பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் 30 கிலோ தங்கம்

சுரங்கத் தொழிலில் ராஜாவாக கொடிகட்டிப் பறந்த, ரெட்டி சகோதரர்களில் ஒருவரான, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, மற்றும் ஓபலாபுரம் சுரங்க நிறுவன மேனேஜிங் டைரக்டர் சீனிவாச ரெட்டி ஆகியோரது வீடுகளில் , நேற்று அதிகாலை, சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்திய, “ருக்மினி’ ஹெலிகாப்டர், நான்கரை கோடி ரொக்கப் பணம், 30 கிலோ தங்கத்தையும் கைப்பற்றினர். பின், இருவரையும் உடனடியாக சி.பி.ஐ., கைது செய்தது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் ஓபலாபுரத்தில், சுரங்க நிறுவனங்கள் வைத்து நடத்தி வருபவர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி. இதில், ஜனார்த்தன ரெட்டிக்கு அதிகப் பங்கு உள்ளது.இவர்கள், சட்டவிரோதமாக சுரங்க நிறுவனங்கள் நடத்துவதாகவும், அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு சுரங்க கனிமவளங்களை அனுப்புவதாகவும், வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.ஆந்திராவில் முதல்வராக இருந்த ராஜசேகரரெட்டி, ஜனார்த்தன ரெட்டியுடன் நெருக்கமாக இருந்ததால், இவர்களது நிறுவனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்த பின், ரோசய்யா முதல்வரானார். அவர், இந்த புகார்களை விசாரணை செய்ய, சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கினார்.சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் தொடந்த வழக்கின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட், “மத்திய அதிகாரக் குழு’ (சி.இ.சி.,)யை அமைத்தது. இக்குழு விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையில், ஓபலாபுரம் சுரங்க நிறுவனம், சட்டவிரோதமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம், ஆந்திர சி.பி.ஐ., கோர்ட், ஜனார்த்தன ரெட்டி, ஓபலாபுரம் சுரங்க நிறுவன மேனேஜிங் டைரக்டர் சீனிவாச ரெட்டி ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது.நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, சி.பி.ஐ., டி.ஐ.ஜி., வெங்கட் நாராயணன் தலைமையில், 10 பேர் கொண்ட குழு, அதிரடியாக ஒரே நேரத்தில் பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டி வீடு, சீனிவாச ரெட்டி வீடு, பெங்களூரில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின், “பாரிஜாதா’ வீடு ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனைநடந்து கொண்டிருந்தபோதே, பெல்லாரியிலிருந்த ஜனார்த்தன ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்தும், “ருக்மினி’ என்ற ஹெலிகாப்டர், மொபைல் போன் ஆகியவற்றையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர்.பின், அவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை செய்ததில், நான்கரை கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும், 30 கிலோ தங்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், பெங்களூரு வீட்டில் நடந்த சோதனையில், ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்தி வந்த லேப்-டாப், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். வீட்டிலுள்ள ரகசிய அறை ஒன்று வித்தியாசமாகக் காணப்பட்டது. இதேபோன்று, ஐதராபாத்திலுள்ள வீடுகள், கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலுவுக்குச் சொந்தமான வீடுகளிலும் சோதனையிட்டனர். பகல் முழுவதும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், ஐதராபாத் சி.பி.ஐ., அலுவலகத்துக்கு, கார் மூலம் மதியம் 1.30 மணிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இருவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பெல்லாரியில், ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பெல்லாரியில், பதட்டம் நிலவுகிறது.

சுரங்க ஊழல் குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தாக்கல் செய்த அறிக்கையில், கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது.பெல்லாரியிலுள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீடு, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாலும் கூட, வெளியில் தெரியாத அளவுக்கு காம்பவுண்ட் சுவர் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டி பயன்படுத்தி வரும் மொபைல் எண், யாருக்கும் தெரியாத அளவில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மொபைல் எண்ணையும் மாற்றி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

