‘சில நேரங்களில் சில நண்பர்கள்…!’ – கருணாநிதி வேதனை

யாருக்கும் நான் கனவில் கூட தீங்கு எண்ணாத நேரத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களே ஏன் தான் என் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, தெரியவில்லை, என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர், முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இதோ ஒரு கடிதம்! இதனை யார் எழுதியது? எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது விளக்கிட இருக்கிறேன்.

என் வாழ்க்கையில் எத்தனையோ இனிய நண்பர்கள் – அரசியல் ஈடுபாடு காரணமாக – கலை, இலக்கிய தொடர்பு காரணமாக என்னுடன் பழகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் என் மீது எந்தக் குற்றமும் இல்லாமல், புராணீகர் மொழியிலே சொல்ல வேண்டுமென்றால் – விதி வசத்தாலோ அல்லது கால வித்தியாசத்தாலோ தோழமை உணர்வைத் துண்டித்துக் கொண்டார்கள் – நட்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் எதிர்முனையில் போய் நின்றுகொண்டு ஏசியும், பேசியும் எதிர்ப்புக் கணைகளை வீசியும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நட்பாக இருந்தபோது – அவர்கள்மீது கொண்டிருந்த பாசத்தை – நேசத்தை – பல்லாயிரம் முறை, பல கோடி முறை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான்; நான் எப்பொழுதுமே அப்படித்தான்!

சிறையிலிருந்து கடிதம்

நட்பு அறுந்து போய்விட்டது என்பதற்காக – நாராச மொழிகளில் நான் அவர்களை அர்ச்சித்தது கிடையாது. ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் பேசினார்கள்? எப்படியெல்லாம் எழுதினார்கள்? இப்பொழுதுகூட அந்த முறையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். எப்படி இருந்தவர்கள் – என் மீது எவ்வளவு அன்பு செலுத்தியவர்கள் – இப்போது காரணமின்றி நம் மீது சேறு வாரி வீசுகிறார்களே என்று எண்ணிக் கொண்டே – நான் படித்து முடித்த – புத்தக அடுக்குகளைப் பிரித்துப் பார்க்கும்போது – அதில் உள்ள ஒரு கடிதத்தைக்கண்டு, வியப்பு மேலிட்டவாறு – அதைப் படிக்கத் தொடங்கினேன்.

அதுதான் இதோ அந்தக் கடிதம்! முரசொலிமாறன் உடல்நிலை கேடுற்ற நிலையில் இருந்தபோது இந்தக் கடிதம் எனக்கு ஒரு சிறைச்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. எந்தச் சிறைச்சாலை? யார் எழுதியது? என்பதையெல்லாம் நீயே படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்!

“அன்பு கனிந்த தலைவர் கலைஞர் அவர்கட்கு,

சிறை வாழ்க்கையின் தனிமையும் வெம்மையும் எத்தகையது என்பதை என்னிலும் நன்குணர்ந்தவர் தாங்கள் என்பதால் “தொல்காப்பிய பூங்கா”வையே சிறைக்குள் அனுப்பி தமிழ் மணம் நுகர்ந்து மகிழச் செய்த தங்களின் உழுவலன்பு கண்டு நெகிழ்ந்தேன்.

மருத்துவமனையில் நான் இருந்த போது இள.புகழேந்தி என்னைச் சந்தித்து தங்கள் சார்பில் உடல்நலம் உசாவியதோடு “தொல்காப்பிய பூங்கா” நூலினை அளித்தபோது பெரும் புதையல் கிடைத்த மகிழ்ச்சியடைந்தேன். நூலினைப் படிக்கப் படிக்க நோயும் மறைந்தது, தனிமையும் பறந்தது.

நண்பர் மாறன் உடல்நிலை பற்றிய கவலை ஒருபுறம் வாட்ட, தமிழ் மீது தாங்கள் கொண்டுள்ள கரை காணாக் காதல் மறுபுறம் தூண்ட, தொல்காப்பியப் பூங்காவைப் படைத்தளித்தப் பாங்கினைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

அச்சமூட்டிய தொல்காப்பியம்

முதுகலைப் பட்ட வகுப்பில் எனது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் – எழுத்து – நச்சினார்க்கினியமும், தங்களின் ஆசிரியராக விளங்கியவரும் எனக்கும் ஆசிரியராக இருந்தவருமான மகா வித்வான் ச.தண்டபாணி தேசிகர் தொல்காப்பியம் – சொல் – சேனாவரையமும் – பேராசிரியர் மு.அண்ணாமலை தொல்காப்பியம் – பொருள் – இளம்பூரணமும் கற்பித்தனர். ஆனாலும் தொல்காப்பியம் படிக்கப் புகும்போதே இனம்புரியாத அச்சமும், தயக்கமும் மாணவப் பருவத்தில் என்னை வாட்டியதுண்டு. பெரும் பேராசிரியர்கள் பாடம் நடத்தி ஒருவாறாக அச்சத்தைப் போக்கினர்.

அந்த நாளிலேயே நீங்கள் “தொல்காப்பிய பூங்கா” நூலை எழுதியிருந்தால் தேவையற்ற அச்சமும், தயக்கமும் என்போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

கற்றறிந்த புலவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நூல் “தொல்காப்பியம்” என்ற நிலைமையை மாற்றி அனைத்துத் தமிழர்களும் விரும்பிச் சுவைத்துப் படிக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

தொல்காப்பியத்தின் சிறப்பை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, தங்களுக்கே உரிய அழகுத் தமிழில், உருவகக் கதைகளாக வடித்துத் தந்துள்ள தங்களின் இந்தத் தொண்டு தமிழர்களால் என்றென்றும் நன்றியோடு நினைவுகூரப்படும் என்பதில் ஐயம் இல்லை. நூலினைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைத்தபோது நூறு மலர்களோடு நிறுத்திவிட்டீர்களே என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.

சிறையிலிருந்தாலும் நினைவுகூர்ந்ததோடு தங்களின் பேரன்பினைப் பொதித்து நூலினை அனுப்பியமைக்கு என்றும் கடப்பாடுடையேன்.

தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை. தமிழன்னைக்கு மேலும் பல மலர்களைப் படைக்க வேண்டிக் கொண்டு, தங்களுக்குப் பல்லாண்டு! பல்லாண்டு! கூறுகிறேன்.

மாறன் பூரண நலம்பெற்றுத் தாயகம் திரும்பி, தனது பணியில் தொடர விழைகிறேன்.

பேராசிரியருக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் எனது அன்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

மீண்டும் எனது நன்றி!

அன்புள்ள,

பழ.நெடுமாறன்.

கடலூர் – சிறை,

14-2-03.

சில நேரங்களில்….

யார் எழுதிய கடிதம்? எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய்! இதைப்போல இன்னும் எத்தனையோ நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர்களுக்கு நான் கனவில்கூட தீங்கு எண்ணாத நேரத்தில், அவர்கள் ஏன் தான் என் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, எனக்குத் தெரியாது! தேவையில்லாமல் என்னைத் திட்டி எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்!

ஆனாலும் நான் முதலில் எழுதியபடி அவர்கள் மீது துவேஷத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. எப்படி இருந்தவர்கள், இப்படி மாறி விட்டார்களே, அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருக்கிறேன். இப்படிப்பட்டவர்களை நினைத்துத்தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்று என் நண்பர் ஜெயகாந்தன் எழுதினாரோ?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s