வாழ்த்து மழையில் புதிய அமைச்சர்கள்…………….

ஜெயலலிதா தலைமையில், புதிய அரசில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு நேரில் வாழ்த்து சொல்ல தொண்டர்கள், ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இதனால் கோட்டையில் எங்கு பார்த்தாலும் கரை வேட்டி கட்டிய கட்சியினரும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பூங்கொத்துகளுடன் சென்ற வண்ணம் இருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில், நேற்று முன்தினம் பதவியேற்ற 33 அமைச்சர்களும், நேற்று கோட்டைக்கு வந்து பொறுப்பேற்று கொண்டனர்.காலை 11 மணி முதல் அமைச்சர்கள், ஒவ்வொருவராக கோட்டைக்கு வரத்துவங்கினர். பலர் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு, அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர். துறையின் செயலர்கள், தங்கள் அமைச்சர்களுக்கு வழி காட்டினர். அமைச்சர்களின் ஆதரவாளர்களும், மாவட்ட எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்கள் பொறுப்பேற்கும் வரை உடனிருந்து வாழ்த்து தெரிவித்தனர். ஒவ்வொரு அமைச்சர்களின் அறைக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கைகளில் பூங்கொத்து, பூச்செண்டு மற்றும் சால்வைகளுடன் வந்து வாழ்த்தினர்.

இதேபோல், துறை செயலர்கள், இணை, உதவி செயலர்கள் உட்பட அதிகாரிகளும், ஊழியர்களும் வரிசையில் நின்று அமைச்சர்களை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். அனைத்து அமைச்சர்களும், நேற்று தங்களை பார்க்க வந்த அனைவரையும் கட்டுப்படுத்தாமல் சந்தித்து வாழ்த்துக்களை ஏற்றனர். அமைச்சர்களின் அறைகளுக்குள் ஆதரவாளர்கள் உட்பட அனைவரும் விருப்பம்போல் கட்டுப்பாடின்றி சென்று வந்தனர்.கோட்டைக்கு முதல் நாளாக வந்த அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடம் தெரியாமல், ஒவ்வொரு மாடியையும் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது உதவியாளர்களும் புதியவர்கள் என்பதால், ஒவ்வொருவரிடம் விசாரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோட்டையில் அனைத்து அமைச்சர்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல் மாடியில், முதல்வர் ஜெயலலிதா அறைக்கு அருகே சட்டசபை அரங்கின் பார்வையாளர் மாடம் அருகே நிதித்துறை, உணவு, கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், கூட்டுறவு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு பக்கத்தில், மீன்வளத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இரண்டாவது மாடியில், தலைமை செயலர் அலுவலகம் உள்ளது. இதற்கு வடகிழக்கு பகுதியில், பிற்பட்டோர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. தலைமை செயலர் அறைக்கு மேற்கு பக்கமாக கைத்தறி, வேளாண், வீட்டுவசதி, மின்சாரம், வணிகவரி, உயர்கல்வி, சட்டம், வனம், வருவாய், சுகாதாரம், பள்ளிக்கல்வி, செய்தி விளம்பரம் ஆகிய துறை அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. இரண்டாவது மாடியில் உள்துறை முதன்மை செயலர் அலுவலகம் அருகில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அலுவலகம் உள்ளது.

மூன்றாவது மாடியில், இந்து அறநிலையம், சமூகநலம், கால்நடை துறை அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. முதல்வர் அறை இருக்கும் பகுதிக்குள், போலீசார் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.அமைச்சர்களுக்கு வாழ்த்து சொல்ல வந்த எம்.எல்.ஏ.,க்களும், ஆதரவாளர்களும் தங்கள் அமைச்சர்களின் அலுவலகங்களை மாடி, மாடியாய் சுற்றி சுற்றி வந்தனர். இனி வரும் காலங்களில் குழப்பத்தை தவிர்க்க ஒவ்வொரு மாடியிலும் படிக்கட்டு அருகிலும், கீழ்த்தளத்திலும் அமைச்சர்களின் அலுவலகங்கள் எங்கிருக்கிறது என்பதை காட்டும் வழி காட்டிப்பலகை வைத்தால், ஊர்களிலிருந்து குறை தீர்க்க வரும் தொகுதி, மாவட்ட மக்களுக்கு பலனளிப்பதாக இருக்கும்.