14 நாள் காவல்: கைது செய்யப்பட்ட இருவரும், ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று மாலை 4.20 மணிக்கு ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரிடமும் மேலும் விசாரணை நடத்த, 14 நாள் அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ., தரப்பில் கோரினர்.ஜனார்த்தன ரெட்டி தரப்பில், அவர் மீது எந்த தவறு இல்லை. இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் சூழ்நிலையில், அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும், என்று கேட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஜனார்த்தன ரெட்டி, சீனிவாச ரெட்டியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின், விசாரணையை 7ம் தேதி க்கு (நாளை) ஒத்தி வைத்து, நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, ஜனார்த்தன ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோர், ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஜென்செல்குட்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும், ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பயன்படுத்தி வந்த இரண்டு சொகுசு கார்கள், பஸ் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சீனிவாச ரெட்டியும், இரண்டாவது குற்றவாளியாக ஜனார்த்தன ரெட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் இதுதான் கதி: மொய்லி:

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி குறிப்பிடுகையில், “தேசிய சொத்தான இரும்புத் தாதுவை, ரெட்டி முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். மாநில அரசின் தாமதத்தால் தான் ரெட்டி சகோதரர்கள் மீது தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா அரசு, நிர்வாகத்தை மோசமாக பயன்படுத்தியுள்ளது. அவரும், அவரது அமைச்சர்களும் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தினர். உயர் பதவியில் உள்ளவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால், ஜனார்த்தன ரெட்டிக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும், என்பது பாடமாக அமைந்துள்ளது. எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த பதவியை வகிப்பவர்களாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.

காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி குறிப்பிடுகையில், “பெல்லாரி சகோதரர்களை பற்றிய சங்கதி எல்லாருக்கும் தெரிந்தது தான். சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக பா.ஜ., கூறுவதில் உண்மையில்லை. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்தால் பா.ஜ., இந்த கருத்தை கூறும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். சி.பி.ஐ.,யை பற்றி எந்த சான்றிதழும் தேவையில்லை’ என்றார்.

சட்டம் கடமையை செய்கிறது- காங்.,; கட்சிக்கு சம்பந்தம் இல்லை- பா.ஜ., :

மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா, இது குறித்து குறிப்பிடுகையில், “சி.பி.ஐ., விவகாரத்தில் அரசு தலையிட முடியாது. ஜனார்த்தன ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி கைது விஷயத்தில், சட்டம் அதன் கடமையைச் செய்கிறது. சி.பி.ஐ., தற்போது விசாரணை நடத்தி வருகிறது. நாம் சி.பி.ஐ., மீது நம்பிக்கை வைத்துத் தான் ஆக வேண்டும்’ என்றார்.

பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான தனஞ்ஜெயகுமார் குறிப்பிடுகையில், “ரெட்டி சகோதரர்கள் சுரங்கத் தொழிலில் விதிமுறையை மீறவில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பார்கள். சி.பி.ஐ., சிலர் மீது சந்தேகப்பட்டால், அவர்களைக் கைது செய்து விசாரிப்பது நடைமுறையில் உள்ளது.ஆந்திர ஐகோர்ட்டின் உத்தரவின்படி, சி.பி.ஐ., இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது. ரெட்டி சகோதரர்கள் நடத்திய வர்த்தகத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்றார்.

எந்த தொடர்பும் இல்லை: சுஷ்மா: லோக்சபாவில், சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகையில், “என் மீது எந்தவிதமான ஊழல் புகார் இருந்தாலும் அதை எதிர்க்கட்சித் தலைவர் விசாரிக்கலாம்’ என்றார்.கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். “அவர் நடத்திய சுரங்கத் தொழிலில், பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜுக்கும் தொடர்பு உண்டு’ என, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் கோபமடைந்த சுஷ்மா சுவராஜ் குறிப்பிடுகையில், “ரெட்டி சகோதரர்கள் நடத்தும் வர்த்தகத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பாக எந்த விசாரணையை வேண்டுமானாலும் சந்திக்க தயார். பிரதமர் மன்மோகனே நேரடியாக விசாரித்தாலும் சரி. இந்த குற்றச்சாட்டை கூறிய திக்விஜய் சிங் தலைமையிலான குழுவே விசாரித்தாலும் சரி, அதை நான் ஏற்க தயார். நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கவும் தயார்.எனவே, திக்விஜய் சிங் தலைமையிலான விசாரணை குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்து, என்னை விசாரிக்க செய்ய வேண்டும். அப்போது தான், திக்விஜய் சிங் திருப்தியடைவார். ரெட்டி சகோதரர்களுடன் அப்போதும் சரி, இப்போதும் சரி எந்த வர்த்தக தொடர்பும் இருந்ததே கிடையாது’ என்றார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s