அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்…

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் அருகே, முதல்வர் டோர்ஜி உட்பட ஐந்து பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தன. டோர்ஜி காண்டுவின் உடலை அவரது உறவினர் அடையாளம் காட்டினார். அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு(56). கடந்த 30ம் தேதி, தவாங்கில் இருந்து இடா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன், இரண்டு பைலட்கள், அவரின் பாதுகாப்பு அதிகாரி, தவாங் நகர எம்.எல்.ஏ.,வின் சகோதரி யேசி தாமு மற்றும் நான்கு பேர் பயணித்தனர். தவாங்கிலிருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குள், ஹெலிகாப்டர் உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணி, கடந்த ஐந்து நாட்களாக நடந்தது. ராணுவம், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் உட்பட 3,000 பேர், தேடுதலில் ஈடுபட்டனர். இது தவிர, ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களும், வான்வழி தேடுதலில் ஈடுபட்டன. இந்நிலையில், தவாங் மாவட்டத்தில் லோப்தாங் அருகே ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடப்பதை, கிராம மக்கள் நேற்று காலை பார்த்தனர். ஜாங் அருவி பகுதியில் ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடந்த இடங்களில் கிராமத்தினர் தேடிப் பார்த்தனர். அங்கே அழுகிய நிலையில் உடல்கள் இருந்ததை கண்டனர். டோர்ஜியின் உடலை அவரது உறவினரும், ஊராட்சித் தலைவருமான துப்தென் அடையாளம் காட்டினார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம், லோப்தாங்கிலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது. மலைகள் சூழ்ந்த, அடர்ந்த பனிப் பிரதேசம். கடல் மட்டத்தில் இருந்து, 13 ஆயிரத்து, 200 அடி உயரத்தில் உள்ளது. வாகனங்களில் செல்ல முடியாது; கால்நடையாகத்தான் செல்ல முடியும். திம்பு அருகேயுள்ள இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிலிருந்து, 18 கி.மீ., தூரம் உள்ளது. நடந்து செல்வதற்கு 6 மணி நேரமாகும். எனவே, உடல்களை மீட்புக்குழுவினர் எடுத்து வருவதற்கே அதிக நேரம் பிடிக்கும் என, தவாங் நகர போலீசார் தெரிவித்தனர். ராஜ்யசபா உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான முகுத் மிதி கூறுகையில், “”உள்ளூர் கிராம மக்கள் ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் உடல்களை பார்த்து, டோர்ஜியின் உடலை அடையாளம் கண்டுள்ளனர். சிலரது உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காண முடியவில்லை. இத்தகவலை இன்று (நேற்று) காலை 10 மணிக்கு போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தகவல் வந்ததும், தவாங் நகர எம்.எல்.ஏ.,வும், டோர்ஜியின் சகோதரருமான தேஸ்வாங், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளார். விபத்து நடந்த இடம், வாகனங்கள் பயணிப்பதற்கு சிரமமான மலைப்பகுதி என்பதால், டோர்ஜியின் உடலை கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது,” என்றார்.

சிதம்பரம் பேட்டி: நேற்று காலை டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “”அருணாச்சல பிரதேச முதல்வர் குறித்த தகவல் வருத்தமளிப்பதாக உள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும் விவரங்களுக்காக காத்திருக்கிறோம்,” என்றார்.

மத்திய அமைச்சர் பி.எச்.ஹண்டிக் கூறுகையில், “”டோர்ஜியின் உடலை மண்டல கமிஷனர் கொண்டு வந்து, நடைமுறைகளை முடித்த பின்னரே, டோர்ஜி குறித்த செய்தியை உறுதிப்படுத்த முடியும். டோர்ஜியின் உடல், தவாங்கிலுள்ள அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்படும். இறுதிச் சடங்குகள் தவாங்கிலும், இடா நகரிலும் அரசு மரியாதையுடன் ஒரே நேரத்தில் நடக்கும்,” என்றார்.

பிரதமர் வருகை: மறைந்த அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் இடா நகர் வருகின்றனர். டோர்ஜியின் மறைவை கேட்டு, அருணாச்சல பிரதேச மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இடா நகரிலுள்ள டோர்ஜியின் இல்லத்தில் எம்.எல்.ஏ.,க்களும், அதிகாரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் சோகத்துடன் குழுமியுள்ளனர்.

தாக்குதல்: டோர்ஜி பயணம் செய்த ஹெலிகாப்டர், பவன் ஹன்சுக்கு சொந்தமானது. டோர்ஜியின் மறைவு செய்தி கேட்டதும், கோபமுற்ற இளைஞர்கள் சிலர், இடா நகரிலுள்ள பவன் ஹன்ஸ் நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், நாற்காலிகளையும், மேஜைகளையும் அடித்து நொறுக்கினர்; புக்கிங் கவுன்டரையும் அடித்து நொறுக்கினர். அலுவலகத்தை தாக்க கும்பலாக வருகின்றனர் என்ற தகவல் கிடைத்ததுமே, இங்கு பணியாற்றிய ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இரண்டாவது முதல்வர்: குறுகிய காலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இரண்டாவது முதல்வர் டோர்ஜி. இதற்கு முன், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, 2009ம் ஆண்டு, இதே போல் ஹெலிகாப்டரில் பயணம் செய்து உயிரிழந்தார்.

