ஸ்பெக்ட்ரம் ஊழல் அறிக்கையை தயாரிக்க விடாமல் அமளி: தி.மு.க.,-காங்., முயற்சி வெற்றி?

“பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை குற்றம்சாட்டி தயாரிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வரைவு அறிக்கையை ஏற்கமுடியாது’ என, காங்கிரசும், தி.மு.க.,வும் ஒருசேர தெரிவித்ததால், அந்த அறிக்கை முழுமைபெறுவது முறியடிக்கப்பட்டது. பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் நிகழ்ந்த, பெரிய ரகளையால் குழுத் தலைவர் முரளிமனோகர் ஜோஷி, ஓட்டுப்போடாமல் வெளி நடப்பு செய்தார். வரைவு அறிக்கைக்கு எதிராக 11 எம்.பி.,க்கள் ஓட்டளித்ததால், அந்த அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்யாமல் தடுப்பது என்ற தி.மு.க., மற்றும் காங்கிரஸ் முயற்சி முழுவெற்றி பெற்றது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் மீடியாக்களுக்கு, “லீக்’ ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. அறிக்கையில் பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை குற்றம் சாட்டியிருந்ததால் காங்கிரசும், தி.மு.க.,வும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், பார்லிமென்டில் வழக்கமாக நடைபெறும் அலுவலக அறையில், பொதுக்கணக்கு குழு கூட்டம் முரளிமனோகர் ஜோஷி தலைமையில், நேற்று மதியம் 12 மணிக்கு துவங்கியது. கூட்டம் துவங்கியது முதலே கடும் வாக்குவாதம் நடந்தது. “பொதுக்கணக்கு குழுவின் அறிக்கை வெளியானது எப்படி’ என, காங்.,-தி.மு.க., உறுப்பினர்கள் கேள்வி மேல் கேள்விகேட்டனர். மேலும், அவசரம், அவசரமாக அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? அறிக்கையை படித்துப் பார்க்க வெறும் 24 மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது ஏன்? என்றும் கேள்விகள் எழுப்பபட்டன. அறிக்கையை, “லீக்’ செய்தது யார் என்பது குறித்து சி.பி.ஐ.,விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினர். இந்த விவகாரத்தில், புதிய திருப்பமாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ரியோட்டி ராமனும், பகுஜன் சமாஜ் உறுப்பினரும், காங்., தி.மு.க., தரப்பை ஆதரித்தனர். “அறிக்கையில், கூறப்பட்டுள்ள பல விவரங்கள் பொய்யானவை. இட்டுக் கட்டியவை’ என்றும் உறுப்பினர்கள் வாதிட்டனர். ஆளாளுக்கு பேசிக் கொண்டே இருந்ததால், கூட்டம் அப்படியே ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4 மணிக்கு கூட்டம் கூடியது. பரபரப்பான சூழ்நிலையில் கூடிய இந்த கூட்டம், மொத்தம் 15 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கூட்டம் துவங்கியதும் குழுத் தலைவர் முரளிமனோகர் ஜோஷி எழுந்து, தான் ஏன் இந்த அறிக்கை தயார் செய்தேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். உடனே, காங்கிரஸ், தி.மு.க., உறுப்பினர்கள் அவரை எதிர்த்து கடுமையாக வாக்குவாதம் செய்தனர். பலரையும் பேச அனுமதித்தார் ஜோஷி. ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் ஜோஷியால் தனது வாதங்களை முன்வைக்க முடியவில்லை. காங்கிரஸ், தி.மு.க., உறுப்பினர்களுடன் சேர்ந்து பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளின் உறுப்பினர்களும் ஜோஷியை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய வண்ணம் இருந்தனர். ஒரே கூச்சல் குழப்பமாக இருந்ததை அடுத்து, இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ஜோஷி, கூட்ட அறையை விட்டு வெளி நடப்பு செய்தார். இதனால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க., அணி முயற்சி வெற்றி பெற்றது.

அறிக்கை லீக் ஆனது எப்படி? விசாரிக்க அரசு முடிவு: “ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவின் அறிக்கை மீடியாக்களுக்கு, “லீக்’ ஆனது எப்படி என்பது குறித்து உரிய முறையில் புலன் விசாரணை நடத்தப்படும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தி வந்தது. அந்த குழு தனது இறுதி அறிக்கையை முறைப்படி தாக்கல் செய்யவில்லை. ஆனாலும், அறிக்கையின் விவரங்கள் ஒரு சில மீடியாக்களில் வெளியாகியுள்ளன. இது எவ்வாறு நடந்தது என, தெரியவில்லை. இதற்கான காரணமும் விளங்கவில்லை. அறிக்கை விவரங்கள் எவ்வாறு மீடியாக்களுக்கு கிடைத்தது என்பது குறித்து உரிய முறையில் புலன் விசாரணை நடத்தி உண்மை கண்டுபிடிக்கப்படும். இந்த அறிக்கை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நற்சான்றிதழ் அளித்துள்ளதா, இல்லையா என்பது குறித்தெல்லாம் நான் கூற முடியாது. காரணம் அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்படவில்லை. பொதுக்கணக்கு குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்காதவரையில், அறிக்கை பற்றி, ஒரு மத்திய அமைச்சர் பதவியில் இருக்கும் நான் எதையும் சொல்ல முடியாது. பொதுக்கணக்கு குழுவில் உள்ள உறுப்பினர்கள் மத்தியில், இந்த அறிக்கை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகத்தில் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் இருப்பதுதான் சரியானதாக இருக்க முடியும். அவ்வாறு வேறுபாடுகள் இருந்தால், அவை அனைத்திற்கும் முறைப்படி தீர்வு காணப்படும். பார்லிமென்ட் குழுக்களில் இதுபோல கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜமானது. முந்தைய காலங்களிலும் இவ்வாறு நடந்துள்ளது. அவை அனைத்தும் முறைப்படி சரி செய்யப்பட்டு பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.

