ஊழலை குறைக்க வேறு என்ன வழி?………….

இன்று இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது ஊழல் ஒழிப்பு பற்றி தான். சமூக நீதியை நிலைநாட்டி, நேர்மையான செங்கோல் ஆட்சி செய்த பல நீதிமான்கள் வாழ்ந்த இந்த நாட்டில், இன்று லஞ்சமும், ஊழலும், கறுப்பு பணமும் நாடு முழுதும் எய்ட்சை விட ஒரு கொடிய நோய் போல் பரவி உள்ளது. அடுத்தடுத்து வரிசையாக நடந்த ஊழல்களால் மக்கள் நொந்து நூலாகிபோயுள்ளனர். ஆனால் இப்போதுதான் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எழுச்சி மக்கள் மத்தியில் கொஞ்சம் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ஊழல் அப்படினா என்ன?

முதலில் நாம் ஊழல் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக “ 1 மூட்டை சிமெண்டுக்கு, 3 மூட்டை மணல் தான் போட்டுதான் வீடு கட்ட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் 1 மூட்டை சிமெண்டுக்கு, 5 மூட்டை மணலை போட்டு வீட்டை கட்டிவிட்டு, மீதி வரும் சிமெண்டு மூட்டையை திருட்டு தனமாக விற்று பணத்தை சேர்த்தால் அதற்கு பெயர்தான் ஊழல் ”

ஊழலின் ஆணி வேர் எது?

ஊழலின் ஆணி வேறே நமது சட்டங்களில் உள்ள ஓட்டைகளும், தவறான அரசு நிர்வாகமும், கொள்கைகளும், நடவடிக்கைகளும் தான். சொல்ல போனால் நமது சட்டங்கள்தான் பெரும்பாலும் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றுகிறது. அதனால்தான் அவர்கள் எப்படியும் தப்பித்துவிடலாம் என்று தைரியமாக ஊழலை செய்கிறார்கள்.

அதேபோல் பெரும்பாலும் ஆளுங்கட்சி அதிகாரிகளும், அரசியல்வாதிகளின் நண்பர்களும், நெருங்கிய தொழில்அதிபர்களும் மற்றும் பண பேராசை பிடித்த பொதுமக்களும்தான் ஊழலை செய்கிறார்கள்.

விண்ணை முட்டும் அளவுக்கு ஊழல்கள்?

உலகத்துக்கே நீதியை போதித்து, தர்மத்தின் வழியில் நடந்த பல சான்றோர்கள் வாழ்ந்த இந்த இந்தியாவில், இன்று ஊழல்களின் பட்டியல் விண்ணை முட்டும் நீண்டு கொண்டேபோகிறது.

1975 இல் நடந்த லாட்டரி ஊழல் தான் முதலில் ஊழல்களின் கணக்கை ஆரம்பித்தது. அதற்கு பின் வரிசையாக போபர்ஸ் ஊழல், ஹர்ஷத் மேத்தா ஊழல், ஹவாலா ஊழல், பீகார் கால்நடை தீவன ஊழல், சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல், பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல், தெகல்கா ஆயுத பேர ஊழல், போலி முத்திரைத்தாள் ஊழல், மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல், ஐ.பி.எல் லலித் மோடி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ,“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், எஸ் பேண்டு ஊழல் என படையெடுத்தன.

ஆனால் இவ்வளவு ஊழல்களை செய்தவர்களில், ஒரு சிலர்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஜாலியாக வசதி, வாய்ப்புகளோடும், ஆட்சி, அதிகாரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இவர்களை தண்டிக்க சட்டமே இல்லையா?

1860 இல் இந்திய தண்டனை சட்டம் மற்றும் 1988 இல் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு சட்டங்கள்தான் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் பெரிய, பெரிய ஊழல்களை எளிதாக செய்கிறார்கள். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் போலீசும், சிபிஐயும், முதலில் மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் ஊழல் செய்பவர்கள் ஆட்சி, அதிகாரம், பணபலம், ஆள்பலம், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் ஆகியவற்றின் மூலம் எப்படியாவது தப்பித்து விடுகிறார்கள்.

பிரதமரே ஒப்புகொள்கிறார்?

