பின்லேடன் உடலை கடலுக்கு அடியில் அடக்கம் செய்தது ஏன்?

பத்தாண்டாக தேடப்பட்டு வந்த சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் புகுந்த அமெரிக்க அதிரடிப்படை நடத்திய திடீர் தாக்குதலில் தலையில் சரமாரி குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமானார். அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர் ஹெலிகாப்டரில் சென்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொன்றதை உறுதி செய்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார்.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை மோதி தீவிரவாதிகள் தகர்த்தனர். அதேநேரத்தில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் மீதும் தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி உலகையே அச்சுறுத்தியவர் அர் கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடன். இதனால், பயங்கரவாதி பின்லேடனை உயிருடன் பிடித்துக் கொடுபவர்களுக்கு 225 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. உலகில் தீவிரவாத செயல்களை அடியோடு ஒடுக்க வேண்டும் என்று எல்லா நாடுகளும் வலியுறுத்தின.

54 வயதான பின்லேடனை பிடிக்க அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தேடி வந்தது. அவ்வப்போது ஆடியோ, வீடியோ சி.டி.களில் தோன்றி உலகில் நாசவேலைகளை அரங்கேற்றம் செய்வது பற்றியும் எச்சரித்தும் வந்தார் பின்லேடன். அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் தீவிரவாதத்தை ஒடுக்குவதாகவும் எப்படியும் தீவிரவாதி பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துவிடுவோம் என்று அறிவித்தார். அதை செயல்படுத்தவும் கடும் முயற்சி மேற்கொண்டார்.

ரகசிய திட்டம்: இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தினருக்கு பயங்கரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு அவ்வப்போது தகவல் கிடைத்தது. ஆனால், அதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. கிடைத்த தகவலைக் கொண்டு தொடர்ந்து அமெரிக்க சி.ஐ.ஏ., உளவு அமைப்பு துப்பு துலக்கியது. பாகிஸ்தானுக்கே தெரியாமல் அங்கு தன் உளவாளிகளை வைத்த உளவு பார்த்து வந்தது.

அமெரிக்க ராணுவத்தினருக்கு பின்லேடன் பதுங்கியுள்ள இடம் பற்றி உறுதியான தகவல் கிடைத்தது. கடந்த ஒரு மாதமாக பரம ரகசியமாக திட்டம் தீட்டப்பட்டது. அந்த திட்டத்துக்கு ஏப்ரல் 29ம் தேதி அதிபர் ஒபாமாவின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஹாஜி விமான தளத்தில் இருந்து ஞாயிறன்று நள்ளிரவில் இந்திய நேரப்படி அதிகாலை 1.45 மணியளவில் 4 ஹெலிகாப்டர்கள் பறந்து சென்றன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மலைப் பகுதிகள் நிறைந்த சிறிய நகரமான அபோதாபாத் நகரில் பின்லேடன் பதுங்கி இருந்த 3 தளங்களைக் கொண்ட சொகுசு பங்களாவை முற்றுகையிட்டன.

3000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள அந்த பங்களா வளாகத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்து கமாண்டோ படை வீரர்கள் கயிறுகள் மூலம் இறங்கினர். தரையில் குதித்த வீரர்கள் நாலாபுறமும் பங்களாவை சுற்றி வளைத்தனர். அதேநேரத்தில் பங்களாவின் மேல்கூரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர்.
துப்பாக்கிச் சண்டைகளுக்கு இடையே குண்டுகளும் வெடித்தன. இதற்குள், கமாண்டோ படையினர் பங்களாவுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். எதிர்த்தவர்களை சுட்டுக் கொன்றனர். சரணடைந்தவர்களை பிடித்தனர்.