சட்ட குழப்பங்கள்: பார்லிமென்ட் வரலாற்றிலேயே இல்லாத வகையில், பொதுக்கணக்கு குழுவில் நேற்று நடைபெற்ற ரகளையின் காரணமாக, பல்வேறு சட்டக் குழப்பங்கள் உருவாகியுள்ளன. அறிக்கை மீது ஓட்டெடுப்பு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதும், முரளி மனோகர் ஜோஷி எழுந்து சில விவரங்களை தெரிவிக்க ஆரம்பித்தார். அதன்பின் ஏற்பட்ட ரகளை காரணமாக, அவர் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக சைபுதீன் சோஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்து, அவர் தலைமையிலான பெரும்பான்மை 11 உறுப்பினர்களும், அறிக்கையை நிராகரிப்பதாக தீர்மானம் இயற்றப்பட்டது. இப்போதைய குழுவின் ஆயுள் காலம், வரும் 30ம் தேதியோடு முடிவடைகிறது. இரண்டு தினங்களுக்கு மட்டுமே சோஸ் தலைவராக இருக்க முடியும். இருப்பினும், ஜோஷியை நீக்கியதும் சைபுதீன் சோசை தலைவராக்கியதும் பார்லிமென்ட் விதிகளின்படி ஏற்கத்தக்கதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அறிக்கைக்கு எதிராக பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டுள்ளதால், தொழில்நுட்ப ரீதியாக இனி அந்த அறிக்கையை பார்லி மென்டில் தாக்கல் செய்ய முடியாது. புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த குழுதான் எல்லாவற்றையும் முடிவு செய்ய வேண்டும்.

அரசு செய்ய வேண்டியது என்ன? “பார்லிமென்டின் பொதுக் கணக்குக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அரசு அதை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்’ என, பார்லிமென்ட் விவகாரங்களில் தலைசிறந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் (பி.ஏ.சி.,) அறிக்கை, நேற்று நிராகரிக்கப்பட்டு விட்டது. பொதுக்கணக்கு குழுத் தலைவர் ஜோஷி வெளியேறிய நிலை ஏற்பட்டதுடன், புதிய தலைவர் அந்த தீர்மானங்களை ஏற்காமல் நிராகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அரசமைப்பு சட்ட நிபுணர் காஷ்யப் மற்றும் லோக்சபா செகரட்டரி ஜெனரல் ஆசார்யா ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பான விஷயங்களில் சிறந்த நிபுணர்களான அவர்கள் கூறியதாவது: பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவானது ஒரு பரிந்துரை செய்யும் அமைப்பாகும். அதன் அறிக்கை, யாரையும் கட்டுப்படுத்தாது. இருந்தாலும், பொதுக் கணக்கு குழு ஒரு பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க, தலையாய பார்லிமென்ட் கமிட்டி என்பதால், அதன் அறிக்கைகள் பலவற்றை, மத்திய அரசு கடந்த காலங்களில் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படி, பொதுக் கணக்கு குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டால், அதன் மீதான நடவடிக்கை அறிக்கையை, மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அதற்கான காரணத்தை பொதுக் கணக்கு குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், பொதுக் கணக்கு குழு மேலும் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாம். பார்லிமென்ட் நடக்கவில்லை எனில், பொதுக் கணக்கு குழுவானது தங்களின் அறிக்கையை லோக்சபா சபாநாயகருக்கு அனுப்பி வைக்கலாம். அத்துடன், அறிக்கையின் ஒரு நகலை, மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். பொதுக் கணக்கு குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்வது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இல்லையெனில், அந்த பரிந்துரை விஷயத்தில், தீவிர கவனமாவது செலுத்த வேண்டியது அவசியம். ஒரு பிரச்னை குறித்து விசாரணை நடத்தும் பொதுக் கணக்கு குழு, சில தனி நபர்கள் மீதோ அல்லது குழுவினர் மீதோ, சட்ட ரீதியாகவோ அல்லது வேறு வகையான நடவடிக்கைகளையோ எடுக்கும்படி பரிந்துரை செய்யலாம். அத்துடன் எதிர்காலத்தில் பிரச்னைகள் வராமல் இருக்க, மாற்றங்கள் அவசியம் என்றும் கூறலாம். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s