உண்ணாவிரதம் முடித்த அன்னா ஹசாரே அறிவிப்பு:அடுத்து என்ன?

ஊழலுக்கு எதிராக, வரலாறு படைத்த காந்தியவாதி அன்னா ஹசாரேயின், 12 நாள் உண்ணாவிரதம், “வந்தே மாதரம், பாரத் மாதாவுக்கு ஜே’ என்ற உரத்த கோஷங்களுக்கு இடையே, நேற்று காலை, 10.20 மணிக்கு, டில்லி ராம்லீலா மைதானத்தில் முடிந்தது. “அடுத்ததாக, தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக போராடுவேன்’ என, அன்னா ஹசாரே கூறினார். மேலும் ஒரு மாத காலத்தில், பார்லிமென்டின் விசேஷ கூட்டத் தொடர் கூட்டப்பட்டு, பலமான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்றும், ஹசாரே குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

பார்லிமென்டில், பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த, 12 நாட்களாக, காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமானால், மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, ஹசாரே வலியுறுத்தினார். “அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிகளை நிறைவேற்றுவதற்கு, காலவரையறை நிர்ணயிக்க வேண்டும்’ என்ற, அந்த மூன்று கோரிக்கைகளையும், அரசு ஏற்றுக் கொண்டது.

இது தொடர்பாக, நேற்று முன்தினம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மூலம், அன்னா ஹசாரேக்கு கொடுத்தனுப்பினார். இதைத் தொடர்ந்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள, அன்னா ஹசாரே முடிவு செய்தார்.இதன்படி, நேற்று காலை, சிம்ரன், இக்ரா என்ற இரு சிறுமிகள், தேன் கலந்த இளநீரை, கோப்பையில் கொடுக்க, அன்னா ஹசாரே மகிழ்ச்சியுடன் அதை குடித்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

இதன்பின், தன் ஆதரவாளர்களிடையே அன்னா ஹசாரே பேசியதாவது:நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்ற, பார்லிமென்டிற்கும், அதன் உறுப்பினர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பார்லிமென்ட் ஒரு அமைப்பு என்பதை நான் மதிக்கிறேன். ஆனால், பார்லிமென்டை விட, அதை தேர்ந்தெடுக்கும் மக்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதை, அரசியல்வாதிகள் உணர வேண்டும்.டில்லி போன்ற நகரங்களில் அதிகார குவியல் இருப்பதே, ஊழலுக்கு முக்கிய காரணம்.

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். லோக்சபா, ராஜ்யசபாவுக்கு இணையான அதிகாரங்களை, கிராம சபைகளுக்கு வழங்க முன்வர வேண்டும்.இந்தியாவில் ஏழை, பணக்காரர்கள் இடையே, பொருளாதார வேற்றுமைகள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். தேர்தல் முறைகளில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மக்களுக்கு பணி புரியாத எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மக்கள் இதற்காக ஐந்தாண்டுகள் காத்திருக்க முடியாது.

சில மேல்நாடுகளில் இருப்பது போல், “ரைட் டு ரீ கால்’ என்ற சரத்து, தேர்தல் சட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும்.நாங்கள் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை என்ற உரிமையையும், ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்க, ஓட்டுச் சீட்டில் ஒரு இடம் ஒதுக்க வேண்டும். எந்த வேட்பாளர்களையும் விரும்பாத வாக்காளர் அதிகமாக இருந்தால், அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்துவிட்டு, மறு தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் நல்ல எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் உருவாக்க வாய்ப்பு ஏற்படும்.கல்விக் கூடங்கள் வியாபார மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதில் மாறுதல்கள் கொண்டு வர வேண்டும். குடி தண்ணீர், பெட்ரோல், மின்சாரம், நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்.

இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்தில், இந்த வளங்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. நமது சந்ததியினர் எவ்வாறு இந்நிலைமையை சமாளிப்பர் என்ற சிந்தனை நமக்கு வர வேண்டும். விவசாயிகளின் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.வெள்ளைக் குல்லாவை அணிந்தால் மட்டும் காந்தியடிகள் ஆகிவிட முடியாது. அதை போடுபவர்கள், தூய சிந்தனைகளையும், தியாக மனப்பான்மையையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்பது தான், என் அடுத்த கோரிக்கை. அதற்காக போராட்டம் நடத்துவேன்.தற்போது, உண்ணாவிரதத்தை முற்றிலும் கைவிடவில்லை. தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்.இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.