ஒரு கட்டத்தில் பின்லேடனை கமாண்டோ வீரர்கள் சுற்றி வளைத்து சரணடையும்படி எச்சரித்தனர். வீட்டில் தங்கியிருந்த பெண்ணையும் பாதுகாவலரையும் மனித கேடையமாக பயன்படுத்தி தப்பிக்க பின்லேடன் முயற்சி செய்தான். சரணடைய காலதாமதம் செய்ததோடு, போராடவும் முயற்சி செய்தான். சுதாரித்துக் கொண்ட கமாண்டோ படை வீரர்கள் பின்லேடனின் தலையை குறிவைத்து சுட்டுக் கொன்றனர்.

இந்த அதிரடி தாக்குதலில் பின்லேடன் அவனது மகன், ஒரு பெண் உட்பட 4 பேர் பலியானார்கள். சரணடைந்த மற்றவர்களை கமாண்டோ படையினர் பிடித்து ஹெலிகாப்படரில் ஏற்றினர். இந்த தாக்குதல் எல்லாம் 40 நிமிடங்களில் முடிந்துவிட்டது. அமெரிக்க வீரர்கள் வந்த 4 ஹெலிகாப்டர்களில் ஒன்று பழுதானதால் அங்கேயே உடைந்து நொறுங்கிவிட்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடன் உடலை அமெரிக்க ராணுவப்படை உடனடியாக கடலுக்குள் அடக்கம் செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், எந்த கடலில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. பின்லேடன் கொல்லப்பட்டதை அறிந்த அமெரிக்க மக்கள், வெள்ளை மாளிகை முன்பு திரண்டு நாள் முழுக்க கொண்டாட்டத்தை நடத்தினர். உலக நாடுகளும் நிம்மதி பெருமூச்சு விட்டன.

கடலுக்கு அடியில் பின்லேடன் உடல் அடக்கம்!

கொல்லப்பட்ட பின்லேடன் உடல் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து கொண்டு வரப்பட்டது. பின்லேடனை நிலப்பகுதியில் அடக்கம் செய்யும் பட்சத்தில் அவ்விடத்தில் தீவிரவாத செயலுக்கான ஊக்குவிப்பு உட்பட வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பின்லேடனின் உடலை கடலுக்கு அடியில் புதைக்க திட்டமிட்டோம். மத மரபுப்படி பின்லேடனுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, உடல் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டது என அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்பட்ட கடல் பகுதி பற்றிய தகவல் எதையும் அந்த அதிகாரி தெரிவிக்கவில்லை.

பணியாளரால் சிக்கிய பின்லேடன்!

தனது நம்பிக்கைக்குரிய, வெளியுலக தகவல் தொடர்பாளராக இருந்தவரால் அமெரிக்க வீரர்களின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார் பின்லேடன். 2001 செப்டம்பர் 11ல் அல்-கய்தா தீவிரவாதிகள் நடத்திய அமெரிக்க தாக்குதலில் தொடர்புடையதாக சிக்கியவர்கள் கான்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் பற்றி அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. 6 ஆண்டுகளுக்கு முன், கைதி ஒருவன் கொடுத்த துப்பு காரணமாகவே பின்லேடன் கதையை அமெரிக்கா முடிக்க முடிந்தது.

பின்லேடனுக்கு வெளியுலக தகவல்களை கொண்டு செல்லும் நம்பிக்கைக்குரிய ஒருவனது புனை பெயரை விசாரணையில் கைதி தெரிவித்தான். அவன் காலித் ஷேக் முகமதுவின் பாதுகாப்பில் செயல்படுவதாகவும் கூறினான்.

அப்போது முதல் அந்த நபரை தேடும் பணியில் இறங்கினர். நான்கு ஆண்டுகளுக்கு முன் அவனது நிஜப் பெயரை கண்டுபிடித்தனர். அவன் நடமாடும் இடத்தை துல்லியமாக அறிய மேலும் 2 ஆண்டுகளானது. அபோடாபாத்தின் பிரமாண்ட வீடு ஒன்றுக்குள் அவன் போய் வருவதை கடந்த ஆகஸ்டில் கண்டுபிடித்தனர். அடுத்த சில வாரங்களுக்கு அவனது செய்கைகளை சேட்டிலைட் படங்கள், உளவுத் துறை தகவல் மூலம் கண்காணித்தனர். அதன் பிறகே, பின்லேடன் மற்றும் அவனது குடும்பத்தினர் சிலர் அந்த வீட்டில் வசிப்பது உறுதியானது.

