காணாமல் போன நடிகைகள்! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சினிமாத் துறை‌யில் கதாநாயகி கனவு‌களோடு கால்பதிக்கும் நடிகைகள் ஒரு ஸ்ரீதேவியாகவோ, சிம்ரனாகவோ வர வேண்டும் என்றே விரும்புவார்கள். சினிமாவில் கொடிகட்டி பறக்க வேண்டும் ; கோடிகளில் சம்பளம் பெற வேண்டும் என்பன போன்ற கனவுகளோடு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருசில படங்களிலேயே காணாமல் போய் விடுகிறார்கள். அதிலும் சமீபகாலமாக தடுக்கி விழுந்தால் புதுமுகம் என்கிற ரீதியில் ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் களமிறக்கப்படுகிறார்கள். அவர்களில் ஜெயித்தவர்கள் ஒரு சிலரே.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையில் களமிறங்கும் ந‌டிகைகளில் பெரும்பாலானோர் நடிப்பை வெளிக்காட்டுறார்களோ, இல்லையோ… ஆடை குறைப்பு மூலம் உடலின் அங்கங்களை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்திழுக்க முயற்சி செய்கிறார்கள். முன்பெல்லாம் கவர்ச்சிக்கென சில்க் ஸ்மிதா போன்ற தனி நடிகை இருந்த நிலைமை மாறி இப்போது கதாநாயகியே கவர்ச்சி நாயகியாகி விடுகிறார். கிராமத்து கதையில்கூட ஒரு கனவுப்பாட்டை உருவாக்கி பாரீன் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தி, கதாநாயகியை கவர்ச்சியாக காட்டுகிறது சினிமா.

தமிழ் சினிமாவில் பரபரப்பாக, ஆர்ப்பாட்டமாய் அறிமுகமாகும் நடிகைகள், பின்நாளில் காணாமல் போக காரணம் என்ன? கனவு தேவதைகளாக வலம் வந்த கதாநாயகிகள் இப்போது என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி அலசும் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் :

சினேகா
விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறகமுகமான சினேகா, தனது புன்னகை மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ள சினேகாவுக்கு பொன்னர் சங்கர் படத்திற்கு பிறகு படங்கள் இல்லை. இதுபற்றி சினேகாவிடம் கேட்டால், விடியல், அறுவடை போன்ற படங்கள் சீக்கிரமே ரிலீசாகும் என்று நம்புகிறேன், பாலிவுட் வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது, என்று புன்னகை மாறாத முகத்துடன் பதில் அளிக்கிறார். அம்மணிக்கு பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் கடை திறப்பு விழா, சிறப்பு விருந்தினர் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிஸியாகவே இருக்கிறார்.

தமன்னா
கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, கல்லூரி படம் மூலம் பளிச்சிட்டு, குறுகிய காலத்திலேயே அனைவரின் விருப்ப நாயகியாக மாறியவர் தமன்னா. தற்போது நடித்து வரும் வேங்கைக்குப் பிறகு தமிழில் படங்களே இல்லாமல் இருக்கும் தமன்னா, தெலுங்கில் பிஸியாகவே இருக்கிறார். ஏன் என்று கேட்டால், எனக்கு நல்ல ஸ்கிரிப்ட் வரணும், எனக்கு பிடித்தால்தான் நடிப்பேன். என் அப்பா, அம்மா என்று எல்லோருடனும் கலந்து ஆலோசித்த பின்னர்தான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆவேன். இப்போதைக்கு தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். தமிழில் நல்ல கதை கிடைக்கட்டும் பிறகு பார்ப்போம், என்கிறார். அம்மணிக்கு தமிழ் நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால்தான் தமிழ் படங்களை தவிர்த்து வருவதாக கோடம்பாக்கம் முழுக்க ஒரு பரபரப்பு செய்தி கடந்த சில மாதங்களாகவே உலாவி வருகிறது.

ஸ்ரேயா
எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரேயா, இப்போது பீல்ட் அவுட் நடிகைகள் லிஸ்ட்டில் இருக்கிறார். குட்டிக்கு பிறகு அம்மணி கைவசம் ரவுத்திரம் படம் மட்டுமே இருக்கிறது. இவரிடம் கேட்டால், எனக்கு பணம் முக்கியமல்ல, நல்ல கதையம்சம் உள்ள படம்தான் முக்கியம். இந்தியில் தீபா மேத்தாவின் படத்தை முடித்து கொடுக்கும் நிலையில் உள்ளேன். கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் பார்டி என்று ஜாலியாக ஊர் சுற்றுவேன். ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை விட்டு போக முடியாது, என்கிறார்.

சந்தியா
பத்தாம் வகுப்பு முடித்த கையோடு காதல் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் சந்தியா. அந்த படத்திற்கு பிறகு அம்மணி நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை. இப்போது தமிழில் படங்கள் எதுவும் இல்லை; அதனால் மலையாள பட வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். தமிழில் வாய்ப்பில்லாமல் போனது ஏன் என்று சந்தியாவிடம் கேட்டால், அதை நீங்கதான் கண்டுபிடிச்சி சொல்லணும், என்று பதில் கேள்வி கேட்கிறார்.