டோர்ஜி காண்டு யார்? : அருணாச்சல பிரதேச முதல்வரான டோர்ஜி காண்டு, 1955ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி, ஜியாங்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். 2007, ஏப்., 9ம் தேதி, காங்., சார்பில் அருணாச்சல பிரதேசத்தின் ஆறாவது முதல்வராக பதவியேற்றார். ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு நான்கு மனைவிகள், ஐந்து குழந்தைகள் உள்ளனர். டோர்ஜி காண்டு அரசியலில் நுழைவதற்கு முன், இந்திய ராணுவத்தின் உளவுத்துறையில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். வங்கதேசம் உருவாக காரணமான கிழக்கு பாகிஸ்தானுடன் (1971) நடந்த போரின் போது, உளவுத் துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக தங்கப்பதக்கம் பெற்றார். இதற்கு பின் டோர்ஜி காண்டு, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், தவாங் மாவட்டத்தில் சமூக சேவை பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். தனது சமூகப் பணிகளின் மூலம் பின்தங்கிய கிராமப்புற பகுதிகளுக்கு கல்வி, குடிநீர், மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்தினார்.

போட்டியின்றி வெற்றி: அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு 1990ல் நடந்த தேர்தலில், திங்பு – முக்டோ தொகுதியிலிருந்து போட்டியின்றி, முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு அடுத்த 1995 சட்டசபை தேர்தலிலும் இதே தொகுதியிலிருந்து மீண்டும் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை முதன்முறையாக அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 1999ல் அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சரானார். 2004ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, மின்துறை அமைச்சரானார். முதல்வராக இருந்த ஜிகாங் அபாங் ராஜினாமா செய்ததையடுத்து, முதல்வர் பதவிக்கு டோர்ஜி காண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியின்றி வெற்றி பெற்று, அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார். ஐந்து முறை எம்.எல்.ஏ.,வான இவர், அதில் மூன்று முறை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த முதல்வர் யார்? கிளம்பிவிட்டது சர்ச்சை : டோர்ஜியின் மறைவையடுத்து, அருணாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை துவங்கிவிட்டது. அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகி விட்டார் என்ற செய்தி வந்ததும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் இருந்து டோர்ஜியின் உடலை கொண்டு வருவதே சிரமம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் பலர், அடுத்த முதல்வர் யார் என்பதில் கவனம் செலுத்த துவங்கிவிட்டனர். மாநில உள்துறை அமைச்சராக உள்ள டகோ டபிக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் நபாம் துகிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. லோக்சபா உறுப்பினர் தகம் சஞ்சயும், முன்னாள் முதல்வரும் ராஜ்யசபா உறுப்பினருமான முகுத் மிதியும் முதல்வர் பதவிக்கு போட்டி போடுகின்றனர். முதல்வர் இடத்தைப் பிடிப்பதில் போட்டி வந்துள்ளதை அடுத்து, மாநிலத்தில் நிலைமையை கண்காணிப்பதற்காக மத்திய அமைச்சர்கள் நாராயணசாமியையும், முகுல் வாஸ்னிக்கையும் உடனடியாக இடா நகர் செல்லும்படி மத்திய அரசு பணித்தது. இதையடுத்து, அவர்கள் நேற்று காலை இடா நகர் வந்து கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் ஹாண்டிக் இது பற்றி கூறுகையில், “”அடுத்த முதல்வர் யார் என்பது பிறகு முடிவு செய்யப்படும். இப்போது டோர்ஜியின் உடலை கொண்டு வருவதிலும், இறுதிச் சடங்கிலும் தான் கவனம் செலுத்துகிறோம். டோர்ஜிக்கு அடுத்து யார் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார்.

முந்தைய ஹெலிகாப்டர் விபத்துகள் : “பவன் ஹன்ஸ்’ எனும் ஹெலிகாப்டர் நிறுவனம் 1985ம் ஆண்டு துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம். இந்திய மாநிலங்களுக்கு குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் தான், அருணாச்சல பிரதேச முதல்வர் நேற்று முன்தினம் பயணம் செய்தார். இந்நிறுவன ஹெலிகாப்டரின் முந்தைய விபத்துகள்:
* 2004, செப்., 22: மேகாலயா மாநில அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட 10 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.
* 2010, டிச., 16: பஞ்சாப் மாநில அமைச்சர் ஒருவரும், பைலட்டும் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம்.
* 2011, ஏப்., 19: கவுகாத்தியிலிருந்து, இடா நகருக்கு கிளம்பிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலி.
* 2011, ஏப்., 30: அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு உள்ளிட்ட நான்கு பேர் பயணம் செய்த பவன் ஹன்ஸ் ஏ.எஸ்.350 பி-3 என்ற ஹெலிகாப்டர், காட்டில் விழுந்து நொறுங்கியது. டோர்ஜி இறந்தார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s