பரபரப்பான அந்த 40 நிமிடம்

இஸ்லாமாபாத்: எல்லாம் 40 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது. எல்லாம் என்றால், ஒசாமா பின்லேடனை சுற்றி வளைத்தது, தீவிரவாதிகளின் தாக்குதலை முடக்கியது, மேன்சனில் நுழைந்தது, பின்லேடன் சரணடைய வாய்ப்பு கொடுத்தது, சுட்டுக் கொன்றது என்ற தொடர் நிகழ்வுகள் எல்லாம் 40 நிமிடங்களில் முடிந்தது.

* அமெரிக்க ராணுவத்தினரில் கடுமையான பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் இடம் பெற்ற ஹெலிகாப்டர் படை இந்த தாக்குதலை நடத்தியது.
* ஆப்கானிஸ்தான் ஹாஜி தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் பறந்து சென்றன.
* இஸ்லாமாபாத் நகரில் அபோதாபாத் பகுதியில் பின்லேடன் பதுங்கி இருந்த மேன்சனில், ஹெலிகாப்டர்களில் வந்த கமாண்டோக்கள் கயிறு மூலம் இறங்கினர்.
* நான்கில் ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறால் பழுதானது. தரையில் மோதியது.
* பழுதான ஹெலிகாப்டரை அமெரிக்க ராணுவ வீரர்கள் உடைத்து நொறுக்கி விட்டனர்.
* அதிரடி தாக்குதல் 40 நிமிடங்களில் முடிந்தது.
* பின்லேடன் தனது ஆதரவாளர்களுடன் கடைசி நிமிடம் வரையில் போராடி மாண்டுள்ளார்.
* பின்லேடன் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சரணடைந்தவர்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் அழைத்துச் சென்று விட்டனர்.
* இந்த தாக்குதலில் பின்லேடனுடன் மேலும் 3 பேரும் ஒரு பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
* சுட்டுக் கொல்லப்பட்ட பெண், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டவர்.
* தனது இளம் மனைவியுடன் இந்த மேன்சனில் பின்லேடன் வசித்து வந்துள்ளார்.
* அதிரடி தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் தரப்பில் உயிர் சேதம் இல்லை.
* தாக்குதல் முடிந்ததும் 3 ஹெலிகாப்டர்களில் எல்லா அமெரிக்க கமாண்டோ வீரர்களும் ராணுவ தளத்துக்கு பாதுகாப்பாக திரும்பி வந்துவிட்டனர்.

பாகிஸ்தானிடம் சொல்லாமலே…

ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொல்லும் வரையில் அந்த அதிரடி நடவடிக்கை பற்றி பாகிஸ்தானிடம் எதுவும் அமெரிக்கா சொல்லவில்லை. அதுவும் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மலைப் பகுதிகள் நிறைந்த சிறிய நகரான அபோதாபாத்தில் பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தில் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

அபோடாபாத் நகரில் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் இருந்து 300 அடி தூரத்தில் ஒசாமா பதுங்கி இருந்த 3 மாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை அமெரிக்காவின் நான்கு ஹெலிகாப்டர்களில் சிறப்பு அதிரடிப் படை வீரர்களுடன் திடீரென முற்றுகையிட்டது. ஹெலிகாப்டர்களில் இருந்து அதிரடிப் படை வீரர்கள் குதித்து கண் இமைக்கும் நேரத்தில் குண்டுமழை பொழிந்தனர்.

