பாடம் நடத்தும் தகுதி ஆசிரியர்களுக்கு இருக்கிறதா?

மாணவர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பெண் போடும் ஆசிரியர்கள், விரைவில் அவர்கள் தேர்வெழுதி மதிப்பெண்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை, ஏற்பட உள்ளது. இது, ஆசிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், வேறு வழியில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, தகுதித்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான், “பாஸ்!’ இல்லையென்றால், திரும்ப, திரும்ப எழுத வேண்டும்.

நாடு தழுவிய அளவில், பள்ளிக் கல்வித் துறையில் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களின் திறமையை சோதிக்கும் வகையில், தேர்வுகளை நடத்தி, “ரிசல்ட்’ வெளியிட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து வகையான பள்ளிகளிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்கள், இந்த தகுதித் தேர்வை (Teacher Eligiblity Test) எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

இது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கி, அதற்கான சுற்றறிக்கையை, என்.சி.இ.ஆர்.டி., அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதன் விவரம்: அடிப்படைக் கல்வியை தரமானதாக வழங்க வேண்டுமெனில், ஆசிரியர்கள் தரமானவர்களாகவும், தகுதி வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போது தான், மாணவர்களுக்கு தரமான ஆரம்பக்கல்வி கிடைக்கும். இதை உறுதி செய்யும் வகையில், அனைத்து வகையான பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை, மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் நடத்தும். தேர்வை நடத்த, மாநில அரசுகளுக்கு விருப்பம் இல்லையெனில், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள், மத்திய அரசு நடத்தும் தேர்வை எழுத வேண்டும். ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர்களை நியமிப்பதில், தேசிய அளவிலான தரத்தை கடைபிடிக்க, இந்த தகுதித்தேர்வு உதவும். அத்துடன், பணியில் இருக்கும் ஆசிரியர்கள், தங்களின் தகுதியை உயர்த்திக்கொள்ளவும், இத்தேர்வு துணை புரியும். இரு வகை: ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும் தேர்வு நடத்தப்படும். நான்கு விடைகளில் ஒன்றை தேர்வு செய்யும் முறை அடிப்படையில், ஒவ்வொரு கேள்வியும் ஒரு மதிப்பெண் கொண்டதாக, தேர்வு இருக்கும். “நெகட்டிவ்’ மதிப்பெண் கிடையாது.

முதல் வகை தேர்வு, 150 மதிப்பெண்கள். இதில், குழந்தை மேம்பாடு மற்றும் ஆசிரியர் போதனை முறையில், 30 கேள்விகள், மொழி முதற்தாளில், 30 கேள்விகள், இரண்டாவது மொழித்தாளில், 30 கேள்விகள், கணிதத்தில், 30 கேள்விகள், சுற்றுச்சூழல் கல்வியியல், 30 கேள்விகள் என, 150 கேள்விகள் இடம்பெறும். இரண்டாவது வகை தேர்வில், குழந்தை மேம்பாடு, இரு மொழித்தாள்கள் ஆகியவை சார்ந்த கேள்விகளுடன் (மொத்தம் 90 கேள்விகள்), கணிதம் மற்றும் அறிவியலில், 60 கேள்விகள் இடம்பெறும். இதில், 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான், “பாஸ்!’ இல்லையென்றால், திரும்ப எழுத வேண்டும். இந்த வகை தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். ஆசிரியர் கல்வித்தகுதி கொண்ட அனைவரும், இந்த தேர்வில் பங்கேற்கலாம். ஆனால், பணி நியமனத்தில் இது ஒன்றும் தகுதியாக அர்த்தம் கொள்ளக்கூடாது. இவ்வாறு என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

ஆசிரியர் கல்வித்துறையிடம் பொறுப்பு ஒப்படைப்பு? தமிழகத்தில், ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை நடத்தி, முடிவுகளை வெளியிடும் பொறுப்பு, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களும், புதிய அரசு அமைந்தபின் வெளியாக உள்ளது. இந்த தேர்வு முறை நடைமுறைக்கு வந்ததும், அரசுப் பணியில் இல்லாதவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால், பணி நியமனத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தெரிகிறது. தற்போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடந்து வருகிறது. இனி, பதிவு மூப்பு தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்களும் கணக்கில்கொண்டு, பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s