ஹெலிகாப்டர் ரகசியம்; அமெரிக்கா அச்சம்…

அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு விட்டாலும், அவரின் மரணத்துக்கு பின், பல மர்மங்கள் தொடர்ந்து கொண்டுதான், இருக்கின்றன. தாக்குதல் நடந்த அன்று, அமெரிக்க படையினர் எத்தனை ஹெலிகாப்டர்களில் வந்தனர் என்பது குறித்து, தினமும், புதுப் புது தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் விஷேசமாக வடிவமைக்கப்பட்டது குறித்தும், அவற்றில் ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும், அமெரிக்க பத்திரிகைகள் புதிய செய்திகளை வெளியிட்டவாறு உள்ளன.

அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது: ஹெலிகாப்டர் தேர்வு பின்லாடன் பதுங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டதுமே, தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க அரசு தயாரித்தது. தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்க கடற்படையின் “நேவி சீல்’ பிரிவு தேர்வு செய்யப்பட்டது. இந்த பிரிவைச் சேர்ந்த 79 வீரர்கள் தாக்குதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்ததாக, தாக்குதல் நடத்துவதற்கு விமானத்தை பயன்படுத்துவதா, ஹெலிகாப்டரை பயன்படுத்துவதா என்பதில், அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இறுதியாக, ஹெலிகாப்டரை தேர்வு செய்தனர்.

பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த இருப்பதால், அந்த நாட்டு அதிகாரிகளுக்கு, அதுபற்றி முன் கூட்டியே தகவல் தெரிந்து விடக் கூடாது என்பதில், அமெரிக்க அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதனால், “ஸ்டெல்த் சாப்பர்ஸ்’ என அழைக்கப்படும் ஹெலிகாப்டர்களை தேர்வு செய்தனர். முக்கியத்துவம் வாய்ந்த, ரகசியமான உளவுப் பணிக்காக, இந்த வகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது வழக்கம். எச் 60- பிளாக்ஹாவ்க் “சிகோர்ஸ்கை ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் தயாரிப்பான, எச்60-பிளாக்ஹாவ்க் ஹெலிகாப்டர்கள், தாக்குதலுக்கு சாதகமாக இருக்கும் என்று, அமெரிக்க ராணுவத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதில் இருந்து வெளிப்படும் இரைச்சலை குறைக்கும் வகையில், தொழில் நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, பிளாக்ஹாவ்க் ஹெலிகாப்டரில் தொழில் நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, நான்கு ஹெலிகாப்டர்கள் உருமாற்றி வடிவமைக்கப்பட்டன.

தொழில் நுட்ப மாற்றம் என்ன? இதற்கு முன் யாரும் பார்த்திராத வகையில், தாக்குதல் நடத்துவதற்கான ஹெலிகாப்டர்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டன. இதற்கான பணிகள் அனைத்தும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, இந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி, அதன் சுழலும் பிளேடுகள் ஆகியவை முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டன. குறிப்பாக, வால் பகுதி, வழக்கமான ஹெலிகாப்டர்களில் இருந்து, முற்றிலும் வேறுபட்டதாக மாற்றப்பட்டது. வால் பகுதியில் சுழலும் இயந்திரத்தில் வழக்கமாக வைக்கப்படுவதை விடு, கூடுல் பிளேடுகள் பொருத்தப்பட்டன. இதன் மூலம், ஹெலிகாப்டர் பறக்கும்போது, மிக குறைந்த இரைச்சல் தான் கேட்கும். வழக்கமாக ஹெலிகாப்டர்கள் தூரத்தில் வரும்போதே, அதன் இரைச்சல், அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கேட்கும். கூடுதல் பிளேடுகள் பொருத்தப்பட்டதால், ஹெலிகாப்டர் நம் தலைக்கு மேல் பறப்பதை பார்த்த பின்னர் தான், ஹெலிகாப்டர் பறக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் வகையிலான தொழில்நுட்பங்களும், இந்த ஹெலிகாப்டர்களில் வடிவமைக்கப்பட்டன. இதற்காக, எப்-117 ரக போர் வானூர்திகளில் இருப்பதைப் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்பின், இந்த ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவில் இருந்து, ஆப்கனின் ஜலலாபாத் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தாக்குதல் நடத்துவதற்காக பாகி ஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றன.

எத்தனை ஹெலிகாப்டர்கள்? தாக்குதல் நடத்துவதற்காக நான்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்தது. தாக்குதல் நடத்திவிட்டு புறப்படும்போது, ஒரு ஹெலிகாப்டரில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதை குண்டு வீசி தகர்த்து விட்டதாகவும் அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தாக்குதல் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால், அதில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது என்கின்றனர், பல்வேறு நாடுகளின் புலனாய்வு துறை அதிகாரிகள்.