ஒசாமாவை சுட்டுக் கொன்றதும் அது பற்றிய தகவலை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை தொடர்பு கொண்டு, அமெரிக்க வீரர்களின் அதிரடி தாக்குதலில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி தகவலை தெரிவித்தார்.

ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டை தொடர்பான உளவுத் துறை தகவலை பாகிஸ்தான் உட்பட எந்த நாட்டுடனும் அமெரிக்கா கடைசி நேரம் வரை பகிர்ந்து கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒபாமா பைனல் ஆர்டர்

ஒசாமா பின்லேடன் ஒளிந்திருக்கும் அபோதாபாத் பகுதியை சுற்றி வளைக்க 29ம் தேதியே கையெழுத்து போட்டாலும், அதிரடி தாக்குதலுக்கான அவசர ஆலோசனை ஞாயிறு மாலைதான் வெள்ளை மாளிகையில் தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் ஒசாமாவை சுற்றி வளைத்து தாக்குதலால் எழக்கூடிய சாதக, பாதகங்களை ஒபாமாவும் ராணுவ அதிகாரிகளும் பல மணி நேரம் ஆலோசித்தனர்.

அமெரிக்க நேரப்படி மதியம் 2 மணி: உயரதிகாரிகளை மீண்டும் சந்தித்த ஒபாமா, பின்லேடனை சுட்டுத் தள்ள இறுதி உத்தரவு பிறப்பித்தார்.

3.32: மீண்டும் அவசர ஆலோசனை அறைக்கு வந்து மறுபடியும் ஆலோசனை.

3.50: பின்லேடன் அடையாளம் காணப்பட்டதாக ஒபாமாவுக்கு தகவல் வந்தது.

7.01: இலக்கை நோக்கி துல்லியமாக படையினர் நெருங்கிய தகவல், ஒபாமாவை அடைந்தது.

8.30: ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அதிபர் ஒபாமாவிடம் வந்து சேர்ந்தது.

அதன்பிறகு, ஒசாமா பின்லேடன் மீதான தாக்குதல் பற்றி அறிக்கை தயாரித்த ஒபாமா, அதை வெளியிட்டார். செய்தி வெளியானபோது நள்ளிரவை நெருங்கிய நிலையிலும் அமெரிக்க மக்கள் விழித்தனர். வெள்ளை மாளிகைக்கு வெளியேயும் நாடு முழுவதும் திரண்டு வந்து கொண்டாடினர்.

பின்லேடன் பற்றிய முக்கிய உண்மைகள்:

அமெரிக்க படைகளால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டு, உடல் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒசாமா பின்லேடன் பற்றிய முக்கிய உண்மைகள்.

1957 சவுதி அரேபியாவில் கட்டுமான தொழிலதிபரான முகமது பின்லேடன் மகனாக பிறந்தார்.

1980 ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த சோவியத் ரஷ்ய படைகளை அமெரிக்க நிதி உதவியுடன் எதிர்த்த தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராடினார். அங்கு அல்-கய்தாவை தொடங்கினார்.

1990 ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டார்.

2001 அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக இரட்டை கட்டிடங்களை தகர்க்க தற்கொலை படை தீவிரவாதிகளை அனுப்பினார். அவரது எதிர்ப்பார்ப்பை மீறிய மோசமான விளைவுகள் அமெரிக்காவில் ஏற்பட்டன. ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் அமெரிக்க படைகளால் பலியாகும் நிலையில் சிக்கி, தப்பினார்.

2011 பாகிஸ்தானின் அபோடாபாத்தில் அமெரிக்க படையால் மே 1ல் கொல்லப்பட்டார்.

