மறைமுக “உள்ளடி’ வேலைகள் ….

தேர்தல் களத்தில் சாதனைகள், எதிர்ப்புகள், குற்றச்சாட்டுகள், ஜாதி ஓட்டுகள் என, வெற்றியை தீர்மானிக்கும் பல சக்திகள் இடம்பெற்றிருக்கும். இந்த பட்டியலில், “உள்ளடி வேலை’யும் இப்போது ஒன்றாகியுள்ளது. இதன் காரணமாக, பல வேட்பாளர்களின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. சில தொகுதிகளில் நடந்த, “உள்ளடி வேலை’களின் தொகுப்பு இது: கொ.மு.க.,வுக்கு பின்னடைவு: நாமக்கல் தொகுதி, தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்படும் என, அக்கட்சியைச் சேர்ந்த பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியிலும் நமக்கு கிடைக்குமா என்ற ஆவல் இருந்தது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதி, கொ.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில், தேவராஜன் போட்டியிட்டார். தொகுதி தி.மு.க.,வை விட்டு கை நழுவியதால், அதிருப்தியில் இருந்த தி.மு.க.,வினர், பிரசாரத்தில் உள்ளடி வேலை செய்யத் துவங்கினர்.

ஓட்டுக்காக வழங்கிய, “வைட்டமின் ப’வை, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் அப்படியே சுருட்டினர். இது, தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளின் காதுக்கு எட்டிய போதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதே போல், காங்கிரசாரும் செய்தனர். கூட்டணியினர் தான் இப்படி என்றால், சொந்த கட்சியினரே மாவட்ட செயலர் தலைமையில், கொ.மு.க.,வேட்பாளரின் காலை வாரத் துவங்கினர். இப்படி, சொந்த கட்சி, வந்த கட்சிகளின் உள்ளடிகளால், கொ.மு.க., கடும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

“கல்தா’ கொடுக்கப்பட்டவருக்கு சீட்: குமாரபாளையம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக வெப்படை செல்வராஜ் களத்தில் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, கட்சியின் மாவட்டச் செயலர் காந்திச்செல்வன், திருச்செங்கோடு தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு, செல்வராஜ் முக்கிய காரணகர்த்தாவாக இவர் இருந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதை காரணம் காட்டியும், ஒரு சில புகார்களை கூறியும், அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பின், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, தொழிலதிபராகி, மீண்டும் கட்சியில் இணைந்தார். அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாத நிலையில், கட்சியின் மேல்மட்டத் தலைவர்களை, “வெயிட்டாக’ கவனித்து, “சீட்’ வாங்கி விட்டார்.

அதோடு, தொகுதியில் இரு இடங்களில், கருணாநிதியை தனக்கு பிரசாரம் செய்ய அழைத்து வந்து விட்டார். செல்வராஜுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதல்வர் பிரசாரம் செய்தது, கட்சியினரின் பார்வையை அவர் பக்கம் திருப்பியுள்ளது. இது, மாவட்டச் செயலர் காந்திச்செல்வனை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது; இது தேர்தலிலும் எதிரொலிக்கும்.

திண்டுக்கலில் திருகு வேலை: இந்த தேர்தலில், தி.மு.க., அமைச்சர் ஐ.பெரியசாமியும், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர், நத்தம் விசுவநாதனும் ஒருவருக்கு ஒருவர் உதவும் வகையில் செயல்பட்டுள்ளனர். ஆத்தூர் தொகுதியில், 1977 தேர்தல் முதல், 2006 தேர்தல் வரை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நேரடியாக மோதி வந்துள்ளன. 1989ல் இருந்து, ஒரு தேர்தலில், தி.மு.க., அடுத்த தேர்தலில், அ.தி.மு.க., என, மாறி மாறி வென்றுள்ளன.

தற்போது இத்தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தும், தொகுதி, தே.மு.தி.க., விற்கு ஒதுக்கப்பட்டது. இதில், நத்தம் விசுவநாதன் பங்கு முக்கியமானது. இதேபோல், நத்தம் தொகுதி உருவான, 1977 தேர்தல் முதல், 1996 வரை தொடர்ந்து ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஆண்டி அம்பலம். இவரது மகன் எம்.ஏ. ஆண்டி அம்பலம் கடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 3,760 ஓட்டுகளில் வெற்றியை இழந்தார். இம்முறை இவருக்கு சீட் வழங்கியிருந்தால், விசுவநாதனின் வெற்றி கேள்விக் குறியாகியிருக்கும்.

இது, ஐ.பெரியசாமியின் முயற்சியால் தவிர்க்கப்பட்டு, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் விஜயனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிருப்தியில், ஆண்டி அம்பலம் சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால், தி.மு.க., ஓட்டுகள் சிதறி, விசுவநாதன், வெற்றிக்கு வழிவகுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இது, இந்நாள் அமைச்சரும், முன்னாள் அமைச்சரும் சேர்ந்து செய்த “உள்ளடி’ என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

கோடிகளை கொடுத்து பெற்ற சீட்: தி.மு.க., கூட்டணியில் உள்ள ஜாதிக்கட்சி ஒன்று, திருவள்ளூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியின் வேட்பாளர் உள்ளாட்சி பிரதிநிதி. இவர் கட்சி தலைமைக்கு, “10சி’ கொடுத்து, தனக்கான சீட்டை உறுதி செய்து கொண்டார்.

அத்துடன் இவர், மற்றொரு தொகுதியில் போட்டியிடும் நபருக்கு சீட் கிடைத்தால், தன்னை விட கீழ் பதவியில் இருக்கும் அவர் கட்சியில் முந்திச் சென்று விடுவார் என, பல வழிகளில் அவருக்கு சீட் கிடைக்காமல் தடுக்க கடும் முயற்சி எடுத்தார். ஆனால், அந்த மற்றொரு வேட்பாளரோ, கவனிக்க வேண்டியவர்களை கவனித்தது மட்டுமின்றி, “13சி’ கொடுத்து கட்சி தலைமையை திருப்திப்படுத்தி வேட்பாளர் ஆகிவிட்டார்.

இதில், யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் வருங்காலத்தில் மாவட்டத்தை கட்டிக் காக்கப் போகிறார் என்ற தகவல் பரவியுள்ளது. இவர்களை வெற்றி பெற வைத்தால், பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் மரியாதை கிடைக்கும் என்ற அதிருப்தி அந்த கட்சியில் பரவியுள்ளதால், சில, “உள்ளடி’ வேலைகள் மறைமுகமாக நடந்துள்ளன. இதனால், இரு வேட்பாளர்களின் வெற்றியும் கேள்விக்குறியாகியுள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s