இதுகுறித்து அவர்கள் கூறுவதாவது: தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில், ஒசாமா தங்கியிருந்த வீட்டின் சுற்றுச் சுவரில் ஒரு ஹெலிகாப்டர், மோதி, சாய்ந்து கிடப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி சேதமடையாமல் உள்ளது. அப்படியானல், ஹெலிகாப்டரை குண்டு வீசி தகர்த்ததாக, அமெரிக்க படையினர் கூறியது தவறான தகவலா? மற்றொரு புகைப்படத்தில், ஒசாமா தங்கியிருந்த வீட்டு காம்பவுண்டின் மற்றொரு பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் நொறுங்கி, தீப்பிடித்த நிலையில் சுக்கு நூறாகி கிடப்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க படையினர் குண்டு வீசி தகர்த்தது இந்த ஹெலிகாப்டர் தானா? அப்படியானால், சுற்றுச் சுவரில் மோதிய நிலையில் கிடக்கும் ஹெலிகாப்டர் எங்கிருந்து வந்தது? ஒசாமா வீட்டில் தங்கியிருந்தவர்களால், அந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அமெரிக்க படையினர் வந்ததாக கூறப்படும் ஹெலிகாப்டர்களில் இரண்டு ஹெலிகாப்டர்கள், அபோதாபாத்திலிருந்து, மீண்டும் புறப்பட்டுச் செல்லவில்லை என்று வைத்துக் கொண்டால், தாக்குதலுக்கு வந்திருந்த 79 வீரர்கள் மற்றும் ஒசாமாவின் சடலம், ஆவணங்கள் அனைத்தும், மீதமுள்ள இர ண்டு ஹெலிகாப்டர்களில் மட்டும் தான் எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. இரண்டு ஹெலிகாப்டர்களில் 79 பேர், பாதுகாப்பாக பயணம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. எனவே, அமெரிக்க படையினர், நான்கிற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களில் தாக்குதல் நடத்த வந்துள்ளனரா என்ற கேள்விக்கும் இதுவரை பதில் இல் லை.

ஹெலிகாப்டர்கள் தரை இறங்கியதா? தாக்குதல் நடத்துவதற்காக வந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கவே இல்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் தரை இறங்க முயற்சித்த ஹெலிகாப்டர், போதிய இடவசதி இல்லாததால், தரை இறங்கும்போது சுற்றுச் சுவரில் மோதி, விழுந்து இருக்கலாம். இதற்கு பின், மற்ற ஹெலிகாப்டர்கள் மிக குறைந்த உயரத்தில் வானில் வட்டமிட்டுக் கொண்டிருக்க, அதில் இரு ந்து கயிறு மூலம் இறங்கி, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தியிருக்க கூடும். தாக்குதல் முடிந்தபின், மீண்டும் கயிறு மூலமாகவே அவர்கள் ஹெலிகாப்டரில் ஏறிச் சென்றிருக்க வேண்டும். ஒசாமாவின் உடலையும், கயிறு கட்டித்தான், அவர்கள் மேலே தூக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முழுமையாக மறுக்கவும் முடியவில்லை.இவ்வாறு புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்ததன் முழு விவரத்தையும், அமெரிக்க அரசு வெளிப்படையாக தெரிவித்தால் மட்டுமே, மேலே கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும். இல்லையெனில், இது தொடர்பான மர்மங்கள், இன்னும் பல காலத்துக்கு பரப்பாக பேசப்படுவதை தவிர்க்க முடியாது.

ஹெலிகாப்டர் ரகசியம்; அமெரிக்கா அச்சம்: ஒசாமா மீது தாக்குதல் நடத்துவதற்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் தொழில் நுட்ப ரகசியம் வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதனால்தான், தொழில்நுட்பக் கோ ளாறு ஏற்பட்ட ஹெலிகாப்டரை குண்டு வைத்து தகர்த்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி, சேதம் அடையாமல் இருப்பது, புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது ஹெலிகாப்டரின் அந்த வால் பகுதி, பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை, தங்களிடம் ஒப்படைக்கும்படி, அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை, ஹெலிகாப்டரின் அந்த பாகத்தை, திருப்பிக் கொடுக்க, பாகிஸ்தான் மறுத்து விட்டால், என்ன ஆகுமோ என, அமெரிக்க அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். ஹெலிகாப்டரின் அந்த பாகத்தை, சீனாவுக்கு பாகிஸ்தான் அரசு கொடுத்து விடும் என்றும், இதனால், அதன் தொழில்நுட்ப ரகசியத்தை, சீனா தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்றும் அமெரிக்கா கலக்கம் அடைந்துள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s