சிறப்பு கூட்டத் தொடர்: ஹசாரே குழுவைச் சேர்ந்த சாந்தி பூஷன் கூறுகையில், “ஹசாரேயின் கோரிக்கையை ஏற்பதாக, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரை ஒரு மாதத்திற்குள் கூட்டி, பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறோம்’ என்றார்.

மருத்துவமனையில் அனுமதி : உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதும், அன்னா ஹசாரே, உடனடியாக, ராம்லீலா மைதானத்தில் இருந்து, குர்கான் அருகில் உள்ள, “மெடென்டா மெடிசிட்டி’ என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனை முன்பாக, ஏராளமான மக்கள் கூடி நின்று, ஹசாரேயை அன்புடன் வரவேற்றனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அங்குள்ள டாக்டர்கள், அவரை பரிசோதித்தனர். படிப்படியாக, அவருக்கு திரவ உணவு கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 12 நாட்களாக தொடர்ந்து சாப்பிடாமல் இருந்ததாலும், உடல் எடை, 7.5 கிலோ குறைந்துள்ளதாலும், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவார் என, டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.டாக்டர் நரேஷ் கூறுகையில், “கவலைப்படும்படியாக எதுவும் இல்லை. ஹசாரேயை டாக்டர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். 48 மணி நேரம் வரை, திரவ உணவு கொடுக்க வேண்டும். சிறுநீரகம், கல்லீரல் போன்றவை, சரியாக செயல்படுகின்றனவா என, பரிசோதிக்க வேண்டும்’ என்றார்.

ஹசாரே உண்ணாவிரத துளிகள்*உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப் போவதாக, நேற்று முன்தினம் இரவே, ஹசாரே அறிவித்ததால், நேற்று காலை ராம்லீலா மைதானத்தில், ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
*டில்லியின் அனைத்து முக்கிய சாலைகளில் இருந்தும், ஏராளமான மக்கள் வாகனங்களிலும், நடந்தும், ராம்லீலா மைதானம் நோக்கி வந்தனர். இதனால், டில்லியில் நேற்று அதிகாலையிலேயே, கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
*ராம்லீலா மைதானத்திலும், கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், சிலர் மயக்கமடைந்தனர். இவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். அங்குள்ள டாக்டர்கள் கூறுகையில்,”கடந்த 12 நாட்களாக, இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். பெரும்பாலானோர் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர்’ என்றனர்.
*சிம்ரன், இக்ரா என்ற, தலித் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த, இரு சிறுமியர், தேன் கலந்த இளநீர் கொடுத்து, ஹசாரேயின்
உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
*உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதும், ஹசாரே, காந்தி நினைவிடத்துக்கு செல்வார் என கூறப்பட்டது. ஆனால், டாக்டர்கள் அறிவுறுத்தியதால், ஹசாரேயின் வாகனம், நேரடியாக மருத்துவமனைக்கு சென்றது.
*சில நிமிடங்களாவது, திறந்த வாகனத்தில், ஹசாரே பயணிக்க வேண்டும் என, அங்கிருந்த மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், டாக்டர்கள் இதை நிராகரித்தனர்.
*ராம்லீலா மைதானத்தில் இருந்து, மருத்துவமனைக்கு செல்வதற்கு, 30 நிமிடங்கள் பிடித்தது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்ததால், வாகனம் மெதுவாகவே சென்றது.
*”டிவி’ கேமராமேன்களும் அதிகமாக திரண்டிருந்தனர்.

சல்மான் குர்ஷித்மத்திய சட்ட அமைச்சர்:””அன்னா ஹசாரே போராட்ட விவகாரத்தை கையாளுவதில், அரசு தரப்பில் சிறிய அளவிலான தவறுகள் நடந்திருக்கலாம். சிக்கலான பிரச்னைகளை கையாளும்போது, தவறு நடப்பது இயல்பு தான். ஆனால், பெரிய அளவிலான பிழை எதையும் நாங்கள் செய்யவில்லை”

சந்தோஷ் ஹெக்டே ஹசாரே குழு:””பலமான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கான, வலுவான அடித்தளம் அமைத்திருக்கிறோம். இந்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேறுவதற்கு கால அவகாசம் தேவைப்படும். இன்றோ, நாளையோ, அல்லது அடுத்த மாதமோ, இது சட்டமாகி விடாது. எனவே, இதனால், ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடும் என, மக்கள் எதிர்பார்க்கக் கூடாது”

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s