“ஊழலை ஒழிப்பதற்கு தற்போதுள்ள சட்டங்களும், நடைமுறைகளும், நிர்வாக அமைப்புகளும், எந்த வகையிலும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.”

இதை சொன்னது ஊழல்களால் நிரம்பி வழியும் காங்கிரசை சேர்ந்த, நமது இந்திய பிரதமராக உள்ள மன்மோகன் சிங் தான்.

ஆக பிரதமருக்கே நன்றாக தெரிகிறது, நாட்டில் உள்ள சட்டங்களும், அதை நிறைவேற்றும் நீதிமன்றங்களும், அரசின் நிர்வாக அமைப்பும் மக்களுக்கு பயன் தரக்கூடிய எதையும் முறையாக செய்யவில்லை என்று.

லோக்பால் சட்ட மசோதா அப்படினா என்ன?

பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்.

லோக்பால் சட்டத்தின் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பால் அமைப்பின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் இந்த லோக்பால் சட்டம்.

இந்த லோக்பால் மசோதா, 1969-ஆம் ஆண்டிலிருந்து 42 வருடங்களாக நிறைவேறாமல், பாராளுமன்ற கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 10 முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசினால் சொல்லப்படும் லோக்பால் மசோதா:

ஊழல் தடுப்பு லோக்பால் அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் கமிட்டிக்கு உண்டான அதிகாரம் மட்டும் தான் உள்ளது.
ஒரு விவகாரம் பற்றி புகார் தெரிவிக்காமலே, சுயேச்சையாக லோக்பால் அமைப்பால் விசாரிக்கும் அதிகாரம் (suo moto) இல்லை.
புகார்களை சாதாரண பொதுமக்களிடம் இருந்து பெரும் அதிகாரமும் இதற்கு கிடையாது.
மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும்.
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களை திரும்ப பெற வழி வகைகள் ஏதும் இல்லை.
ஊழல் புகார் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை
இதுபோன்று அரசின் லோக்பால் மசோதா, தவறுசெய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் காப்பாற்றும் வகையில்தான் உள்ளது.

ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா?

இன்று இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு கந்தியவாதியாக அறியப்படும் ஹசாரே மற்றும் அவருடன் உள்ள சாந்தி பூசன், கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்தோஷ் ஹெக்டே, பிரசாந்த் பூசன், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள், அரசின் லோக்பால் சட்ட மசோதா சரியாக இல்லை என்று போர்க்கொடி தூக்கினார்கள். ஹசாரே உண்ணாவிரதமும் இருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹசாரேவின் குழு, அரசின் லோக்பால் சட்ட மசோதாவிற்கு எதிராக தாங்களே ஒரு சட்டத்தை முன் வைத்தார்கள். அதுதான் ஹசாரே குழுவின் ஜன் லோக்பால் மசோதா.


ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவின் சிறப்புகள்:

மத்திய அரசு ஊழல் எதிர்ப்பு அமைப்பாக “லோக்பால்” (மக்கள் குறைகேட்பு ஆணையம்) அமைப்பை நிறுவுதல், மாநில அளவில் லோக்பாலுக்கு துணைபுரிய “லோக் ஆயுக்தா” (மக்கள் குறைகேட்பு அதிகாரி) நியமித்தல் என்பதும்,

இந்த அமைப்பு அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது புலனாய்வுகளில், எந்த அமைச்சரவைகளின் இடையூறும் இன்றி தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதும்,

லோக்பாலிற்கு ஊழல் பற்றிய தகவல்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவிப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் வேண்டும் என்பதும்,.

ஒவ்வொரு வழக்கும் ஓராண்டுக்குள் புலானாய்வு செய்யப்படவேண்டும். குற்ற விசாரணைகள் இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும்,

லோக்பால் அதிகாரிகள் மீது ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக அவற்றை உடனடியாக ஒரு மாதத்திற்குள் புலனாய்ந்து குற்றம் இருப்பின் இரண்டாவது மாதத்திற்குள் அவர் நீக்கப்பட வேண்டும் என்பதும்,

அன்னா ஹசாரேவின் குழுவினால், அரசின் முன் வைக்கப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவின் சிறப்புகள் ஆகும்.