மீனாட்சி
கருப்பசாமி குத்தகைதாரர் படம் மூலம் மதுரை பெண்ணாகவே மாறிய மீனாட்சி, ரசிகர்களின் மனதை ரொம்பவே கரைத்திருந்தார். ஆனால் அடுத்த படத்திலேயே முகம் சுழிக்கும் அளவுக்கு கவர்ச்சியாக வந்து அவரா இவர் என்று கேட்கும் அளவுக்கு மாறிவிட்டது நிலைமை. மந்திர புன்னகையோடு மாயமான மீனாட்சிடம் இதுபற்றி கேட்டால், தமிழில் நல்ல கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன், ஆனால் அதுபோன்ற கதைகள் எனக்கு அமையவில்லை. ஒரு வேளை என் நடிப்பில் குறையோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அதனால், நேரத்தை வீணடிக்காமல், மும்பையில் உள்ள தியேட்டர் வகுப்புக்கு செல்கிறேன். அடுத்த கட்டத்துக்கு என்னை நான் தயார் செய்து கொண்டிருக்கிறேன், என்கிறார் நம்பிக்‌கையோடு.

சானாகான்
விளம்பர படங்களில் பளிச்சிட்ட சானாகானை தமிழுக்கு அழைத்து வந்தவர் சிம்பு. சிலம்பாட்டம், பயணம், ஆயிரம் விளக்கு என விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அம்மணியிடம் இப்போதைக்கு கைவசம் எந்த படமும் இல்லை. இதற்கு சானா சொல்லும் காரணம் ‌ரொம்பவே வேதனையானதுதான். இதுவரை என்னிடம் கதை சொல்லக்கூட யாரும் முன்வரவில்லை. படங்கள் ஏன் இல்லை என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது. ஒரு வேளை என் முகம் தமிழ்நாட்டு மக்கள் போல் இல்லாமல், வடநாட்டு சாயலில் இருப்பது காரணமாக இருக்குமோ, என்று ஆதங்கப்படும் சானா, “ஆயிரம் விளக்கு” படத்தில் பாவாடை, தாவணியில் நடித்திருக்கிறாராம். இந்த படம் வெளியானால் என் இமேஜ் கொஞ்சம் மாறும் என கூறுகிறார்.

பத்மப்ரியா
தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பத்மப்ரியா, ஒரு சில நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். பிறகு வாய்ப்பு குறையவே கவர்ச்சிக்கு மாறினார். “பட்டியல்” படத்தில் “நம்ம காட்டுல…” என்ற பாடலில் குத்தாட்டமும் போட்டு பார்த்தார். ஏனோ தமிழில் அவருக்கு வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. பொக்கிஷத்துக்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருக்கும், தமிழில் நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன் என்கிறார். சும்மா வந்து போய், டூயட் ஆடிப் போக விருப்பம் இல்லை, என்று சொல்லும் பத்மப்ரியா, சில படங்களில் உதவி இயக்குநர்களைப் போல வேலை பார்த்துள்ளார். சீக்கிரமே இயக்குநராகும் ஆசையும் உண்டாம்.

ஸ்னிக்தா
கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன…. என்று குத்தாட்டத்துடன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்னிக்தா. மிஷ்கின் இயக்கி நடித்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான “நந்தலாலா”வை அடுத்து எந்த தமிழ் படமும் கைவசம் இல்லை. அழுக்கு புடவையோடு, அந்த மாதிரியான ரோலில் நடித்து ஆச்சர்யப்படுத்தி அடுத்தடுத்த படத்திற்காக காத்திருப்பதுதான் மிச்சம். இதுபற்றி ஸ்னிக்தாவிடம் கேட்டபோது, நந்தலாலாவை தொடர்ந்து எனக்கு சிலர் கதை சொன்னார்கள், நிறைய விருதை நோக்கியும், பெண்கள் கொடுமை, அப்படி இப்படினு ஒரேமாதிரியான கதைதான். அதனால் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறேன். தமிழில் கலர்புல் காதல் படத்தில் நடிக்க ஆசை, அப்படியொரு வாய்ப்பு வந்தால் மீண்டும் பளிச்சிடுவேன், என்றார்.

லட்சுமிராய்
கற்க கசடற படத்தில் அறிமுகமாகி, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லட்சுமிராய். நீண்ட இடைவெளிக்கு பின்னர், தற்போது லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத்தின் மங்காத்தா படத்தில் ஒரு ஆட்டமும் போட்டுள்ளார். இதுதவிர லக்ஷ்மிராய்க்கு தமிழில் வேறு படமே இல்லை. அம்மணியிடம் இதுபற்றி கேட்டால், தமிழில் இந்த இடைவெளியை நிரப்ப மங்காத்தா படம் வரட்டும்; அப்புறம் பாருங்கள் என் நடிப்பை என்று சபதம் போடுகிறார். படங்கள் இல்லாமல் ஓய்வில் இருக்கும் அம்மணியின் இப்போதைய பொழுதுபோக்கு, கிடைக்கும் நேரங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதுதானாம்.

இவர்கள் தவிர, காதலில் விழுந்தேன் மூலம் அறிமுகமான சுனேனா, களவானி ஓவியா, ஜெனிலியா, பாவனா, சமந்தா, ஈசன் அபர்ணா, காவலன் மித்ரா, கோ பியா என தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகம் இருந்தும் புதுப்பட வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நாயகிகள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அதேநேரம் டாப்சி, ஹன்சிகா, அமலா பால் என்று புதுப்புது முகங்களும் ஆர்வமாக தமிழ் சினிமாவிற்கு வருவதும் தொடர்ந்து கொண்டேத்தான் இருக்கிறது.

சினிமா என்ற கனவு தொழிற்சாலைக்கு பல கனவுகளோடு வந்திறங்கும் நாயகிகளின் கனவு கரைந்து போவதற்கு காரணம் என்ன?

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s