வல்லரசுகளின் தீவிரவாதம் அங்கீகரிக்கப்படுகிறதே…

பாகிஸ்தானில் மறைவிடத்தில் வசித்துவந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க தனிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது, அமெரிக்க அரசையும் அமெரிக்கர்களையும் மிகப்பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவிக் கிடப்பதால், இந்த வெற்றியை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியிருக்கின்றன. தீவிரவாத அமைப்பான அல்காய்தா மீதான இந்த பலத்த அடி உலக அளவில் பரவிக் கிடக்கும் வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும், பாண்டியன் பிரம்படிபோல, வலியை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புதான் காரணம்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகளைக் கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை இன்று கொன்றுவிட்டோம் என்று உலகுக்குச் செய்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தப் போர் முந்தைய அதிபர் கூறியதைப் போல இஸ்லாமியருக்கு எதிரான போர் அல்ல. இது இஸ்லாமியர்களையும் கொன்று தீர்த்தவனும் இஸ்லாமியர்களில் ஒருவனுமான தீவிரவாதிக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், பின்லேடன் போன்ற ஒரு தீவிரவாதியை உருவாக்கியது அமெரிக்காவின் பணமும், அமெரிக்காவின் பேராசையும், ஆப்கனிஸ்தானில் அமெரிக்காவின் அத்துமீறலும்தான் என்பதையும் அவர் நினைவுகூர்ந்திருக்க வேண்டிய தருணம் இது. அமெரிக்காவால் உருவான தீவிரவாதம், அமெரிக்காவை மட்டுமல்ல, வளரும் நாடாகிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ளது. புதிய தீவிரவாதிகளை அல்காய்தா வளர்த்தெடுக்கும் நிலையையும் உருவாக்கியது.

இன்று தங்களால் வளர்க்கப்பட்ட முன்னாள் நண்பனான இந்நாள் எதிரியை அமெரிக்கா வீழ்த்தி இருக்கிறது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். இதில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுக்கே பின்லேடனைக் கொன்று பழிதீர்க்க பத்து ஆண்டுகள் ஆனது என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகளால் இந்தத் தீவிரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது நினைக்கவே வேதனை தருவதாக இருக்கிறது.

அமெரிக்காவுக்கு வலிமை இருக்கிறது, பணம் இருக்கிறது, ஆகையால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன் ஆப்கன் தேசத்துள் புகுந்து ஆட்சியை மாற்றிவிட்டு, தேடுதல் வேட்டையை நடத்த முடிகிறது. பாகிஸ்தானுக்கு ஆயிரமாயிரம் கோடி பணத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டு, அவர்கள் பின் லேடனை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், புன்னகையுடன் உறவாடவும், மிரட்டவும் முடிகிறது. இல்லையென்றால், பாகிஸ்தானுக்குள், அமெரிக்கா ஒரு தனிப்படையுடன் நுழைந்து, பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்ப முடியுமா?

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர்களைப் பெயரைக் குறிப்பிட்டு பிடித்துக் கொடுங்கள் என்று கேட்டாலே, இந்தியாவை உதாசீனப்படுத்தும் பாகிஸ்தான், இதுவரை தனது நாட்டுக்குள் அமெரிக்காவின் ஒரு சிறிய தனிப்படை உள்ளே வந்து பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றது பற்றி வாய்மூடி ஒரு வார்த்தை பேசாமல் மவுனியாக இருக்கிறதே, அதை என்னவென்று சொல்வது?

இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தபோது, அந்த சிறிய தனிப்படை குறித்த கேள்விக்கு அவர்கள் அளித்த ஒரே பதில், இந்த நேரத்தில் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பதுதான். உங்கள் தாக்குதல் திட்டத்தை பாகிஸ்தானுக்குச் சொல்லிவிட்டு அங்கே போனால், பின்லேடனைத் தப்பிச்செல்ல விட்டுவிடுவார்கள் என்று கருதித்தான் நீங்கள் அவர்களிடம் சொல்லவில்லையா என்ற கேள்விக்கும் இந்த நேரத்தில் இதுபற்றி பேச வேண்டாம் என்பதுதான் அவர்களது பதில்.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் முகம் கிழிந்து அம்பலப்பட்டிருப்பது பாகிஸ்தான். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது என்ற குற்றச் சாட்டை ஆயிரம் முறை மறுத்த பாகிஸ்தான் இனி எந்த முகத்தோடு மற்ற நாடுகளுடன் பேசும்? எத்தனை பொய்கள், என்னென்ன கதைகள்! அத்தனையும் இன்று அம்பலமாகிவிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மிகப் பெரிய மாளிகையில் சகோதரர் மற்றும் தனது இளம்மனைவி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்களுடன் இருப்பதை இத்தனை காலமும் கண்காணித்து, அது பின்லேடன்தான் என்பதை உறுதி செய்து 40 நிமிடத்தில் கதையை முடித்த அமெரிக்காவின் சாதனை பாராட்டுக்குரியதுதான்.

சுட்டுக்கொல்லப்பட்ட அடுத்த நிமிடம் இந்தத் தகவலை, அமெரிக்க அதிபர் தனது முந்தைய அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரிடம்தான் சொல்கிறார். அவர்கள் தேசத்தை ஒன்றாகப் பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் அமெரிக்கா அயோக்கியத்தனம் செய்கிறது என்று சொன்னாலும், இந்த அரசியல் பலம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படையாக இருக்கிறது.

பாகிஸ்தான் சும்மா இருக்குமேயானால், இந்தியாவின் சிறியதொரு தனிப்படை அங்கே சென்று, மும்பைத் தாக்குதலில் 200 பேரைக் கொன்று குவித்தவர்களைப் பிடித்து, இந்தியாவுக்கு கொண்டுவரவும் முடியும். இந்திய ராணுவத்திடமும் புலனாய்வுப் பிரிவிடமும் அதற்கான திறமையும் இருக்கிறது. இந்தியாவுக்கு அரசியல் பலம்தான் இல்லை.

உள்ளவன் சொல்வதெல்லாம் உண்மையல்லாமல் என்ன, வென்றவன் சொல்வதெல்லாம் வேதமல்லாமல் என்ன, என்பார் கவியரசு கண்ணதாசன். உண்மை. அமெரிக்கா செய்தால் அது சாதுர்யம், சாகசம், நியாயம். இந்தியாவோ, வேறொரு நாடோ செய்தால், அது அந்நிய நாட்டுக்குள் நடத்தப்பட்ட அத்துமீறல். ஒரு பயங்கரத் தீவிரவாதி கொல்லப்பட்டான் என்று மகிழ்ச்சியும் அடையலாம். வல்லரசுகளின் அதிகாரபூர்வமான தீவிரவாதம் அங்கீகரிக்கப்படுகிறதே என்று வருத்தமும் படலாம். அது, அவரவர் பார்வையைப் பொருத்தது!

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s