இந்த ஜன் லோக்பால் மசோதா தான் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்பது ஹசாரே குழுவின் போராட்டம் ஆகும்.

சட்டங்களால் ஊழலை ஒழிக்க (கட்டுப்படுத்த) முடியுமா?

நம் நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தபடவில்லை என்பது ஒரு படிக்காத பாமரனுக்கும், ஏன் பிச்சைகாரனுக்கும் கூட தெரியும்.

நீதிமன்றத்தில் நீதிதேவதை ஆட்சி, அதிகாரத்தால் மிரட்டப்படுவதும், பணபலத்தால் விலைக்கு வாங்கபடுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதானே….

ஏதோ ஒரு சில நல்ல நீதிபதிகளால் தான் இன்று நீதி நிலைநாட்டப்படுகிறது. (எடுத்துக்காட்டாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா கைது, அதுவும் கைது மட்டும்தான், ஆனால் இன்னும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை கொடுக்க முடியவில்லை).

அதேபோல் இன்று நேர்மையாக இருக்கும் நீதிபதிகள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். (எடுத்துக்காட்டாக கனிமொழியின் ஜாமினை பற்றி விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் ‘எங்களை ஆளவிட்டா போதும்’ என்று சொல்லிக்கொண்டு ஓடிவிட்டார்கள் )

இன்று உள்ள சட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்க (கட்டுப்படுத்த) முடியாது. மிக கடுமையான, நேர்த்தியான புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் பயத்தின் காரணமாக கொஞ்சமாவது குறைக்க முடியும்.

அதைவிட அந்த சட்டத்தை செயல்படுத்த நீதி தவறாத நீதிபதிகளும், கடமை தவறாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருந்தால் ஊழலை முற்றிலும் ஒழித்து விட இயலும். ஆனால் இதெல்லாம் இந்த கலி காலத்தில் நடக்குமா?

ஊழலை குறைக்க வேறு என்ன வழி?

மிகப்பெரிய ஆலமரம் போல் வளர்ந்துவிட்ட ஊழல், லஞ்சைத்தை கொஞ்சமாவது குறைக்க வேண்டுமென்றால், அது நம் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது.

நம் நாட்டில் உள்ள 20 கோடி வீடுகளில், 8 கோடி வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் செய்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. நாட்டின் நிலைமை இப்படி இருந்தால் எப்படி லஞ்சம், ஊழல் குறையும்?

அதனால் முதலில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் சிறுவயது முதலே லஞ்சம், ஊழல் செய்யக்கூடாது என்ற உணர்வை பிஞ்சு உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க வேண்டும். அதைவிட முதலில் பெற்றோர்கள் உருப்படியாக இருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளிடம் அதை எதிர்பார்க்க முடியும். (எடுத்துகாட்டாக கருணாநிதி ஊழல் செய்கிறார். அதை பார்த்து அவருடைய மகள் கனிமொழியும் ஊழல் செய்கிறார்).

அடுத்ததாக கல்வியில் புதிய புரட்சி நடந்தே ஆக வேண்டும். கல்விகூடங்களில் லஞ்சம், ஊழலை செய்யக்கூடாது என்று, தொடர்ந்து மாணவர்களிடம் கற்பிக்கப்பட வேண்டும்.

இன்று நேர்மையாக (ஒரு சிலர் இருக்குகிறார்கள்) இருப்பவர்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் போது, அரசாங்கம் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும், பாராட்டும் அளித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் பத்திரிக்கைகளும், T.V, ரேடியோ போன்ற ஊடகங்களும் அவர்களை பாராட்ட வேண்டும்.

அரசாங்கத்தில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் விரைவாக வேலை நடக்கிறது. இதை ஒழுங்குப்படுத்த அரசு பல புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த சின்ன, சின்ன லஞ்சம்தான் அவர்களை பெரிய ஊழல் செய்ய துண்டுகிறது. இதற்கு ஒரு தீர்வை கண்டுபித்தாலே, நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் பெரும்பாலும் குறைக்க முடியும்.

