் மாநிலம் மட்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை, ஓராண்டில் பெற்றது. இதற்காக, குஜராத் அரசுக்கு, 9,000 கோடி ரூபாய் முதலீடும் கிடைத்துள்ளது. 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சூரியசக்தி மின்சாரம், நாள் ஒன்றுக்கு, 30 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, 10 லட்சம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும். இதன்மூலம், ஆண்டுக்கு, 10 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவது தடுக்கப்படும்.

கட்-அவுட், கட்சி கொடி இல்லாத விழா: முதல்வர் கலந்து கொள்ளும் விழா என்றால், வழியெங்கும் கட்சிக் கொடிகள் பறக்கும். கட்-அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள், வழியெங்கும் ட்யூப் லைட்கள் என, அமர்க்களப்படும். ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்ட, சூரியசக்தி மின்சார உற்பத்தி துவக்க விழாவின் வழியில் கட்-அவுட்களோ, கட்சிக் கொடிகளோ காணப்படவில்லை. விழா நடந்த கிராமத்துக்கு அருகே, ஒன்றிரண்டு தட்டிகள் மட்டும் மோடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்தன. விழா மேடையிலும், மோடியின் சிறிய படம் மட்டும் பேனரில் இடம்பெற்று இருந்தது. நரேந்திர மோடி, தன் பேச்சை ஆங்கிலத்தில் துவக்கி 10 நிமிடம் பேசினார். பின்னர், அரை மணி நேரம் குஜராத்தில், அந்த மக்களுக்கு ஏற்ப பேசி கைத்தட்டு வாங்கினார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s