கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி: லஞ்சமா-கடனா? : நீதிமன்றம்

அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான்-டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனம் கலைஞர் டி.விக்கு வழங்கிய ரூ.214 கோடி, லஞ்சமா அல்லது கடன் தொகையா என்பதற்கான உரிய ஆவணங்களை வழங்குமாறு சிபிஐ தனி நீதிமன்றத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தொகையை கடன் என்கிறது கலைஞர் டிவி நிறுவனம். அதை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கூறுகிறது. ஆனால், இது 2ஜி லைசென்ஸ் பெற்றதற்காக ஸ்வான் டெலிகாம் வழங்கிய கலைஞர் டிவிக்கு தந்த லஞ்சம் என்கிறது சிபிஐ. 2ஜி விவகாரம் வெடித்தவுடன் இந்த லஞ்சத்தை கடன் போல காட்டி வட்டியோடு திருப்பித் தந்துள்ளனர் என்றும் சிபிஐ கூறியுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அந்தத் துறையின் உயர் அதிகாரிகள், கலைஞர் டி.வி.யின் பங்குதாரரும் தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கனிமொழிமற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், சி.பி.ஐ. தனி கோர்ட்டிலும் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலருடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக பயனடைந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளரான சாஹித் பல்வா, அவருடைய துணை நிறுவனங்களான குசேகான் புரூட்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி லஞ்சமாக வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் குசேகான் புரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜீவ் அகர்வால், ஆஷிப் பல்வா ஆகியோருக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறி்ஞர், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட அந்தப் பணம் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கடனாக வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரிகோக், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான அசல் ஆவணங்களை வழங்கும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. தனி நீதிமன்றம், உரிய ஆவணங்களை விசாரணை அதிகாரி மூலம் உயர் நீதிமன்றத்திடம் சமர்பிக்க வேண்டும் என்றும் பாரிகோக் உத்தரவிட்டார்.

பண பலத்துக்கு நீதி அடிபணியாது-சிபிஐ நீதிமன்ற நீதிபதி:

இந் நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு ஜூன் 11 முதல் ஜூலை 4 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2ஜி விவகாரத்தில் சிறையில் உள்ள ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்டோர் நேற்று சிறப்பு மனு தாக்கல் செய்தனர்.

அதில், நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை தொடங்குவதால், இந்த விடுமுறை காலத்தில் தங்களது நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளை கவனிக்கும் வகையில் மும்பை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் உள்ளவர்களையும் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும், அதற்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தனர்.

அவர்களது மனுவை நிராகரித்த நீதிபதி சைனி நீதி நிர்வாகத்தைப் பண பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்றார்.

மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவர்களுக்கு தலா ரூ.15,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

கனிமொழியை சந்தித்த ராஜாத்தி அம்மாள்:

2ஜி வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோர் சிறையிலிருந்து தினமும் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

நேற்று அவர்களைக் காண கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் நீதிமன்றத்துக்கு வந்தார். கனிமொழி-ராசா-சரத்குமாருடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, அரவிந்தனின் தாயார், திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ராசாவின் மனைவி பரமேஸ்வரி, உறவினர்கள், சரத்குமாரின் உறவினர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்காக நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டவுடன் கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரை போலீசார் அழைத்துச் சென்றுவிட்டனர்.

மற்றவர்கள் உணவருந்த சென்றுவிட்ட நிலையில் ராஜாத்தி அம்மாள், செல்லவில்லை. கவலையான முகத்துடன் அங்கேயே அமர்ந்திருந்தார்.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s