ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை -ஜெயலலிதா………………..

சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயா தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. எனவே தமிழக அரசால், ஒரு மாநில அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மேல் செயல்படுவதென்றால் அது மத்திய அரசால் மட்டுமே, அதாவது இந்திய அரசால் மட்டுமே செய்ய முடியும்.

இருப்பினும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

முதல் தீர்வு – போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை, சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நடுவத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதை செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

இரண்டாவது தீர்வு- ஈழத் தமிழர்கள் கெளரவமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும். அதைச் செய்ய ராஜபக்சே மறுத்தால், இலங்கை அரசு மறுத்தால், இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.

அப்படிச் செய்தால், ராஜபக்சே பணிவதைத் தவிர, இலங்கை அரசு பணிவதைத் தவிர வேறு வழியில்லை. இதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

தமிழகம் இன்று சீர்குலைந்து போயிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிதிலமடைந்துள்ளது. சிதைந்து போன, சீரழிந்து போன வீடாக தமிழகம் இருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டும். ஒரு வீடு பாழடைந்து இருந்தால் வெள்ளையடித்து, மராமத்து செய்து சரி செய்யலாம். ஆனால் வீடு இடிந்து போயிருந்தால் அதைப் புதிதாகத்தான் கட்ட வேண்டும். தற்போது தமிழகத்தின் நிலை இடிந்து போன வீடாகத்தான் உள்ளது. எனவே அது மறுசீரமைத்து புதுப்பித்து புதிதாக கட்ட வேண்டியுள்ளது. அதை நான் செய்தாக வேண்டும்.

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் பொருளாதாரம் சீர்குலைவது வழக்கம். நான் முதலில் முதல்வராக இருந்து பின்னர் பதவியிலிருந்து அகன்று திமுக ஆட்சிக்கு வந்தபோதும் தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது திமுக. பின்னர் நான் ஆட்சிக்கு வந்தபோது கஜானா சுத்தமாக காலி செய்திருந்தது.

பின்னர் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும் கஜானாவைக் காலி செய்திருந்தது திமுக அரசு. அப்போது தமிழகத்தின் நிலை குறித்து அனைவரும் கவலைப்பட்டனர். நலிவடைந்து போயிருந்த இந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது என்று உலக வங்கியே கூறியது. இருந்தாலும் நான் அதைப் பொருட்படுத்தாமல் சவாலாக ஏற்று பொருளாதாரத்தை நிமிரச் செய்தேன். கடன்களையும் அடைக்க நடவடிக்கை எடுத்தேன்.

தற்போதும் கூட கஜானாவைக் காலி செய்துதான் வைத்திருக்கிறது திமுக அரசு. ரூ. 1 லட்சம் கடனை தமிழக அரசு வாங்கி வைத்துள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும். நான் சரி செய்வேன்.

பொருளாதார சீர்குலைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என தமிழகத்தை மீட்க வேண்டிய சுமையை மக்கள் என்னிடம் சுமத்தியுள்ளனர். அதை ஏற்று நான் தமிழகத்தை மீட்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

நான் மக்களுக்குக் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். ஐந்து ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருக்கப் போகிறோம். கடந்த 2006லிலேயே அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்னேரம் பீகார், குஜராத்தைத் தாண்டி நாம் முன்னேறியிருப்போம். அது நடக்காமல் போய் விட்டது.

இந்த முறை நாங்கள் சிறப்பாக செயல்பட்டு குஜராத், பீகாரை விட சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம்.

எனது உடனடி முக்கியத்துவம், சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான். அதேபோல நாங்கள் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்ற இலக்கு வைத்துள்ளோம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தற்போது சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணித்து வருகிறது. எனவே அதுகுறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை சுப்ரீ்ம் கோர்ட் பார்த்துக் கொள்ளும்.

இதுவரை இந்த ஆட்சியில் மக்கள் பெரும் பாடுபட்டு விட்டார்கள். இனிமேல் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. தங்களது துயரங்களை மறந்து விட்டு இனிமேல் சிரித்துக் கொண்டே இருக்கலாம். இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி, மக்களுக்கான வெற்றி. அவர்களுக்காக உழைக்க நாங்கள் தயாராகியுள்ளோம் என்றார் ஜெயலலிதா.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s