தேவையா இந்த (தடு)மாற்றங்கள்?………………

வழக்கமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நடக்கக் கூடிய காட்சி மாற்றங்கள் துவங்கிவிட்டன. “சொன்னதைச் செய்தோம்’ என்ற பெயர் வாங்குவதற்காக, முதல் நாளிலேயே ஏழு நலத்திட்டங்களுக்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா.

அவற்றுக்கு பெருமளவில் நிதி தேவையில்லை என்பதும், கடந்த ஆட்சியில் முடிவுக்கு வந்த இலவச கலர் “டிவி’க்கான பணம் மிஞ்சுவதும், இத்திட்டங்களைச் சுலபமாக்கும். அதே நேரங்களில், அவர் மேற்கொண்ட இரு நடவடிக்கைகள் தான், இது தேவையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன. முதலாவது, போலீஸ் உயரதிகாரிகளின் அதிரடி மாற்றம். புதிதாகத் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடியவர், தனக்கேற்ற அணி இருந்தால் தான் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடியும். அந்த வகையில், போலீசாரின் இடமாற்றம் புரிந்துகொள்ளக் கூடியது தான். அவர்களில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன், ஜெயலலிதா முதல்வரான முதல் நாளே, சிறைத்துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து, மிகவும் சக்தி வாய்ந்த துறையான, உளவுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், உளவுத் துறைத் தலைவர் ஜாபர் சேட், சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் ஆகிய நான்கு பேரும் தூக்கியடிக்கப்படுவர் என எதிர்பார்த்தேன். அவ்வாறே நடந்தது. இதில், ராஜேந்திரன் மட்டும் மீண்டும் முக்கியமான துறையைப் பெற்றது, போலீசார் வட்டாரத்தில் மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இரு ஆட்சிகளிலும் மாற்றப்படாமல், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த அதிகாரி என்பதால், அவரது சேவை பயன்படுத்திக்கொள்ளப்பட்டது என ஒரு தரப்பினரும்; முதல்வருக்கு வேண்டப்பட்ட குடும்பத்தின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், மீண்டு(ம்) வந்துவிட்டார் என இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். உண்மை எதுவாகவும் இருக்கட்டும். முதல் மாற்றத்திலேயே அவரை உளவுத் துறைத்தலைவராக நியமித்திருக்கலாமே; சிறைத்துறைக்கு தூக்கியடித்து, அவரை அவமதித்து, இரண்டு நாளிலேயே அந்த உத்தரவை ஏன் மாற்ற வேண்டும் என்பது தான் என் கேள்வி. ராஜேந்திரனின் திறமை, இரண்டு நாள் கழித்து தான் தெரிந்ததா? அல்லது, முதல்வரின் உத்தரவை மாற்றியமைக்கக் கூடிய சக்திகள், இந்த ஆட்சியிலும் முளைத்துவிட்டனரா? இந்த இடமாற்றம், புதிய அரசின் தடுமாற்றத்தைக் காட்டுவதாகக் கருதுகிறேன். தடுமாறலாம்; தடம் மாறிவிடக் கூடாது என்பதே என் அக்கறை.

இரண்டாவது விஷயம், ஏற்கனவே பெரும் எதிர்(பார்)ப்புக்கு உள்ளாகிவிட்ட தலைமைச் செயலக மாற்றம். “புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகத்துக்கு உகந்த இடமாக இல்லை; இடம் போதவில்லை’ என்பதை, முதல்வர் ஜெயலலிதா நன்கு உணர்ந்தவர். 2001-06ல் தனது ஆட்சிக் காலத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட முனைந்தவர். அதைச் செயல்படுத்த விடாமல் அடாவடி செய்தது தி.மு.க., தனது மத்திய அமைச்சர்கள் மூலம் முட்டுக்கட்டையும் போட்டது. ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அவசர கோலத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியது. துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், “திராவிட பாரம்பரியத்தைப் போற்றும் கட்டடம்’ என புகழ்ந்து தள்ளினர். அந்தக் கட்டடத்தின் எந்தச் செங்கலில் திராவிடம் இருக்கிறது என, இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சும்மா, ஒப்புக்காக ஒரு கட்டடத்தைக் கட்டிவிட்டு, ஏதோ தாஜ்மகாலைக் கட்டியது போல தலை உயர்த்திக்கொண்டனர். இருந்துவிட்டுப் போகட்டும். அந்தக் கட்டடம், இன்று 1,200 கோடி ரூபாயை விழுங்கி நிற்கிறது. அத்தனையும், மக்கள் வியர்வையில் முளைத்த வரிப்பணம். இப்போது இல்லாவிட்டாலும், இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, எப்படியும் புதிதாக ஒரு தலைமைச் செயலகம் தேவைப்படவே செய்யும். அப்போது இன்னொரு கட்டடத்தைக் கட்டுவதை விட்டுவிட்டு, இப்போதே இந்தக் கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்பது, முதல்வர் அறியாத குறளல்ல. தி.மு.க.,வினருக்கு அப்படிப்பட்ட குணநலன் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், தனக்கு அந்தத் தன்மை இருக்கிறது என்பதை, அவர் நிரூபிக்க நல்ல வாய்ப்பு இது. நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவிப்பதை, நிமிடத்துக்கு நிமிடம் சுட்டிக்காட்டும் முதல்வர், தன் பங்குக்கு நிதிச்சுமையை ஏற்றக் கூடாது. நாளை மறுதினமே, ஜெயலலிதா தனது முடிவை மறுபரிசீலனை செய்துவிடுவார் என நான் நினைக்கவில்லை. இருந்தாலும் சொல்வது, தமிழ்க்குடிமகனாகிய என் கடமை. செய்வதும், செய்யாததும் அவர் உரிமை. எது நடந்தாலும், அதற்கான பலன் அவரை வந்தடையும்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s