வெளுக்கும் சாய முகங்கள்…….

“பொங்கு தமிழர்க் கின்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு’ என்ற ரீதியில், தமிழகத்தில், சில வருடங்களாக, “நான் தமிழன்; தமிழினத்திற்கு எதிரான துரோகம் இது; என் இனம் அழிகிறது; இதை எதிர்ப்பவன் தமிழனேயல்ல…’ என, “தமிழன்’ என்ற வார்த்தை, பரவலாக முன் நிறுத்தப்படுகிறது. இந்த வார்த்தைகள் எல்லாம், “தமிழ் இனத் தலைவர்’களாக, தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலரது வாயிலிருந்து உதிரும் முத்துகள். நரம்புகள் புடைக்க, உணர்ச்சிப் பீறிட, இவர்கள் வாயிலிருந்து வார்த்தைகள் கொந்தளிப்பதைப் பார்த்தால், இவர்களைத் தவிர, மற்றவர்கள் யாருமே தமிழர்கள் இல்லையா என்று சந்தேகம் வருவதில் வியப்பில்லை; கையைக் கிள்ளிப் பார்த்து, சந்தேகம் தீர்ந்து, தமிழன் தான் என்பதை உறுதி செய்த பின், எப்படித் தான் இருக்கின்றனர் நம் தொப்புள்கொடி உறவுகள் என்று கண்டறிய, நாம் சென்ற இடம், கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர்கள் முகாம்…

அங்கு சென்ற பின்தான் தெரிந்தது, எம் இனமானத் தலைவர்கள் அனைவருமே, “வெறுங்கையில் முழம்’ போட்டுக் கொண்டிருப்பது! தங்கள் “இனத்தைக்’ காக்கவே அவதரித்த அவதார புருஷர்கள் போலவும், தியாகிகள் போலவும், மாயையை ஏற்படுத்தியுள்ள இவர்கள், நம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள, நம்மை நம்பி வந்துள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக, ஒரு செங்கல்லைக் கூட நகற்றி வைக்காமல், வாய்ஜாலத்திலேயே தங்கள் அரசியல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் குட்டு வெளிப்பட்டது.

திறந்தவெளி முகாமிற்குள் நுழைந்ததுமே, ஏதோ, சேரி ஒன்றுக்குள் சென்றது போன்ற உணர்வு. இப்ப விழுமோ… எப்ப விழுமோ… என்ற ரீதியில், இது வீடல்ல; வீடு மாதிரி என எண்ணும் வகையில், தோற்றமளிக்கும் வீடுகளும், வீட்டிற்கு வெளியே, ஆறு போல் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருக்கும் கழிவுநீரும், தார் சாலையையோ, சிமென்ட் சாலையையோ, இதுவரை நாங்கள் கண்டதேயில்லை என, சத்தியம் செய்யும் மண் தரையும், பொதுக் கழிப்பிடம் போன்று காட்சியளிக்கும் கழிவறைகளும்… சொந்த மண்ணில், விவசாயமும், மீன்பிடிப்பும், வர்த்தகமும் செய்து, வளமாக வாழ்ந்தவர்கள் தான், இங்கே, இப்படிப்பட்ட சூழலில்! அந்தோ பரிதாபம்!

அங்கே நின்று கொண்டிருந்த சிலருக்கு மத்தியில் சென்று, கேள்விக் கணைகள் தொடுத்ததை வைத்தே, பத்திரிகை சம்பந்தப்பட்டவர் என்பதை புரிந்த கொண்ட சிலர் ” பிரச்னைகள் பல இருக்கு; சொல்றோம்… தயவு செய்து, பேரை மட்டும் எழுதிராதீங்க… அப்புறம் எங்க கதி அதோ கதிதான்… பிரச்னையை சொல்லக் கூட உரிமையில்லை… ‘ என, யாராவது தங்களை கவனிக்கின்றனரா என்ற பயத்துடனேயே, தங்கள் ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தனர்.
புலம் பெயர்ந்து, பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், தாயக மண்ணை பிரிந்து நிற்பதால் ஏற்பட்டுள்ள வலியை, ஒவ்வொருவரின் முகத்திலும், பேச்சிலும் காண முடிந்தது.