இதுவரை வெளியான தகவல்கள்:

* இளம் மனைவி, மகன், இரண்டு சகோதரர்கள், ஒரு நம்பிக்கைக்குரிய தகவல் தருபவர் ஆகியோர் அங்கு வசித்தனர்.
* அந்த பகுதியின் வீடுகளைவிட 8 மடங்கு பெரிதாக, 3000 சதுர மீட்டர் பரப்பளவில் பின்லேடனின் 2 மாடி கட்டிடம் இருந்தது.
* அதன் சில ஜன்னல்கள் காம்பவுண்ட் வெளிப்புறம் நோக்கி இருந்தன.
* 5.5 மீட்டர் உயர சுற்றுச்சுவருக்கு மேல் முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
* ஸி4.5 கோடி மதிக்கத்தக்க அந்த வீட்டில் ஒரு தொலைபேசியோ, இணைய தள இணைப்போ இல்லை.

கயிறு மூலம் ‘சரசர…’

அமெரிக்காவின் 4 ராணுவ ஹெலிகாப்டர்களில் சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் அந்த கட்டிடத்தை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அமெரிக்க நேரப்படி இரவு 7.01. ஹெலிகாப்டரில் இருந்து அதிரடிப் படை கமாண்டோ வீரர்கள், கயிறு மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்தனர். நவீன தகவல் தொடர்பு சாதனங்களை எல்லாம் செயலிழக்கச் செய்யும் சாதனங்களுடன் அவர்கள் வந்ததால், பின்லேடனின் பாதுகாப்பு வீரர்களுக்கு உடனடியாக அறிய முடியவில்லை.

எனினும், அமெரிக்க வீரர்களின் குண்டுமழையால் சுட்டபோது தான் என்ன நடக்கிறது என்றே தெரிந்தது. ஆனால், அவர்கள் பதில் தாக்குதல் எந்த பலனும் தரவில்லை. அதற்குள் பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டனர்.

சொகுசு மேன்சனில்…

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது அபோடாபாத். சிறிய நகரமான இங்கு பாகிஸ்தான் ராணுவ அகாடமி உள்ளது. இதற்கு 300 அடி தூரத்தில் 2 தளம் கொண்ட ஒரு அடுக்குமாடி விடுதி (மேன்சன்) உள்ளது.

3,000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த விடுதியை, ஒசாமாவுக்காக அல்கய்தா அமைப்பு தனியாக கடந்த 2005 ல் கட்டியது. இதில் தங்கியிருப்பது பின்லேடன் தான் என்று உள்ளூரில் உள்ளவர்களுக்கு கூட இதுவரை தெரியவில்லை. ஆனால், அந்த இடம் முழுவதும் அல்கய்தா கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்துள்ளது. பின்லேடன் பதுங்கி இருந்த அபோதாபாத் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவ படை மற்றும் ராணுவ கட்டிடங்கள், ராணுவ அகாடமி ஆகியவை உள்ளன.

கெடு டிக்…டிக்…டிக்…

பின்லேடன் விடுதியை அமெரிக்க ராணுவத்தினர் சுற்றிவளைத்ததும், உடன் தங்கியிருந்த சிலரை துப்பாக்கி முனையில் சரண் அடைய வைத்தனர். சிலர் முரண்டு பிடித்து பதில் தாக்குதலில் இறங்கினர். அவர்களையும் அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுத்தள்ளினர். கடைசியில் பின்லேடனை குறிபார்த்தபடி எல்லா திசையிலும் சூழ்ந்தனர்.

‘சரண் அடைந்து விடு’ என்று கூறியபடி இருந்தனர். நொடிகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், பின்லேடன் அசைந்து கொடுப்பதாக இல்லை. எதற்கோ பிளான் செய்கிறார் என்று தெரிந்து கொண்ட அதிரடிப்படையினர், அடுத்த நொடி, பின்லேடனின் தலையை குறிபார்த்து டூமில்…டூமில் என்று சுட்டுத்தள்ளினர். நெற்றி, கண்கள் என்று முகத்தில் சில இடங்களில் குண்டு பாய்ந்து பின்லேடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

உலகம் முழுவதும் உஷார்:

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதும், அல் கய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்¢ந்த தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடலாம் என்ற காரணத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளன. அமெரிக்காவும் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள தூதரகங்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

(dkn)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s