நான் நம்பினேன்.. அது நடந்துவிட்டது….

இந்த ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன எடை போட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் தெரிந்துகொள்ள திருச்சி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் அமையும் என்று நான் உறுதிபட நம்பினேன். என்னுடைய நம்பிக்கை மெய்ப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மேற்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் அளித்த ஆதரவான தீர்ப்புகளுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது தலைமையில் நடந்து வரும் எம்.ஜி.ஆர். ஆட்சியை பற்றி மக்களின் மனநிலையை, இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உலகம் அறிந்து கொள்ளும் என நம்பி இருந்தேன். என் நம்பிக்கை மெய்யானது.

தமிழக மக்கள் அளித்த மகத்தான தீர்ப்புக்கு, மிகுந்த மனநெகிழ்ச்சியோடு, அன்புப்பெருக்கோடு மீண்டும் மீண்டும் நன்றி கூறி கொள்கிறேன். பொருளாதார பற்றாக்குறைகள், நிர்வாக சீர்கேடுகள், கடன் சுமைகள் என எண்ணற்ற இடர்பாடுகளின் இடையே தத்தளித்து கொண்டிருந்த தமிழக அரசை கடந்த 5 மாதங்களுக்கு முன் என்னிடம் அளித்தீர்கள்.

ஆனால் இந்த குறுகிய காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நடைமுறைப்படுத்தி உள்ளோம். இதன்மூலம் மக்கள் ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து உள்ளது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது. இந்த குறுகிய காலத்தில் எனது பணிகளை பாராட்டி, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் அளித்துள்ளீர்கள்.

கடந்த பொதுத் தேர்தலிலும், திருச்சி மேற்கு தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 322 வாக்குகள், அதாவது, 74.93 சதவீத வாக்குகள் பதிவாயின. இதில், அ.தி.மு.க. 77,492 ஓட்டுகள் பெற்று, 7,179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே தொகுதியில் தற்போது நடந்த இடைத்தேர்தலில், 1,27,433 வாக்குகள், அதாவது 61.15 சதவீத வாக்குகள் பதிவாயின. இதில் அ.தி.மு.க. 69,029 வாக்குகள் பெற்று, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த முறை கூட்டணி கட்சிகள் இல்லாத நிலையிலும், கடந்த முறையை காட்டிலும் இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்து உள்ளீர்கள். எனது ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் நற்சான்றிதழாக இதை கருதுகிறேன்.

இந்த மகத்தான வெற்றியை தொடர்ந்து, மக்கள் நலப் பணிகளில் தொடர்ந்து தொய்வின்றி, துடிப்போடு எனது உழைப்பை செலுத்துவேன் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட அமைச்சர்களுக்கும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளிலும், அதிமுக வேட்பாளர்களே வெற்றிப் பெற்றுள்ளனர். நகரமன்றத் தலைவர் தேர்தலில் அதிமுக 88 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 284 இடங்களில் அதிமுக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சி சின்னம் இல்லாமல் போட்டியிட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளிலும், அதிமுக பெருவாரியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது..

உள்ளாட்சி மன்றங்களே ஜனநாயகத்தின் தொடக்கப் பள்ளி ஆகும். வலுவான உள்ளாட்சி அமைப்புகள், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், அரசின் திட்டங்களை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அவசியமாக உள்ளது. இந்த கருத்தை ஏற்று, அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் மாபெரும் வெற்றியை அளித்துள்ளீர்கள்.

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றிக்காக பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற கழக வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

நல்ல ஆட்சி, நல்ல நிர்வாகம் வழியாக வளமான தமிழகம் காண்போம்! மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்! இதுவே இந்தத் தருணத்தில் நான் உங்களுக்கு உறுதி கூறுகின்ற நல்ல செய்தியாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s