மஞ்சள் துண்டை விரும்பாத அ.தி.மு.க., அமைச்சர்கள் : புதிய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பதவியேற்றதும், அரசு விருந்தினர் இல்லத்தில் நேற்று முன்தினம் தங்கினர். அனைவருக்கும் உடனடியாக சைரன் கார்கள், டிரைவர்கள் மற்றும் உதவியாளர் வசதிகள் செய்து தரப்பட்டது. அமைச்சர்களுக்கு இன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர்களின் பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும். கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களை குடியமர்த்தி விட்டு, ஊர்களுக்கு செல்ல ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். அமைச்சர்களின் அறைகளில் இரவோடு இரவாக குளிர்சாதனம் மற்றும் பர்னிச்சர் வசதிகள் செய்யப்பட்டன. பெயர் பலகைகளும் புதிதாக மாட்டப்பட்டுள்ளன. அனைத்து அமைச்சர்களின் அறைகளிலும் பச்சை வண்ண புடவை அணிந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.புதிய அமைச்சர்கள் பயன்படுத்த பொதுத்துறையிலிருந்து அறைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. டிபன், மதிய உணவு சாப்பிட வண்ண பூந்தட்டுகள், டீ, காபி கப் அண்ட் சாசர்கள், முகம் துடைக்க இரண்டு தேங்காய்ப்பூ துண்டுகள், குளியலறைக்கு வாளி, கப்., அலுவலக அறைக்கு டேபிள் வெயிட், பென் ஸ்டேண்ட், ஸ்பூன்கள், எழுதுவதற்கு ஸ்க்ரிப்ளின் பேடுகள், டீ டிரே, சோப்பு டப்பா, கைகழுவ மைசூர் சேண்டல் சோப் ஆகியவை ஒவ்வொரு அமைச்சர்களின் அறைக்கும் அனுப்பப்பட்டன. இதில், முகம் துடைப்பதற்கான டவல்கள் ரோஸ், மஞ்சள், வெளிர்நீலம் ஆகிய வண்ணங்களில் இருந்தன. இதில் பெரும்பாலான அமைச்சர்கள் மஞ்சள் துண்டு வேண்டாம் என்றும், ரோஸ் அல்லது நீல நிற துண்டுகளையே விரும்பி வாங்கியதாக உதவியாளர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரை சந்திக்க காத்திருந்த பி.ஆர்.ஓ.,க்கள் :புதிய தலைமை செயலகத்தில் இயங்கிய பொதுப்பணி மற்றும் உள்துறை அலுவலகங்கள் இரு தினங்களுக்கு முன், இரவோடு இரவாக கோட்டைக்கு மாற்றப்பட்டது. இதனால், மீண்டும் இரண்டாவது மாடியில் இயங்கிய பழைய இடத்திலேயே உள்துறை முதன்மை செயலர் அலுவலகம் இயங்குகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறை முதன்மை செயலரை பார்க்க, போலீஸ் அதிகாரிகள் நேற்று காலையிலிருந்து பொக்கேவுடன் வந்த வண்ணம் இருந்தனர்.தலைமை செயலக அதிகாரிகள், ஊழியர்கள், டிரைவர்கள், உதவியாளர்கள் என அனைவரும் புதிய அமைச்சர்கள் மற்றும் செயலர்களை சந்தித்து வாழ்த்தினர். இதேபோல், ஊழியர்கள் சங்கத்தினரும் ஒவ்வொரு அமைச்சர்களையும் நேரில் பார்த்து சால்வை அணிந்தனர். செய்தித்துறை அமைச்சர் செந்தமிழனை பார்க்க, தலைமை செயலக பி.ஆர்.ஓ.,க்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக பி.ஆர்.ஓ.,க்கள் மற்றும் சென்னை மாநகராட்சி பி.ஆர்.ஓ., உள்ளிட்டோர் காத்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s