“சல்லடை போல வீடுகள்… அரசாங்கம் ஏதும் உதவி செய்யவில்லையா?’ எனக் கேட்டதற்கு, “”இலங்கை முள்வேலி முகாம்களுக்குள், எம் மக்கள் சந்தித்த துயரங்களைச் சொல்ல வார்த்தைகளில்லை; அதை ஒப்பிட்டுப் பார்க்கையில், இது பரவாயில்லை; குறை சொல்ல ஒன்றுமில்லை,” என்று, அந்த 60 வயது நபர் கண்கலங்க, தழுதழுத்தார்.
அவர் மனைவியோ, “மளமள’ வென கொட்டித் தீர்த்தார்.”” 20 வருஷத்துக்கு, 200 ரூபாய் வீட்டு பராமரிப்புக்காக கொடுத்திருக்காங்க… அத வச்சு நாங்க என்ன செய்றது? எங்களால கட்ட முடிஞ்ச அளவுக்கு கட்டலாம்னு பார்த்தா… இருக்கிறத இடிச்சிட்டு புதுசா கட்டப்போறதா சொல்லிக்கிட்டேயிருக்காங்க… அங்க இங்க காசு புரட்டி, இத சீர் செய்த பிறகு, அப்புறம் இடிச்சுட்டாங்கன்னா, வீடும் இல்லாம, காசும் வீணாகி வெறுங்கையாகிடுவோமேங்கிற பயத்திலதான் சும்மா இருக்கோம்…” என்று, அவரது மனைவி சொன்னார்.

அருகில் நின்றிருந்த மற்றொரு பெண்,””அதுமட்டுமில்லங்க… 1992ம் ஆண்டு, எங்களை கட்டாயப்படுத்தி, இலங்கைக்கு அனுப்பி வைச்சாங்க. அதப் போல, எப்ப வேணும்னாலும் திரும்ப நடக்கலாம்ங்கிற பயம் உள்ளூர இருந்துகிட்டே இருக்கு… இங்க நாங்க இருக்கிறது நிலையில்ல… நாடோடி மாதிரித்தான் வாழ்ந்துட்டு இருக்கிறோம். இப்படி இருக்கிறதே நிலையில்லாமைங்கிற சூழல்ல, வீடு என்ன வீடு? ஏதோ இருக்கிறதை, “அட்ஜஸ்ட்’ செய்துட்டு வாழ வேண்டியதுதான். அதான், கட்டாம, பயத்தோடயே வாழ்ந்துட்டிருக்கோம்,” என்றார்.

நாடோடி வாழ்க்கை கொடுத்த வலியும், வேதனையும், அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்டது. நம்முடைய சொர்க்கமான சொந்த பூமி வாழ்க்கை, ஒரு நிமிடம் மனக்கண்ணில் நிழலாடிச் சென்றது. “நீங்க இங்க மகிழ்ச்சியாக இல்லையா?’ என்றதற்கு, “”முள்வேலி முகாமிற்குள் அவர்கள் இருக்க, நாங்கள் இங்கே இருப்பது வேலி இல்லாத முள்ளிற்குள்… என்ன வசதி இருந்தாலும், இங்கே நாங்கள் அகதிகள் தானே! எம் தாய்நாடு திரும்பும் நன்னாளுக்காக காத்திருக்கிறேன்… எம் மண்ணில் உயிர்விடவே விரும்புகிறேன்,”என்று, அழகான தமிழில் அந்த முதியவர் கூறிக் கொண்டிருந்த போதே, அவர் கண்களில் பெருகிய கண்ணீர், மனதில் கனத்தைத் தந்தது.
“இங்கு இருப்பதில், உங்களுக்கு விருப்பமில்லையா?’ என்றதற்கு, அருகில் நின்ற பட்டதாரி பெண், “”அவர் மாதிரி சிலர், தாயகத்திற்கு செல்ல விரும்புகின்றனர். இப்படி ஆசப்படுறவங்கள திரும்ப அனுப்பட்டும்; ஆனா, நாங்க, இங்க வாழத்தான் ஆசப்படுறோம்… ஆனா, அகதியா இருக்கிறதால, நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பலப்பல,” என்றார்.

