லஞ்சத்தை ஒழிக்க “இளைஞர் இயக்கம்’ : அப்துல் கலாம்………..

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, “லீடு விழுப்புரம் 2020′ திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது; 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.விழுப்புரத்தில் நட உள்ள, 6.5 கோடி மரக்கன்றுகள், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை அழித்து, 10 லட்சம் டன் ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டை வளப்படுத்தும் நிலைப்பாட்டை, மக்களிடம் கொண்டு வர வேண்டும்.

இது, மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தக் கூடிய திட்டம். அறிவியல் தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் வளர்க்க, அறிவியல் கண்காட்சி அமைத்திருப்பது சிறப்பு. இதன் மூலம் இளம் விஞ்ஞானிகளை கண்டெடுத்து அவர்களது திறனை வெளிக்கொணர்வது, இளைஞர் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஒரு தூண்டுகோளாக இருக்கும்.உங்கள் முயற்சி, ஒரு சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்து, தமிழகத்தை ஒரு வளமான நாடாக்கும் திட்டத்தில் முதல் மாவட்டமாக செயல்பட்டு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன… எத்தனை பேர் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆசிரியர்கள் ஆக கனவு காண்கிறீர்கள். எத்தனை பேர் விண்வெளியில் நடக்க விரும்புகிறீர்கள். கடந்த 12 ஆண்டுகளில், 1.2 கோடி இளைஞர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், ஒரு லட்சம் இளைஞர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், “இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆகப் போவது யார்?’ என கேட்டபோது, சில 100 பேர், கை தூக்கினர். “எத்தனை பேர் சந்திரன், வியாழன் கிரகத்திற்கு போக விரும்புகிறீர்கள்?’ என கேட்டபோது, அனைவரும் கை தூக்கினர்.

அதில் ஐந்து பேரை தேர்வு செய்து, “நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?’ என கேட்டேன். “10 ஆண்டில் வளர்ந்த நாடாக மாற்றுவேன், லஞ்சத்தை ஒழிப்பேன்’ என்றும், “இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்’ என, ஒரு மாணவன் கூறினான். எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் நம்பிக்கை, லட்சியம், கனவைப் பார்க்கிறேன்.வளமான இந்தியாவை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைக்க, எழுச்சி எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. எனவே, கனவு காண்பது அவசியம். லட்சியம் வேண்டும். அது நிறைவேற கடின உழைப்பு, அறிவும், அதை தொடர்ந்து செல்ல வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர். லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.

ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும். ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள். என்னுடைய இணைய தளத்தில் (www.abdulkalam.com) தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s