தோல்வியை தழுவிய தி.மு.க., அமைச்சர்கள்…………

மடத்துக்குளம் தொகுதியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க., மாவட்ட செயலர் சாமிநாதன், அ.தி.மு.க., மாவட்ட செயலர் சண்முகவேலு நேரடியாக போட்டியிட்டனர். 74,082 ஆண்கள், 69,138 பெண்கள் என 1,76,353 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், 216 ஓட்டுச்சாவடிகளில் 1,43,703 ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை மையத்தில், தேர்தல் பார்வையாளர் டெபாஷியஸ் பண்ட்யோத் பாய் தலைமையில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு 78,622 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் சாமிநாதன் 58,953 ஓட்டுகளும் பெற்றனர். 19,669 ஓட்டுகள் கூடுதலாக பெற்ற சண்முகவேல், வெற்றி பெற்றார். சுயே., வேட்பாளர் வரதராஜன் 1,742 ஓட்டுகள்; பா.ஜ., வேட்பாளர் விஜயராகவன் 1,166 ஓட்டுகள் பெற்றனர். சுயே., வேட்பாளர்கள் நந்தகுமார் 946; சடையப்பன் 739; பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 598; சுயே., வேட்பாளர் சாமிநாதன் 218; சுப்ரமணியம், தங்கவேல் இருவரும் தலா 289 ஓட்டுகள் பெற்றனர்; கந்தசாமி 141 ஓட்டுகள் பெற்றார்.ஓட்டு எண்ணிக்கை மந்தம்: துவக்கம் முதலே மடத்துக்குளம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மந்த நிலை நீடித்தது; மற்ற மையங்களில் சுறுசுறுப்பாக சுற்றுகள் சென்ற நிலையில், இம்மையத்தில் மட்டும் மணிக்கணக்கில் தாமதித்து சுற்று முடிவை அறிவிப்பதில், அலுவலர்கள் சுணக்கம் காட்டினர். இதனால், கட்சி ஏஜன்டுகளும், பத்திரிகையாளர்களும் அதிருப்தி அடைந்தனர். எண்ணிக்கை முடிந்து, இரண்டு மணி நேரத்துக்கு பின்பே வேட்பாளர் பெற்ற மொத்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டதால், மாலை 4.00 மணிக்கு முடிய வேண்டிய மடத்துக்குளம் தொகுதி தேர்தல் முடிவு, இரவு 7.30 மணி வரை நீடித்தது.போலீசார் கவனம்: இரு கட்சிகளின் மாவட்ட செயலர்கள் மோதிய தொகுதி என்பதால், ஓட்டு எண்ணிக்கையின் போது போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். எவ்வித சலசலப்பும் ஏற்படாதபடி, கவனமாக கண்காணித்தனர். தி.மு.க., தரப்பில் துவக்கத்தில் இருந்தே இறங்குமுகமாக தெரிந்ததால், கட்சி ஏஜன்டுகள் சோகத்துடன் எண்ணிக்கையை பார்த்து குறிப்பெடுத்தனர்.ஓட்டு எண்ணிக்கை நடந்த ஹாலில், ஒவ்வொரு மேஜையிலும் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. ஓட்டு எண்ணிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. கேமரா பதிவு செய்த காட்சிகள், மாவட்ட தேர்தல் அலுவலரான சமயமூர்த்தி அறையில் அமைக்கப்பட்டிருந்த, “எல்சிடி’ திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

அன்பழகனை வீழ்த்தினார் ஜே.சி.டி.பிரபாகர் : வில்லிவாக்கம் தொகுதி 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 9 லட்சத்து 41 ஆயிரத்து 112 வாக்காளர்களுடன், ஆசியாவின் மிகப் பெரிய சட்டசபை தொகுதியாக இருந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் 1 லட்சத்து 82 ஆயிரத்து 969 வாக்காளர்கள் உள்ளனர்.அ.தி.மு.க., சார்பில், ஜே.சி.டி,பிரபாகர் மற்றும் தி.மு.க., சார்பில் அன்பழகனும் போட்டியிட்டனர். மேலும், 2001, 2006ல் தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதி. அதேபோல், 1980ல் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகரே மீண்டும் போட்டியிட்டதால், இருதரப்பிலும் போட்டி கடுமையாக இருந்தது.அ.தி.மு.க.,வின் வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையின் போதும், அன்பழகனை விட தொடர்ந்து கூடுதல் ஓட்டுகளை பெற்றார். இறுதியில், தி.மு.க., வேட்பாளரை விட 10 ஆயிரத்து 782 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து, அ.தி.மு.க.,வினர் உற்சாகமடைந்து சாலையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், உற்சாகமாக கொண்டாடினர்.

