கடலூர் மாவட்டத்தில் கடைசி கட்ட நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில், தி.மு.க., அணியில், தி.மு.க., மூன்று தொகுதியிலும், பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகள் தலா இரண்டு தொகுதியிலும், காங்., மற்றும் மூ.மு.க., கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க., அணியில், அ.தி.மு.க., ஐந்து தொகுதியிலும், தே.மு.தி.க., மூன்று தொகுதியிலும், மா.கம்யூ., ஒரு தொகுதியில் போட்டியிட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான ஓட்டுகள் அடிப்படையிலான நிலவரம்:

திட்டக்குடி (தனி): வி.சி., வேட்பாளர் சிந்தனைச் செல்வன், கட்சியின் பொதுச் செயலர் என்பதால் நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் பம்பரமாக சுழன்று பணியாற்றியதால், தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் தமிழ் அழகன், அ.தி.மு.க.,வினரின் ஆதரவின்றி, தேர்தல் பிரசாரத்தில் திணறினார். தொகுதியில் பெண்கள் ஓட்டு அதிகளவில் பதிவாகியுள்ளது தனக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளார்.

விருத்தாசலம்: கடந்த தேர்தலில், இத்தொகுதியில் வெற்றி பெற்ற, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதோடு, தொகுதி பக்கமே வரவில்லை என்று பொதுமக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி, காங்., வேட்பாளர் நீதிராஜனுக்கு பெரிய பலம். மேலும், தன் கட்சியின் கூட்டணி பலம் மற்றும் தமிழக அரசின் இலவச திட்டங்கள் தம்மை கரை சேர்க்கும் என நம்பிக்கையோடு உள்ளார்.

விலைவாசி உயர்வினால் தமிழக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி, அ.தி.மு.க.,வினரின் அயராத உழைப்பு, கடைசி நேர கவனிப்பு வீண் போகாது என, தே.மு.தி.க., முத்துகுமார் கணக்கு போட்டுள்ளார். தொகுதியில், முடிவு இழுபறியாக இருப்பதாய் தொகுதிவாசிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

நெய்வேலி: புதிதாக உருவாக்கப்பட்ட இத்தொகுதியில், என்.எல்.சி., தொழிலாளர்களுக்காக பல போராட்டம் நடத்தியதால், வெற்றி உறுதி என, பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் நம்பினார். ஆனால், அவர்கள் கை கொடுக்காததால், அ.தி.மு.க., சிவசுப்ரமணியன் தெம்பாக உள்ளார். கடந்த முறை தபால் ஓட்டில் கரையேறிய வேல்முருகன், இந்த முறை, “வெற்றி’ முருகனாக மாறுவது கடினம்.

பண்ருட்டி: தே.மு.தி.க., சிவக்கொழுந்து தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் என்ற தகுதி மட்டுமே உள்ளது. ஆனால், தி.மு.க., சபா ராஜேந்திரனுக்கு அறிமுகம் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் பலம் மற்றும் பண பட்டுவாடா காரணமாக பிரகாசமாக உள்ளார். தொகுதியில், உதயசூரியன் உதிக்கும் என்ற குரல் அதிகமாய் எதிரொலிக்கிறது.

கடலூர்: தி.மு.க.,வின் கோட்டை என கருதப்படும் இத்தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத், தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி ஆகிய இருதரப்பிலும் பண பட்டுவாடா ஜோராக நடந்தது. இருப்பினும், நகரில் ஜவ்வாக இழுத்துக் கொண்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தால், கடந்த நான்கு ஆண்டுகளாக அவதிப்பட்ட நகர மக்கள், தி.மு.க., மீது கொண்ட அதிருப்தி, அ.தி.மு.க.,விற்கு சாதகமாக மாறியுள்ளது. அரசின் சாதனைகள் தன்னை கரை சேர்க்கும் என, புகழேந்தி நம்பியுள்ளார்.

குறிஞ்சிப்பாடி: மாவட்டத்திலேயே அதிகமாக, 86.38 சதவீதம் ஓட்டுப் பதிவாகியுள்ளது. தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வம் மூன்று முறை வெற்றி பெற்று, இருமுறை அமைச்சராகி தொகுதியை செழிப்பாக்கியவர். இந்த நம்பிக்கையில், நான்காம் முறையாக மீண்டும் அமைச்சர் ஆகி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

தொகுதியே வேண்டாம் எனக் கூறி வந்த, அ.தி.மு.க., சொரத்தூர் ராஜேந்திரன், கட்சி தந்த, “நம்பிக்கை’ மற்றும் கூட்டணி கட்சியினரின் அயராத உழைப்பினால் உற்சாகத்துடன் உள்ளார். இருதரப்பிலும் நடந்த பண பட்டுவாடாவால், வாக்காளர்கள் திக்குமுக்காடினர். தற்போதைய நிலவரப்படி, எளிதாக வெற்றி பெற வேண்டிய தொகுதியில், எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளார் பன்னீர்செல்வம்.

புவனகிரி: அ.தி.மு.க.,வில், “சிட்டிங்’ எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், பா.ம.க.,வில் அரியலூர் அறிவுச்செல்வன் வேட்பாளராக அறிவித்தது இரு கட்சிகளிலுமே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இருதரப்பிலும் சொந்த கட்சியிலேயே உள்ளடி வேலைகள் நடந்தன. இருப்பினும் தொகுதிக்கு அறிமுகமானவர் என்ற முத்திரையில் வெற்றி பெற்றிடுவோம் என்ற நம்பிக்கையில் செல்வி ராமஜெயம் வலம் வருகிறார்.

சிதம்பரம்: தி.மு.க., கூட்டணியில், மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையாரும், அ.தி.மு.க., அணியில், மா.கம்யூ., பாலகிருஷ்ணனுக்கும் போட்டி நிலவியது. மீனவர்களின் ஆதரவு பாலகிருஷ்ணனுக்கு திரும்பியுள்ளது. நடுநிலையாளர்களின் ஓட்டுகளை, பா.ஜ., வேட்பாளர் கண்ணன் கணிசமாக பிரித்துள்ளார். கூட்டணி பலம் கை கொடுக்காவிட்டாலும், கடைசி கட்ட பண பட்டுவாடா நிச்சயம் கை கொடுக்கும் என, ஸ்ரீதர் வாண்டையார் எதிர்பார்க்கிறார்.

காட்டுமன்னார்கோவில்: கூட்டணி பலத்தையும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கினாலும் வெற்றி பெற்றிடலாம் எனக் கருதி, வி.சி., சார்பில் களமிறங்கிய, “சிட்டிங்’ எம்.எல்.ஏ., ரவிக்குமாருக்கு, “தொகுதி பக்கமே வராதவர்’ என்ற அதிருப்தி பலமாக உள்ளது. உள்ளூர்காரர் என்ற அங்கீகாரத்தோடு, அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் முன்னணியில் உள்ளார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s