யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து வாழ்ந்த பின்லேடன்

பின் லேடனை அமெரிக்க கமாண்டோ வீரர்கள் சுட்டுக் கொன்று உடலை எடுத்து வருவதை விடியோ காட்சிகளாக நேரடியாகவே பார்த்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. ஆனால் அனைத்தும் எந்தவிதப் பின்னணிக் குரலும் ஓசையும் இல்லாமல் மெüனப் படமாகவே இருந்தது. அதே சமயம் ஒபாமாவும் மற்றவர்களும் அவ்வப்போது பொருள்பொதிந்த விமர்சனங்களை உதிர்த்துக் கொண்டே இருந்தனர்.

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பாப் உட்வர்ட் என்ற பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளர் இதைப் பற்றியும் பின் லேடனின் தலைமறைவு வாழ்க்கை பற்றியும் சுவையாகப் பல தகவல்களைத் தெரிவிக்கிறார்.

“பின் லேடனை சுட்டுக் கொன்ற பிறகு அவருடைய உயரம் என்ன என்று தெரிந்துகொள்ள கமாண்டோ வீரர்கள் விரும்பினர். கையில் இஞ்ச் டேப் எதுவும் இல்லாததால் 6 அடி உயரம் உள்ள கமாண்டோ வீரரை லேடனின் சடலத்துக்குப் பக்கத்தில் படுக்கவைத்து உயரத்தை உத்தேசமாக குறித்துக் கொண்டனர்.

இந்தக் காட்சியை விடியோவில் பார்த்துக்கொண்டிருந்த அதிபர் ஒபாமா பக்கத்தில் இருந்தவரிடம், “600 லட்சம் டாலர் மதிப்புள்ள ஹெலிகாப்டரையே அங்கே அழியவிட்டிருக்கிறோம், அற்ப வஸ்து ஒரு இஞ்ச் டேப்பைக் கையோடு எடுத்துப் போயிருக்கக்கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். இறந்த லேடனுடன் உயிரோடு இருக்கும் கமாண்டோ படுத்ததை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

லேடனுடன் இருந்த அபு அகமது அல் குவைதி என்பவர் ஓராண்டுக்கு முன்னால் அவருடைய நெருங்கிய நண்பருடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்தான் லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்க உளவுப்படை அறிய உதவியது.

அல் குவைதியின் நண்பர் ஒருவர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “என்னப்பா எங்கே இருக்கிறாய், ரொம்ப நாளாகவே உன்னைப் பார்க்க முடியவில்லையே? என்ன நடக்கிறது உன் வாழ்க்கையில்? இப்போது என்ன செய்கிறாய்?’ என்று கேட்கிறார்.

அல் குவைதி சற்றே ஆயாசமாக, சுரத்தே இல்லாமல் பதில் சொல்கிறார்; “முன்னால் இருந்த அதே மக்களுடன் மீண்டும் இருக்கிறேன்’ என்று பதில் அளிக்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் இருவரும் பேசாமலே மெüனம் நிலவுகிறது. “அப்படியா கடவுள் எல்லாம் நல்லபடியாக இருக்க உதவட்டும்’ என்கிறார். இந்த பதில்தான் சி.ஐ.ஏ. உளவாளிகளுக்கு துப்பு துலக்க உதவியது. யாரோ முக்கியப் பிரமுகர்களுடன் அல் குவைதி தலைமறைவாக வாழ்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது.

இதைப் பற்றிப் பேசிய ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் கேலியாக, நாம் திரைப்படத்தின் முதல் காட்சியாக இந்த தொலைபேசி உரையாடலைத்தான் படம் பிடிக்கிறோம் என்றார். ஆனால் அல் குவைதியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. உளவுப்படைப் பிரிவினர் தொலைபேசி உரையாடலைக் கேட்டுவிடுவார்கள், தொலைக்காட்சி கேபிள் வழியாகக்கூட உளவு பார்ப்பார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அந்த வீட்டில் தொலைபேசி, தொலைக்காட்சி இணைப்புகள் ஏதும் இல்லை.