அரசாங்கத்தின் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகள்தான் நாட்டில் பெரிய ஊழல்கள் நடக்க காரணமாக அமைகிறது. இவைகள் தேவைதான், ஆனால் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். (பெரிய தொழில் அதிபர்கள் தாங்கள் நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், அரசு ஒப்பந்தங்களை பெற, அதிகாரிகள், அமைச்சர்களுக்கு பொட்டி, பொட்டியாக பணத்தை கொடுத்து காரியத்தை சாதித்துகொள்கிறார்கள்)

லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடுமையான, நேர்த்தியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அந்த சட்டங்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், ஓட்டைகள் இல்லாமல், சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைத்தால் கூட, அவர்கள் செய்யும் குற்றங்களில் இருந்து தப்ப முடியாதபடி இருக்க வேண்டும். (100% தூய்மையான சட்டமாக கூட இருக்க வேண்டாம். ஒரு 80% தூய்மையாக உள்ள சட்டம் இருந்தால் கூட போதும்)

இவை அனைத்திற்கும் அரசாங்கம் மனது வைக்க வேண்டும். அரசாங்கம் செய்ய மறுத்தால் அதை எதிர்த்து மக்கள் அமைதியான போராட்ட முறைகளை கையாண்டு எதிர்ப்புகளை காட்ட வேண்டும். வன்முறைகள் என்றுமே ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. (அதாவது பொது வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியான முறையில் போராடுதல், அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை தேர்தலில் மக்கள் ஓட்டு போடாமல் புறக்கணிக்கத்தல், ஊழல் எதிர்ப்பு பொதுக்கூட்டங்கள், இன்னும் பல… )

நாட்டில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஒன்றாக சேர்த்து இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும், ஏன் அனைத்து கிராமங்களிலும் கூட போராட்டம் நடத்த வேண்டும். இந்த போராட்டத்தில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பங்குபெறுமாறு செய்ய வேண்டும்.

மக்களும் இதுபோன்ற போராட்டங்களுக்கு ஆதரவு என்று வாயால் சொல்வதோடு நிறுத்திவிடாமல் வீதிகளில் இறங்கி போராட முன்வரவேண்டும். வெறும் SMS அனுப்புவதோடு மட்டும் நிறுத்திவிட கூடாது. ஏனென்றால் லஞ்சமும், ஊழலும் குறைந்தால் அதனால் ஏற்படும் பலனை அடைவது மக்கள்தான்.

கிரிக்கெட் பார்க்க லீவு போடும் நம் மக்கள், இந்த மாதிரியான போராட்டங்களுக்கு ஒரு நாள் மட்டும் லீவுபோட்டு களத்தில் இறங்கி போராட முன்வரவேண்டும்.

எத்தகைய போராட்டத்திற்கும் ஒரு தலைவன் இருந்தே ஆக வேண்டும்.
இந்த ஊழல் ஒழிப்பு போராட்ட தலைவன் ஜாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராகவும், பணத்தின் மீது பேராசை இல்லதாவராகவும் இருக்க வேண்டும். இந்த போராட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தைரியமும், சமாளிக்கும் அளவுக்கு அறிவும்,
திறமையும் இருக்க வேண்டும். அவருடன் இருப்பவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையான மக்களுக்கான இயக்கமாக அது செயல்படும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவார்கள்.

சட்டங்கள் மூலம் ஊழல் செய்தபின் தான் தண்டனை கொடுக்க முடியும். ஆனால் ஊழலை ஊழல் செய்வதற்கு முன்னரே தடுக்க வேண்டுமெனில், ‘’தங்கள் உழைப்பால் கிடைக்கும் பணத்தின் மூலமே வாழ்க்கையை நடத்த வேண்டும், அதுவே சிறந்த வாழ்க்கை’’ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அதற்கு நமது அரசாங்கமும், ஆசிரியர்களும், பத்திரிக்கை, T.V, ரேடியோ போன்ற ஊடகங்களும், சினிமாதுறையினரும் மனது வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலத்தில் லஞ்சம், ஊழல்கள் பெருமளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.

ஊழலை குறைக்க வேறு என்ன என்ன வழிகள் உள்ளது……என்பது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!
!

சமூக நலம் விரும்பும்

பகலவன்.

source: http://mmk4u.blogspot.com

……………………………

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s