வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

தி.மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார். வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாகவும், விஜயகாந்தின் பிரசாரத்தின் போது நடந்த சர்ச்சைகள் தொடர்பாகவும், தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்த தகவல்:

கும்மிடிப்பூண்டி பிரசாரத்திற்கு செல்லும் போது, வழியில் வேன் பழுதடைந்தது. உடனே விஜயகாந்த், அருகிலுள்ள கட்சிக்காரர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள், விஜயகாந்தை சந்தித்து, “உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு’ என்று சொல்லி குஷிப்படுத்தி சென்றனர்.

ஓசூர் செல்லும் வழியில் பிரசார வேன் மீண்டும் பழுதடைந்ததால், இரவு, 8 மணிக்கு செல்ல வேண்டிய தொகுதிகளுக்கு, அன்று போக முடியவில்லை. இதனால், விஜயகாந்த் வருகைக்காக ஓசூர் பகுதியில் காத்திருந்த தொண்டர்கள் கோபமடைந்தனர். மறுநாள் பகலில் அங்கு சென்றதும், முதலில் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான், விஜயகாந்த் பேச்சைத் துவக்கினார். அங்கு, 30 நிமிடங்கள் பேசிய பிறகே தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.

தர்மபுரி மாவட்ட பிரசாரத்தின் போது, மைக் இரண்டு முறை பழுதடைந்து விட, சுற்றியிருந்த தொண்டர்கள், “பேச்சு கேட்கவில்லை’ என்று பல முறை சத்தம் போட்டனர். இதனால், கோபமடைந்த விஜயகாந்த், வேனில் இருந்த உதவியாளரிடம் வேறு மைக் கேட்க, அவர் எடுத்துக் கொடுக்கும் போது, தவறி கீழே போட்டு விட, அந்த மைக்கும் பழுதடைந்தது.

அதனால் அவரை தலையில் தட்டி, மற்றொரு மைக்கை சரி செய்யச் சொல்லி, கேட்டு வாங்கி பேசிய பிறகே தொண்டர்கள் அமைதியடைந்தனர். இந்த சம்பவத்தை சில, “டிவி’க்களும், பத்திரிகைளும் விஜயகாந்த் வேட்பாளரை அடித்தார் என்று திரித்து, செய்தி வெளியிட்டதாக கூறுகின்றனர், தே.மு.தி.க.,வினர்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, மைக் உதவியாளரை அழைத்து, “இப்படி கவனக்குறைவா நடந்துக்கற… பப்ளிக் எப்படி சத்தம் போடுறாங்க பார்த்தியா’ என்று சீறியுள்ளார். “இனிமே கவனக்குறைவாக நடந்துக்க மாட்டேன், இனி மைக் பிரச்னையே வராது’ என்று, பதமாக பதில் சொன்ன அந்த உதவியாளர், தேர்தல் பிரசாரம் முடியும் வரை விஜயகாந்துடனேயே இருந்தார்.

பிரசாரத்தில் பல இடங்களில் கேமராவை மறைந்துக் கொண்டு தொண்டர்கள் பெரிய கொடிகளை பிடித்தபடி எதிரில் நின்றதால், கொடிக்கு பின்னால் நின்ற தொண்டர்கள் விஜயகாந்த்தை பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். கேமராமேன்களினாலும் வீடியோ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுமக்களும்,கேமராமேன்களும் கொடியை இறக்குங்கள் என்று சத்தம் போட, இதைப் பார்த்த விஜயகாந்த், “பொதுமக்கள் என்னை பார்க்க முடியாமல் கொடி மறைக்கிறது, கேமராமேன்களுக்கும் வீடியோ எடுக்க இடைஞ்சலாக இருக்கிறது; கொடிகளை கீழே இறக்குங்கள்’ என்று தொண்டர்களிடம் கூறினார்.

இந்த பேச்சில், “கொடியை கீழே இறக்குங்கள்’ என்ற பேச்சை மட்டும் வீடியோவில் பதிவு செய்த சில “டிவி’க்கள், அ.தி.மு.க., கொடியை இறக்குமாறு விஜயகாந்த் சொன்னதாக செய்தி வெளியிட்டதால், விஜயகாந்த் கோபமடைந்தார்.

கோவையில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. அன்று உடல் நலம் சரியில்லாத நிலையிலும், நெய்வேலி சுற்று வட்டார பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பல இடங்களில் தொண்டை கட்டி, பேச முடியாமல் போக, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, நெய்வேலியில் தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு, டாக்டர் சிகிச்சை அளித்தார். கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இரவில், 9 மணி வரை விஜயகாந்துக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பயணத்தில் விஜயகாந்த் உட்பட பிரசார குழுவினர் எங்கு தங்குகின்றனர் என்று, முன்கூட்டியே சொல்லப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. பெரும்பாலும் கட்சிக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தான் விஜயகாந்தும், பிரசார குழுவினரும் தங்கினர்.

பிரசாரம் முடிந்து, அதிக தூரம் சென்று தான், கட்சிக்காரர்கள் வீட்டில் தங்க வேண்டும் என்ற நிலை இருந்த இடங்களில் மட்டும், அருகில் உள்ள ஓட்டல்களில் பிரசார குழுவினர் தங்கினர். பிரசார குழுவினருக்கு தேவையான வசதிகளை, ஒழுங்காக செய்து கொடுக்க வேண்டும் என்று, பிரசாரம் புறப்படும் அன்றே சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கண்டிஷன் போட்டிருந்தார்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, அதிகமான இடங்களில் தொண்டர்கள் விஜயகாந்திடம், “தேர்தல் பிரசாரத்தில் வடிவேலு உங்களை மோசமாக பேசி வருகிறார், நீங்களும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று கேட்டும் வலியுறுத்தினர். இருப்பினும், வடிவேலு பற்றி விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

“வடிவேலுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.,வின் இந்த சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்’ என்று, கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s