மேலும் அவர், “”எங்க வீட்டுப் பிள்ளைங்க டிகிரி படிச்சாக் கூட, யாருமே வேலை தரமாட்டேங்கிறாங்க; கூலி வேலைக்குத் தான் போக வேண்டியிருக்கு… எங்க மேல நம்பிக்கை இல்லாதது தான் காரணம்; அது ரொம்பவே வருத்தமா இருக்கு. எங்கள் மீது நம்பிக்கை வர, எங்களுக்கு குடியுரிமை கொடுக்கணும். அப்படி குடியுரிமை கொடுக்கிறது, சுலபமானது இல்லதான்… ஆனா, தமிழக மக்கள் நம்ம தொப்புள் கொடி உறவு, சகோதர சகோதரிகள், உடன்பிறப்புங்கிற நம்பிக்கையிலதான நாங்க இங்க வந்து இருக்கோம்… இங்க இருக்கிறவங்களே எங்களுக்கு உதவலேன்னா, நாங்க, வேற யார்கிட்ட போய் கேட்க முடியும்? அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலுமா?” என்றார் தீர்க்கமாக.

வாழ்வாதாரம் பற்றி கேட்டதற்கு, “”தங்க இடம், கரன்ட், குடிநீர்ன்னு, எல்லாமே இலவசம் தான். பத்தாதக் குறைக்கு, வீட்டுத்தலைவருக்கு மாதம், 400 ரூபாய், 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு, 288 ரூபாய், 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, 180 ரூபாய்ன்னு உதவித்தொகை தராங்க.
இந்த காசு கைக்கு வந்ததுமே, ஆம்பிளைங்க, அடுத்த இரண்டு நாளைக்கு வேலைக்கு போகாம, குடிச்சு வீணாப் போறாங்க… இப்படி இலவசமாக கொடுக்கிறதுக்கு பதில், வேலை வாய்ப்புக்கு வழி செய்யலாம். குறைந்தபட்சம் அரசாங்க வேலையிலாவது, இட ஒதுக்கீடு வழங்கலாம்,” என, அவர் தொடர்ந்து கொண்டிருந்த போதே, “”இங்க நல்ல வசதியா உள்ளவங்களும் இருக்காங்க; ரொம்ப ஏழ்மையா உள்ளவங்களும் இருக்காங்க.
ஒரு வீட்டுல நாலு ஆம்பிளைங்க இருந்தா, எல்லாரும் சம்பாதிச்சு, வசதி இருக்கும். ஆனா, இரண்டு பெண் குழந்தைங்க இருந்தா, அரசு தொகையை வச்சுத் தான் பொழப்பு நடத்த வேண்டியிருக்கு… ரொம்ப ஏழ்மையா இருப்பவர்களுக்கு, குறைந்தபட்சம், வீட்டையாவது சரிபண்ணி கொடுக்கலாமே…” என்று, ஏக்கப் பெருமூச்சுவிட்டார், இன்னொரு பெண்; இவர், கணவரை இழந்தவர்.

“சிலர், 1990ம் ஆண்டு முதலே இங்க இருக்கீங்க. உங்களோட குறைய யார்க்கிட்டயுமே ஏன் சொல்லவில்லை?’ என்றதற்கு,””19 வருஷமா இங்க இருக்கேன்… குறிப்பிட்டு சொல்லும் படியா, இங்க யாருமே வந்ததில்லை… பத்திரிகைகாரங்களத் தவிர! இலங்கையில இருக்குற எங்க உறவுக்காரங்களுக்காக, நிறைய பேர் குரல் கொடுக்கிறாங்க… பழ. நெடுமாறன், வைகோ, திருமாவளவன், கொளத்தூர் மணி, சீமான்… அப்படின்னு பட்டியல் நீளமாகிட்டே போகுது. ஆனா, அவங்கெல்லாம், கடல் தாண்டி உள்ள எங்கள் உறவுகளுக்காக, மேடையில மைக்கை பிடிச்சு, எதுகை மோனையோட பேசுறாங்க… ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மனிதச் சங்கிலி அப்படி இப்படின்னு, பலதரப்பட்ட போராட்டங்களையும் செய்றாங்க. இப்படி பேசுறவங்கள்ளல்ல, யாருமே, எங்க முகாமுக்கு வந்ததுமில்ல; எங்க குறையென்னன்னு கேட்டதுமில்லே. கேட்டாதானே, அதை நிவர்த்தி செய்ய…?” என்று, குமுறியவர், தொடர்ந்து, “”அட! ஓட்டிருந்தாதானே வருவாங்க… எங்கள மாதிரி தஞ்சம் புகுந்தவங்களால, அவங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்ல; ஆனா, எங்க உறவுக்காரங்க (ஈழத் தமிழர்கள்) பெயரைச் சொல்லியே ஓட்டு வாங்கிடறாங்க,” என்றார், தீராத வெறுப்புடன்.

