நீதி நிலைநாட்டப்பட்டது: ஒபாமா பெருமிதம்….

ஒசாமாவை சுட்டுக் கொன்றதில், நீதி நிலை நாட்டப்பட்டது. அமெரிக்க மக்கள், நினைப்பதை நிறைவேற்றுபவர்கள் என்பதை, இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட உடன், உலகிற்கு இதை அறிவித்த ஒபாமாவின் உரைச் சுருக்கம்:அல்-குவைதா தலைவரும், அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாவதற்கு காரணமானவருமான ஒசாமா பின்லாடன், அமெரிக்கா மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் கொல்லப்பட்டார் என்பதை, அமெரிக்க மக்களுக்கும், உலகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.பத்தாண்டுகளுக்கு முன், நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டு மண்ணாக்கப்பட்டன. இச்சம்பவத்தில், மூவாயிரம் பேர் பலியாயினர்.இக்கொடூர தாக்குதலுக்கு காரணமானவரை நீதியின் முன் நிறுத்தவும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் அன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம்.அதனால் நம் மக்களை, நண்பர்களை, நமது நட்பு நாடுகளைப் பாதுகாக்க அல்-குவைதாவுடன் போரில் ஈடுபட்டோம். ஒசாமா பின்லாடன், ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றார்.

நான் பொறுப்பேற்றவுடன், சி.ஐ.ஏ., இயக்குனர் லியோன் பெனட்டாவிடம், பின்லாடனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்பதுதான் நம் போராட்டத்தின் முன்னுரிமை என உத்தரவிட்டேன்.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், பின்லாடன் இருக்குமிடம் தெரிந்தது. பாகிஸ்தானின் உள்ளடங்கிய இடம் ஒன்றில் அவர் இருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இறுதியாக, கடந்த வாரம், ஒசாமா பின்லாடனை நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கையை எடுக்க நான் முடிவு செய்தேன்.இன்று, எனது வழிகாட்டலின் பேரில், பாகிஸ்தானின் அபோதாபாத்தில், அமெரிக்கா தனது இலக்கைத் தாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. மிகச் சிறிய அமெரிக்க வீரர்கள் குழு, மிகுந்த வீரத்துடனும் தீரத்துடனும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. இதில் பொதுமக்கள் பலியாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டனர்.

துப்பாக்கிச் சண்டைக்குப் பின், ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார்; அவரது உடல் கைப்பற்றப்பட்டது. அல்-குவைதாவை ஒழிக்கும் நமது நாட்டின் முயற்சியில் பின்லாடனின் மரணம் ஒரு குறிப்பிடத் தகுந்த சாதனையாக இருக்கிறது.அதேநேரம், இஸ்லாமிய மதத்துடன் அமெரிக்கா இன்று மட்டுமல்ல, எப்போதுமே போரிடாது என்பதை மீண்டும் நாம் உறுதிபடுத்துகிறோம். 9/11க்குப் பின் அப்போதைய அதிபர் புஷ் கூறியது போல, நமது போர் இஸ்லாமிய மதத்துடன் அல்ல.அதனால், அமைதி மற்றும் மனித மாண்பில் நம்பிக்கை வைத்திருப்போர் அனைவரும் அவரது மரணத்தை வரவேற்க வேண்டும்.இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளது. இதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்வர். நம் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் கண்டு நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; நம் மக்கள் கொல்லப்படும் போது சும்மா இருக்க மாட்டோம்.நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்துகாட்டுவோம் என்பதை இப்போது மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதுதான் நம் வரலாறு.இவ்வாறு அதிபர் ஒபாமா கூறினார்.

ஒசாமாவை கொல்ல ஒபாமா முழு தயாரிப்பு : அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனை சுட்டுக் கொல்வதற்கான உத்தரவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஏப்ரல் 29ம் தேதி கையெழுத்திட்டிருக்கிறார். அதன் பின்னர் தான், அந்த நடவடிக்கை முழுவீச்சில் துவங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தென்பகுதியில், கடந்த வாரம், டொர்னாடோ எனப்படும் சூறாவளி புயல் தாக்கிய இடங்களை நேரில் பார்வையிடுவதற்காக, ஏப்ரல் 29ம் தேதி, ஒபாமா, வாஷிங்டனில் இருந்து அலபாமா மாகாணத்திற்கு புறப்பட்டுள்ளார்.புறப்படுவதற்கு முன், அன்றைய தினம் காலை அமெரிக்க நேரப்படி, 8.20 மணிக்கு, ஒசாமா பின்லாடனை சுட்டுக் கொல்வதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து, 100 கி.மீ., வடக்கில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் பின்லாடன் தங்கியிருப்பது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அமெரிக்காவுக்கு தெரிந்து விட்டது. இந்தாண்டு மார்ச் மாதம், பின்லாடன், அபோதாபாத்தில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து, ஒபாமா, தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோம் டோனிலானுடன் ஐந்து முறை அவசரக் கூட்டம் நடத்தியிருக்கிறார்.

அதன்பின் தான், பின்லாடன் மீதான இறுதி தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது. பின்லாடன் கொல்லப்பட்ட நேற்று, அதாவது, அமெரிக்காவில் மே 1ம் தேதியன்று, டோம் டோனிலான், இறுதி உத்தரவுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, அன்று பிற்பகல் 3 மணிக்கு, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.அன்று நண்பகல் 2 மணிக்கு தன் உயர்மட்ட ஆலோசர்களுடன் ஆலோசித்த ஒபாமா, தனது இறுதி உத்தரவை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். 3.32 மணிக்கு மீண்டும் ஒரு கூட்டம் நடந்தது. 3.50 மணிக்கு, அபோதாபாத் வீட்டில் பின்லாடன் இருக்கிறார் என்ற உறுதியான செய்தி ஒபாமாவுக்கு தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, 7.01 மணிக்கு, பின்லாடன் குறிவைக்கப்பட்ட தகவல் அவருக்கு அனுப்பப்பட்டது. மே 1ம் தேதி இரவு அமெரிக்க நேரப்படி 8.30 மணிக்கு, பின்லாடன் கொல்லப்பட்ட செய்தி ஒபாமாவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக வெள்ளை மாளிகையின் முன்புறம் குவிந்திருந்த செய்தியாளர்களிடம் இத்தகவலை ஒபாமா அறிவித்தார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s