அல் குவைதி ஏதாவது பேச வேண்டியிருந்தால் அந்த வீட்டிலிருந்து காரில் ஏறி சுமார் ஒன்றரை மணி நேரம் ஏதாவது ஒரு திசையில் பயணம் செய்வார். பிறகு அங்கே போய் யாருக்கும் தெரியாத இடத்தில் தன்னுடைய செல் போனைக் கையில் எடுத்து அதில் பேட்டரியை அங்கேதான் போட்டுக் கொள்வார். அதன் பிறகே பேச ஆரம்பிப்பார். தான் பேச வரும் விஷயத்தையும் நேரடியாகக் கூறாமல் சங்கேத வாக்கியங்களாகவே பேசுவார். அப்படியும் உளவுப்படையின் நிபுணர்கள், எல்லா நேரத்திலும் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வோடு பேசுகிறார் என்பதை வைத்து, இதைத்தான் சொல்கிறார், இதைத்தான் செய்யப் போகிறார் என்று ஊகித்துவிட்டனர்.

அதன் பிறகு பின் லேடன் குடியிருந்த வீட்டைத் தொலைவிலிருந்து கண்காணிக்கும் வகையில் மற்றொரு வீட்டை சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் வாடகைக்கு அமர்த்தினார்கள். அந்த வீட்டில் யாரோ ஒருவர் சூழ்நிலைக் கைதி போல எப்போதும் அடைபட்டுக் கிடந்ததைப் பார்த்தார்கள். அவர் எப்போதாவது வெளியே உலாவினார். அவருடைய உயரம் எவ்வளவு என்று அறிந்துகொள்ள சி.ஐ.ஏ. உளவாளிகள் விரும்பினர். உடனே அமெரிக்க செயற்கைக்கோள் உதவியை நாடினர். அந்த செயற்கைக் கோள் அந்த வீட்டை அப்படியே தன்னுடைய கேமரா கண்ணில் நெருங்கிப் பார்த்து, அவர் உயரம் சுமார் 6 அடி என்று தெரிவித்தது. இப்படி ஒவ்வொரு விஷயமாக தொகுத்துத்தான் பின் லேடன் அங்கிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

ஐ.எஸ்.ஐ. தலைவர் அமெரிக்கா பயணம்: சி.ஐ.ஏ. அளித்த தகவலின் பேரில்தான் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது. அதனிடம் கோடிக்கணக்கான ரூபாயை வாங்கிக்கொள்ளும் ஐ.எஸ்.ஐ. விசுவாசமாக இருக்கவில்லை. எனவே அதன் தலைவருடைய பதவிக்கு வந்தது ஆபத்து என்று பேசிக்கொள்கிறார்கள். இதை நிரூபிப்பதைப் போல பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தலைவர் சுஜத் பாஷா அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். அப்படிப் போவதற்கு முன்னால் இஸ்லா மாபாதிலேயே இருக்கும் சி.ஐ.ஏ. ஏஜெண்டைச் சந்தித்து, உங்களுக்கு எவ்வளவு சகாயங்களை நாங்கள் செய்திருக்கிறோம், பின் லேடன் இருப்பது எங்களுக்கே தெரியாதே, நீங்கள் சுட்டுக் கொன்று சடலத்தை எடுத்துச் சென்ற பிறகுதானே எங்களுக்கே தெரிந்தது என்றெல்லாம் பசப்பியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் ஆதிக்கம் செலுத்திய நாளிலிருந்து நேற்றுவரை ஐ.எஸ்.ஐ.யில் யாரெல்லாம் அதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள், அவர்களுடைய பின்புலம் என்ன என்றெல்லாம் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ. அமைப்பிலேயே அல் காய்தா ஊடுருவியிருக்கிறதா என்றும் பார்க்கப் போகிறார்கள். இதை அமெரிக்கப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s