வாழ்க்கைப் பிரச்னைகளை விட, குறைகளைக் கேட்கக் கூட நாதியில்லாத நிலை நமக்கு ஏற்பட்டு விட்டதே என்ற கவலை தான், புலம்பெயர்ந்த மக்களிடையே மேலோங்கி நிற்கிறது. “”சில நேரங்களில், விசாரணை என்ற பெயரில் இங்கிருப்பவர்கள் படுத்தும் பாட்டுக்கு நாங்கள் போரிலேயே செத்துப் போயிருக்கலாமே என்று எண்ணத் தோன்றும். என்ன இருந்தாலும், அந்நிய மண்தானே?” என, அடுத்தவர் தொடங்க, அதற்கு மேலும் அங்கு நிற்க திராணியில்லாமல், கண்ணில் பெருகிய நீரோடும், வேதனை தந்த கனத்தோடும் அங்கிருந்து வெளியேறினோம்.
உண்மைதானே! இவர்களை, இன்னும் நாம், அந்நியர்களாகத் தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான அன்பு இருந்தால், “அகதிகள் முகாம்’ என்று அழைப்போமா?
இவர்களை நினைத்து, வருத்தப்படவோ, கண்ணீர் வடிக்கவோ, தமிழ் உணர்வு தேவையில்லை; மனிதாபிமானமே போதுமானது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக போராடி வரும் தமிழினத் தலைவர்களுக்கு, இவர்கள் நினைப்பு மட்டும் வராதது ஏனோ? இதிலும் அரசியல் செய்வோரை எண்ணும் போது, பாரதியின் குரல் செவியில் ஓங்கி அறைந்தது…

“நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி – கிளியே
வாய்சொல்லில் வீரரடி…’

ஒரு மாதத்துக்கு, ஒண்ணு தான்! : ஒவ்வொரு மாதமும் முகாமில் வசிப்பவர்களுக்கு, 75 ரூபாய் மானிய விலையில், ஒரு கிலோ உளுந்து, ஒரு கிலோ சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இது, முகாமில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோருக்கு கிடைப்பதில்லை. “ஸ்டாக் இல்லை’ என்று அதிகாரிகளிடமிருந்து பதில் வருகிறது.

கழிப்பிடமும், கட்டாந்தரையும் ஒன்றே! : கடந்த 2010ம் ஆண்டு, 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கழிப்பிடம், தெரு விளக்குகள், கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. கழிப்பிட வசதிகள் அமைத்தும், அவை, பராமரிப்பு இல்லாத காரணத்தால், மக்களின் சுகாதாரத்தை சீர்குலைத்து வருகிறது.

புதிதாகவருபவர்கள்முகாமில் எப்படி சேர்க்கப்படுகின்றனர்? : சென்னையில் உள்ள தூதரகத்தில், பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை காண்பித்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, ராமேஸ்வரம் மண்டபம் முகாமிற்கு சென்று, அங்கு பதிவு செய்து கொண்டு, தமிழகத்தில் உள்ள 113 முகாம்களில், எங்கு வேண்டுமானாலும் வசித்துக் கொள்ளலாம். 1990ம் ஆண்டுக்குப் பிறகு வருபவர்கள், ஏற்கனவே தங்களது உறவினர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கே செல்கின்றனர். இலங்கை போர் முடிவுக்கு வந்த பிறகு, கும்மிடிப்பூண்டி முகாமிற்கு புதியதாக யாரும் வரவில்லை. போருக்கு பிறகு, சிலர் தாயகம் திரும்பியுள்ளனர்.

