அடங்கியது வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்டம்….

சேலம் அங்கம்மாள் காலனி நில விவகார வழக்கு, ப்ரீமியர் ரோலர் மில் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஐகோர்ட் உத்தரவுபடி, சேலம் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்பு குழு அலுவலகத்தில், நேற்று சரணடைந்தார். இதுவரை, பல்வேறு வழக்குகளில் சிக்காமல் வலம் வந்த அவர் நடவடிக்கைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டார்.சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், அங்கம்மாள் காலனி உள்ளது. 1959ல், சீனிவாச குப்தா, அந்த நிலத்தை, அப்பகுதியில் வசித்தவர்களுக்கு தானமாக வழங்கினார். 50 ஆண்டுகளாக, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த, 30 குடும்பத்தினர், அங்கு வீடு கட்டி வசித்து வந்தனர்.மொத்தம், 20 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த நிலத்தில், 2008, ஜனவரி 19ல், ரவுடிகள் சிலர், குடிசை போட்டு அமர்ந்தனர். வீரபாண்டி ஆறுமுகம் தரப்பினர், அந்த இடத்தை ஆக்கிரமித்து, அங்கு குடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, குடிசைகளை இடித்து தள்ளினர். பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு போராட்டம் நடத்தியும், தி.மு.க., ஆட்சியில், தொடர்ந்து நீதி கிடைக்கவில்லை.

சமீபத்தில், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஐ.டி., கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம் ராமு, முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுரு மூர்த்தி உட்பட, 13 பேர் மீது, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.மற்றொரு வழக்காக, சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் ப்ரீமியர் ரோலர் ப்ளவர் மில்லை மிரட்டி வாங்கிய விவகாரமும் விசாரணையில் சேர்ந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மில்லை மீட்டுத் தரவேண்டும் என, அதன் உரிமையாளர் வெங்கடாசலம் குடும்பத்தினர், புகார் அளித்தனர்.இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக வீரபாண்டி ஆறுமுகம் சேர்க்கப்பட்டார். இவர் உட்பட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்ளிட்ட, எட்டு பேர் தலைமறைவாகினர். அங்கம்மாள் காலனி வழக்கில் மட்டும், நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வீரபாண்டி ஆறுமுகத்தை பிடிக்க, 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அடுக்கடுக்கான கேள்விக்கு”தெரியாது’ என பதில்!போலீசார் தயாரித்து வைத்திருந்த கேள்விகள், ஒன்றன் பின் ஒன்றாக, ஆறுமுகத்திடம் கேட்கப்பட்டன. விசாரணை அதிகாரிகளால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும், “தெரியாது’ என பதில் சொன்னார். 11 மணி அளிவில், முன்னாள் அமைச்சருக்கு வெள்ளரி பிஞ்சு, காபி வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, அரசு டாக்டர்கள் மற்றும் அவர் அழைத்து வந்த விநாயகா மிஷன் டாக்டர் ஒருவரும், அவரின் உடல் நிலை குறித்து பரிசோதித்தனர். தொடர்ந்து, 2 மணி நேரத்துக்கு ஒரு முறை, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. போலீசார், பிரபல ஓட்டலில் இருந்து, மதிய உணவு வாங்கி வந்து வழங்கினர்.

வீரபாண்டி ஆறுமுகம், இரவில் வீட்டுக்கு செல்வதற்கு அனுமதிக்கக்கோரி, அவரது வழக்கறிஞர் மூர்த்தி, உதவி கமிஷனர் பிச்சையிடம் எழுத்து பூர்வமாக அனுமதி கேட்டார்.அதற்கு போலீஸ் தரப்பில், “”ஐகோர்ட்டில் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்” எனக் கூறினர். தொடர்ந்து இரவு வரை விசாரணை நடந்தது. வீரபாண்டி ஆறுமுகத்திடம், போலீசார் விசாரணை நடத்தினர்.நேற்று, அங்கம்மாள் காலனி நில பிரச்னை குறித்து விசாரித்த போலீசார், இன்றும், நாளையும் ப்ரீமியர் மில் அபகரிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வர் . நாளை மாலை 5 மணிக்கு, சேலம் மாஜிஸ்திரேட் நிதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.

இது குறித்து சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது:வீரபாண்டி ஆறுமுகத்திடம், சேலம் மாநகர குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை முழுமையாக போலீஸ் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. இதனால், அவர் நீதிமன்றம் அளித்துள்ள அவகாசம் வரை, விசாரணை நடக்கும் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்படுவார்.இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

சரண்: இதற்கிடையே, இந்த இரண்டு வழக்குகளிலும், முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில், வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள் குறித்த வாதங்களை கேட்ட நீதிபதி ராஜசூர்யா, “”வரும் 25ம் தேதி காலை, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில், வீரபாண்டி ஆறுமுகம் சரணடைய வேண்டும். அவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரிக்கலாம்.””வரும் 27ம் தேதி மாலை, சேலம், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அங்கு பிணையம் செலுத்தி, முன்ஜாமின் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின், தினமும், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன், அவர் ஆஜராக வேண்டும்” என, உத்தரவிட்டார்.இந்த உத்தரவுப்படி, நேற்று காலை, வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைந்தார்.

இதற்காக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நேற்று காலை, தன் வீடு அமைந்துள்ள பூலாவாரியில் இருந்து, 50க்கும் மேற்பட்ட கார்கள், 100க்கும் மேற்பட்ட மொபட்டுகள் அணி வகுக்க, சேலம் மாநகருக்குள் ஊர்வலமாக வந்தார்.உயர்போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி, வாகனங்களைக் குறைத்து, கோட்டை மாரியம்மன் கோவில் வளைவு வரை, ஒன்பது கார்கள், விநாயக மிஷன் ஆம்புலன்ஸ் சகிதமாக சரணடைய வந்தார். பின்னர், முன்னாள் அமைச்சரின் கார் மட்டும் மாற்றுப் பாதை வழியாக, டவுன் போலீஸ் ஸ்டேஷன் நுழைவாயில் பகுதிக்கு வந்தது. அங்கு இன்ஸ்பெக்டர்கள், போலீசார் காத்திருந்தனர்.

அவருடன், எம்.பி., ராமலிங்கம், கள்ளக்குறிச்சி எம்.பி., ஆதிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் மூர்த்தி ஆகியோர் சென்றனர்.மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்குள் நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், உதவி கமிஷனர் பிச்சையிடம், தான் சரணடைவதாக கூறினார்.அதைத் தொடர்ந்து, விசாரணை துவங்கியது. துணை தாசில்தார்கள், பாலகிருஷ்ணன், பெரியசாமி ஆகியோரும் உடனிருந்தனர். விசாரணையை வீடியோகிராபர்கள் இருவர் பதிவு செய்தனர்.சேலம் நகர் முழுவதும், சரண் விஷயம், பரபரப்பாக பேசப்பட்டது. வீரபாண்டி ஆறுமுகம் விசாரணையில் சிக்கிக் கொண்டது குறித்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூங்க கட்டில் வசதி:சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீஸில் சரண் அடைந்துள்ள மாஜி அமைச்சரிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர் இரவில் தூங்குவதற்கு போலீஸ் சார்பில் கட்டில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பெட்ஷீட் உள்ளிட்டவை, ஏற்கனவே அவரின் வழக்கறிஞர் மூலம் வரவழைக்கப்பட்டு விட்டது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s