தொடர் வெற்றியை சந்தித்த பன்னீர்செல்வம் தி.மு.க.,வின் அதிருப்தி அலையால் தோல்வி : கடலூர் தி.மு.க., மாவட்ட செயலராக பொறுப்பேற்றது முதல், பன்னீர்செல்வம், மாவட்டம் முழுவதும், பம்பரமாக சுழன்று கட்சியை வலுப்படுத்தினார். 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில், தொகுதி மாறி, குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். 2001ம் ஆண்டு, தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தி.மு.க., தலைமையை தன் பக்கம் திருப்பினார்.தொகுதி மாறி வந்த தன்னை வெற்றி பெறச் செய்த குறிஞ்சிப்பாடியின் வளர்ச்சியில், தனிக்கவனம் செலுத்தினார். அடிப்படை பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்தியதன் காரணமாக, அடுத்தடுத்த இரண்டு தேர்தலிலும் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், இம்மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களையும் வெற்றி மகுடம் சூட்டி அழகு பார்த்தார். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, தொகுதிக்கு தாலுகா அந்தஸ்து, அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, உயர்நிலைப் பள்ளி, போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட பல வசதிகளை ஏற்படுத்தி மகிழ்ந்தார்.மாவட்டத்தில் முக்கிய திட்டங்கள் அனைத்தும், குறிஞ்சிப்பாடியில் செயல்படுத்தியதால், மாவட்டத்தின் தலைநகர் கடலூரா, குறிஞ்சிப்பாடியா என கேள்வி எழுப்பும் நிலையில், குறிஞ்சிப்பாடி தொகுதி அபார வளர்ச்சி பெற்றது. இதனால், இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற கனவோடு களமிறங்கினார். தொகுதியில் செய்த சாதனைகளாலும், தனிப்பட்ட செல்வாக்கினாலும் வெற்றி நிச்சயம் என்கிற நிலை இருந்த போதிலும், தி.மு.க., ஆட்சிக்கு எதிராக வீசிய அலையில், அமைச்சர் பன்னீர்செல்வம் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வெளியூர் வேட்பாளர்களிடம் தோற்கும் பொன்முடியின் ராசி :தேர்தல்களில் வெளியூர் வேட்பாளர்களை எதிர்கொள்ளும் போது தோல்வியை தழுவும் அமைச்சர் பொன்முடியின் ராசி தொடர்கிறது.விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்ற தி.மு.க., அமைச்சர் பொன்முடி, மூன்று முறை அமைச்சராக இருந்துள்ளார். அடுத்து 1991ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., வேட்பாளர் ஜனார்த்தனனை எதிர்த்து போட்டியிட்ட போது, பொன்முடி தோல்வியடைந்தார். அதன்பின் உள்ளூர் பிரமுகர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று வந்த பொன்முடி, இந்த தேர்தலின் போது மீண்டும் வெளியூர் பிரமுகரான அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகத்தை எதிர் கொண்டார். இதனால், வெளியூர் பிரமுகரிடம் தோல்வியுறும் அமைச்சரின் பொன்முடி ராசி பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.இதிலெல்லாம் நம்பிக்கையில்லாத பொன்முடி, 1991ம் ஆண்டு தேர்தலில், ராஜிவ் கொல்லப்பட்டதால் தமிழகம் முழுவதும் தி.மு.க, தோல்வியடைந்தது. அந்த அலையில் விழுப்புரத்தில் தோல்வி ஏற்பட்டதாகவும், இந்த முறை ஏராளமான நலத்திட்டங்கள் செய்துள்ளதால் தான் வெற்றி பெறுவது உறுதியென நம்பிக்கையுடன் இருந்தார். எதிர்பாராதவிதமாக வெளியூர் பிரமுகரின் பொல்லாத ராசி விளையாடியதால், இந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s