கவனிக்குமா தமிழக அரசு? : கேட்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதும், திரும்ப இலங்கைக்கு அனுப்புவதும் அரசு எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், “வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள்’ எனப் பெயரெடுத்த நாம், அவர்கள் இங்கு இருக்கும் வரை, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கலாமே!

இந்த நிபந்தைகளும் உண்டு : மாதத்திற்கு ஒரு முறை அரசு அதிகாரிகள் கணக்கெடுக்கும் போது, கண்டிப்பாக முகாமில் இருக்கவேண்டும்.
முகாமில் உள்ளவர்களை காண வரும் உறவினர் மற்றும் நண்பர்கள், அனுமதி பெற்றுத் தான் பார்க்க வேண்டும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முகாம்களில் தங்க அனுமதியில்லை.
முகாமில் உள்ளவர்கள், உறவினர்களை காண வெளியில் செல்லும் போது, வருவாய் அலுவலரின் அனுமதி பெற்றுத் தான் செல்லவேண்டும்.
அனுமதி பெறாமல் வெளியில் சென்று, அதிகாரிகளின் ஆய்வின் போது அது தெரியவந்தால், அவர்களது பதிவு நீக்கப்படுவதோடு, அரசின் சலுகையும் ரத்து செய்யப்படும்.
முகாமிற்கு வெளியில் படிக்கும் பள்ளி குழந்தைகள், அவர்கள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்ற விவரத்தை தெரிவிக்கவேண்டும்.
தமிழகம் தவிர்த்து, மற்ற மாநிலங்களில் படித்தால், அவர்களுக்கு எவ்வித சலுகையும் கிடையாது.

சாக்கடையே நடைபாதையில்… : கழிவு நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களில், அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர், மண் தரையில்(நடை பாதை) ஓடுகிறது. மழைக்காலங்களில், மழைநீரும், கழிவுநீரும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளே புகுகிறது. குடிநீருடன் கழிவுநீர் கலந்து குடிநீரும் பாழாகி வருகிறது. திறந்த வெளியில் கழிவுநீர் செல்வதால், கொசுக்கள் உற்பத்திக்கு பஞ்சமில்லை.

சொர்க்கமான கும்மிடிப்பூண்டி முகாம் : “”நான், நான்குக்கும் மேற்பட்ட முகாம்களுக்கு சென்றிருக்கிறேன். அதில், மிகப்பெரியது இதுதான். வசதியானதும் இதுதான். கோவை, திருச்சி போன்றவைகளில், இங்குள்ள சுதந்திரமும் கிடையாது. வசதியும் கிடையாது. அங்கெல்லாம் இடநெருக்கடி அதிகம். கும்மிடிப்பூண்டி முகாம் எங்களுக்கு சொர்க்கலோகம், ” என, பல முகாம்களில் தங்கி, “அனுபவம்’ பெற்ற ஒரு பெண் கூறிய போது, சகதிகளுக்கிடையே நின்றிருந்த நமக்கு தலை கிறுகிறுத்தது. சொர்க்கமே இப்படி என்றால், மற்றவை?

மண் சுவரும், ஓலைக் கூரையும்! : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில், 1990ம் ஆண்டு முதல், இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. 1,509 குடும்பங்களில், 3,627 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 113 முகாம்களிலேயே, அதிக மக்கள் தொகை கொண்டது இந்த முகாம் தான். அரசு சார்பில், 1990ம் ஆண்டு, மண் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட, ஓலைக் கூரை வேய்ந்த வீடுகள் கட்டித் தரப்பட்டன. அவை, சில ஆண்டுகளிலேயே, பழுதடைந்தன. சிலர், சொந்த செலவில், வீடுகளை புதுப்பித்துக் கொண்டனர். மற்றவர்கள் ஓலைக்குடிசையில், வாழ்ந்து வருகின்றனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s