வாயைப் பிளந்தது காங்கிரஸின் பலம்….

நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம். காமராஜரோடு காங்கிரஸ் கரையறி விட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் தேர்தல் முடிவு மூலம்.

தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட கரெக்டாக சொல்லி விடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வருவார்கள்.

ஆனால் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகி விட்டது தமிழக காங்கிரஸின் நிலை. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்கத் திராணியில்லாத கட்சியாக கிழிந்த வேட்டி போல காட்சி தருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே கூறலாம். காரணம், திமுக அல்லது அதிமுக என யாருடைய முதுகிலாவது ஏறி, ஓசி சவாரி செய்வதுதான் அந்தக் கட்சிக்கு வசதியானதாக இருந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கதர்ச் சட்டை கசங்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பழக்கப்பட்டவர்கள் காங்கிரஸார் (காங்கிரஸார் என்று இங்கு நாம் கூறுவது தலைவர்களை -தொண்டர்களை அல்ல).

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்று கூறிக் கூறியே வேண்டிய சீட்களைப் பெற்று ஓசி பலத்தில் ஊறுகாய் போட்டு வந்தவர்கள் இவர்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுகவிடம், 2ஜி விவகாரத்தைக் காட்டிக் காட்டியே சீட் கறந்த காங்கிரஸின் பிடிவாதப் பேரத்தைப் பார்த்து மாற்றுக் கட்சியினரும் கூட கொந்தளித்துப் போனார்கள். இப்படி நீ சோறு கொடு, நீ குழம்பு கொடு, நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் கதையாக படு சோம்பேறித்தனமாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் இன்று உள்ளாட்சித் தேர்தலில் தலை முதல் பாதம் வரை படு அடியை வாங்கி பம்மிப் போய்க் கிடக்கிறது.

இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம் என்பதைமக்கள் காட்டி விட்டார்கள். பத்து மாநகராட்சிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட 2வது இடத்தைப் பிடிக்கவில்லை. பல இடங்களில் 3வது இடத்தைக் கூடப் பி்டிக்கவில்லை. மொத்தமே 17 கவுன்சிலர்கள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளனர்.

அதை விடக் கேவலமாக கொடிகாத்த குமரனைத் தந்த திருப்பூரில் ஒரு கவுன்சிலர் கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. இது நிஜமான காங்கிரஸாருக்கு பெரும் வேதனை தரும் செய்தியாகும். காங்கிரஸுக்கென்று ஒரு தொண்டர் வட்டம் உள்ள மதுரையிலும் முட்டைதான். சேலத்திலும் ஒன்றும் இல்லை.

அதே போல 125 நகராட்சிகளில் தேர்தல் நடந்த 124 நகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட தலைவர் பதவியைப் பிடிக்கவில்லை காங்கிரஸ். காங்கிரஸின் பாரம்பரியப் பகுதிகளான ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் கூட அந்தக் கட்சியால் தனித்து வெல்ல முடியாமல் போனது கேவலத்திலும் படு கேவலமாகும்.

சரி பேரூராட்சியிலாவது ஏதாவது பெயருமா என்று பார்த்தால் மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி கிடைத்துள்ளது.

இப்படி எங்குமே காங்கிரஸுக்கு சிறப்பு கிடைக்கவில்லை. மாறாக போன இடங்களில் எல்லாம் மக்களிடமிருந்து பட்டை நாமம்தான் கிடைத்துள்ளது.

வாழ்ந்தால் வாழை மரம் போல வாழ வேண்டும் என்பார்கள். வாழை மரத்தில்தான் அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். ஆனால் காங்கிரஸோ, பார்த்தீனியம் செடி போலத்தான் இத்தனை நாளாக இருந்துள்ளது. அதாவது மற்ற கட்சிகளின் பலத்தைப் பெற்று இது வாழ்ந்து வந்துள்ளது. இந்த கட்சியால் எந்தக் கட்சிக்கும் உண்மையில் லாபம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கூட காங்கிரஸார் உண்மையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதை காங்கிரஸாரே ஒத்துக் கொள்வார்கள்.

இந்தத் தேர்தலின் மூ்லம் திராவிடக் கட்சிகளான திமுகவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி கிடைத்துள்ள முக்கியப் பாடம் என்னவென்றால் -இத்தனை காலமாக, அடிப்படையே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடம் கொடுத்து வி்ட்டோம் என்பதுதான்.

தமிழர்கள் பாடுபட்டபோதெல்லாம், பரிதவித்த போதெல்லாம், துடித்து துவண்டபோதெல்லாம், உயிரை இழந்து உருக்குலைந்து போனபோதெல்லாம் உதவாமல் போனதுதான் காங்கிரஸின் கை. தமிழகத்திலும் கூட தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் காங்கிரஸ் உதவிக்கு வந்ததில்லை. மாறாக தமிழகத்தின் பிரச்சினைகளிலெல்லாம் நழுவிப் போனது அல்லது இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது.

தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினையாகட்டும், வேறு எந்தப் பிரச்சினையாகட்டும் காங்கிரஸ் உதவியது என்பது வரலாற்றிலேயே கிடையாது. கூட்டணி சேர வேண்டும், கூட்டாஞ்சோறு ஆக்கி நாம் மட்டும் நாம் மட்டும் நன்றாக சாப்பிட வேண்டும். இதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

இந்தப் படு தோல்வி இப்படியே நின்று விடக் கூடாது. பொறுப்பான, தமிழகத்திற்கு உதவக் கூடிய தமிழர்களுக்கு உறுதுணையான உண்மையான அரசியல் கட்சியாக காங்கிரஸ் மீண்டும் மாறும் வரை மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

இதுதாம்ப்பா காங்கிரஸ் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருந்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s