site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

உயரவில்லை ஓட்டுப்பதிவு: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

Posted by sambala87(சூரியன்) on May 10, 2011

தமிழக சட்டசபை தேர்தலில், மொத்த வாக்காளர்களான, 4.70 கோடி பேரில், 3.67 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். இதன் மூலம், தமிழக சட்டசபை தேர்தலில், 78.12 சதவீத ஓட்டுகள் பதிவானது என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடைத்தேர்தல்களை தவிர, எந்த சட்டசபை பொதுத்தேர்தல், லோக்சபா தேர்தலிலும், 75 சதவீதத்துக்கு அதிகமாக ஓட்டுப்பதிவு இதுவரை இருந்ததில்லை. கடந்த, 1952ல், ஆந்திராவை உள்ளடக்கிய, மதராஸ் மாகாணத்தில், 76 சதவீதம் அளவுக்கு ஓட்டுகள் பதிவானது. அதன்பின், இப்போது தான் ஓட்டுப்பதிவு சதவீதம், 78.12 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், உண்மையில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்தது என்றால், அதிக வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த, 2006 தேர்தலோடு ஒப்பிடும் போது, இந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்ததற்கு ஏற்ப, ஓட்டுப்பதிவு செய்த வாக்காளர்கள் எண்ணிக்கை உயரவில்லை என்பது அதிர்ச்சியான தகவல்.திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, பெரம்பலூர், தேனி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய, 16 மாவட்டங்களில், 2006ல் இருந்ததை காட்டிலும், 2011ல், வாக்காளர்களின் எண்ணிக்கை 2 முதல், 10 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதில் குறிப்பாக, திருவள்ளூர், ஈரோடு, கோவை, பெரம்பலூர், தஞ்சை ஆகிய ஐந்து மாவட்டங்களில், 2006ம் ஆண்டை காட்டிலும், 2011ம் ஆண்டு, 10 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில், ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையும், ஐந்து மாவட்டங்களில் ஓட்டுப்பதிவும் குறைந்திருக்கும் நிலையில், மாநில அளவில் ஓட்டுப்பதிவு சதவீதம் மட்டும் எப்படி அதிகரித்திருக்கும் என கேள்வி எழுந்துள்ளது.எஞ்சிய, 16 மாவட்டங்களில், வாக்காளர் எண்ணிக்கையும், ஓட்டுப்பதிவு சதவீதமும் அதிகரித்ததன் காரணமாக, இது ஈடுசெய்யப்பட்டிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டாலும், 78.12 சதவீதமாக ஓட்டுப்பதிவு சதவீதம் எப்படி உயர்ந்தது என்பது புரியாத புள்ளிவிவரமாக உள்ளது.

மாநிலத்தில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரிக்கும் போது, வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதே நியதி. இதன்படி, 2001ல், தமிழகத்தின் மக்கள் தொகை, 6.24 கோடியாக இருந்தது. அப்போது, வாக்காளர்களின் எண்ணிக்கை, 4.74 கோடியாக இருந்தது. 2011ல் தமிழகத்தின் மக்கள் தொகை, 7.21 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், வாக்காளர்களின் எண்ணிக்கை, 4.70 கோடியாக குறைந்துள்ளது தான் குழப்பம் ஏற்பட காரணம்.மக்கள் தொகை அதிகரித்த அளவுக்கு, தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில், நான்கு லட்சம் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தது எப்படி என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

தமிழகத்தில் மக்கள் எண்ணிக்கை உயர்வுக்கு ஏற்ப, சராசரியாக கணக்கிட்டால், வாக்காளர் எண்ணிக்கை, 5.20 கோடியாக இருந்திருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையுடன், இப்போது பதிவான ஓட்டுகளை ஒப்பிட்டு பார்த்தால், ஓட்டுப்பதிவு சதவீதம், 70.4 தான் வருகிறது.தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை, ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பலை, ஆளுங்கட்சி செய்த சாதனைகள், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்தால் ஏற்பட்ட எழுச்சி என, இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு ஏகப்பட்ட காரணங்கள் கூறப்பட்டன. படித்தவர்கள், பணக்காரர்கள், 18 வயதை கடந்த புதிய வாக்காளர்கள் என, அனைத்து தரப்பும் ஓட்டுச்சாவடியில் குவிந்தனர் என்பதும், “ஹம்பக்’ என்பதும் தெளிவாகிறது.

கடந்த 2006 தேர்தலில் ஓட்டளித்த வாக்காளர்கள் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், மொத்தமுள்ள, 54 ஆயிரத்து, 14 ஓட்டுச்சாவடிகளில், சராசரியாக ஒரு சாவடிக்கு, 71 பேர் மட்டுமே, இந்த தேர்தலில் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.இந்த புள்ளிவிவரங்கள், தமிழகத்தில் வரலாறு காணாத ஓட்டுப்பதிவு என்று பெருமிதப்பட முடியாத நிலையை ஏற்படுத்தியிருப்பது நிஜம். தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களையும், ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வருவதில் தேர்தல் கமிஷன் முழுமையான வெற்றியை பெறவில்லை என்பதும் தெளிவாகிறது. அடுத்து வரும் தேர்தல்களிலாவது, இந்த குளறுபடிகளை களைந்து, தகுதியான அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்த்து, ஓட்டளிக்க வைத்து, உண்மையாகவே ஓட்டுப்பதிவு சத வீதத்தை அதிகரித்து காட்டுவாரா?

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: