தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

நீர்பாசனம் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ள சிவனப்பன், 25க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நீர் நுட்ப மையத்தின் முன்னாள் இயக்குனர்; தமிழ்நாடு திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர்; சொட்டுநீர் பாசன முறையின் தந்தை என்று அழைக்கப்படும் இவர், நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து விளக்குகிறார்.

இந்தியா, நீர்வளம் நிறைந்த நாடு. ஆனால், தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம். நாட்டில், ஆண்டுக்கு மழை அளவு சராசரியாக, 1,150 மி.மீ., தமிழகத்தில், 925 மி.மீ., நாட்டில், ஒருவருக்கு அளிக்கப்படும் தண்ணீரின் அளவு, 2,000 கன மீட்டர். ஆனால், தமிழகத்தில் கிடைக்கும் தண்ணீரின் அளவு, 750 கன மீட்டர் தான். அதாவது, நாட்டில் உள்ள மற்றவர்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு நீரைத் தான் வழங்க முடிகிறது.இந்நிலையில், தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையை எப்படி போக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, நீர் சேமிப்பு, அறுவடை, மேலாண்மை ஆகியவை தான் முக்கிய வழியாக இருக்கின்றன. நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாசன முறையைத் தான் கடைபிடித்து வருகிறோம். இந்த பாசன முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்தது, மழையால் கிடைக்கும் உபரி நீரை சேமிக்க வேண்டும். குறிப்பாக கடலில் கலக்கும் நீரை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கடலுக்குச் செல்லும் நீரின் அளவு ஆண்டுக்கு, 150 முதல், 200 டி.எம்.சி., நீர் என்று கணக்கிடப்படுகிறது. இதை, சிறு அணைகள் கட்டி, ஆறுகளில் சேமிக்கவேண்டும். நீர்பிடிப்புப் பகுதிகளில், மேலாண்மைத் திட்டங்களை அறிவியல் ரீதியாக செயல்படுத்த வேண்டும். விவசாய பயிர்களில் நெல்லுக்கு, 72 சதவீதமும், கரும்புக்கு, 12 சதவீதமும், பிற பயிர்களுக்கு, 10 சதவீதமும் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை மீதப்படுத்துவதற்கு, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை நாம் தொடர்ந்து கையாள வேண்டும். இதன் மூலம், ஒரு எக்டேருக்கு செய்யப்படும் சாகுபடியில், பெரும்பகுதி நீரை சேகரிக்க முடியும்.

இதை தவிர, கழிவு நீரை மறு சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவையெல்லாம், நமக்கு தற்போது கிடைக்கும் நீரை சேமிக்க எடுத்துவரும் நடவடிக்கைகள். ஆனால், இவற்றையெல்லாம் விட, இயற்கையாக கிடைக்கும் நீரை, சேமிப்பது தான் மிக முக்கியமான பணி. இயற்கையாக மழை மூலம் கிடைக்கும் நீர், பெருமளவு கடலில் தான் கலக்கிறது. இந்நிலையில், ஆற்றிலிருந்து கடலுக்கு சென்று கலக்கும் நீரையாவது நாம் சேமிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆறுகளிலிருந்து கடலுக்குச் சென்று கலக்கும் நீரை சேமிக்க, தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். அடுத்தகட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.

கேரளாவில் பெய்யும் மழையில், 250 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்குத் தான் செல்கிறது. அங்கு பெய்யும் மழையில், 10 சதவீத நீரைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். கேரளாவில் கடலுக்கு செல்லும் நீரை திருப்பி, தமிழகத்திற்கு கொண்டு வந்தால், நம்முடைய நீர் தேவை பெருமளவு சரிகட்டப்படும்.இதற்காக, “பம்பா-அச்சன்கோவில் திட்டம்’ தேசிய நீர் மேலாண்மை முகமை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பு, 1,500 கோடி ரூபாய் என வரையறுக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் இதுவரை நிறைவேற்றும் நிலைக்கு வரவில்லை.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து, கர்நாடக மாநிலத்தின் வழியாக அரபிக் கடலில் கலக்கும் நீரின் அளவு, 2,000 டி.எம்.சி., இந்த நீரை காவிரி வழியாக திருப்பி, பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, திட்டங்கள் உருவாக்கப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அடுத்ததாக, ஒடிசாவில் உள்ள மகாநதி, ஆந்திராவில் கோதாவரி ஆகிய நதிகளின் வழியாக கடலில் கலக்கும் நீர், 800 டி.எம்.சி., ஆகும். இந்த இரு நதிகளையும் இணைத்து, கிருஷ்ணா நதி வழியாக, காவிரி ஆற்றுக்கு நீரை கொண்டு வந்து, அதிலிருந்து வைகை ஆற்றுக்கு நீரை கொண்டு வருவது மற்றொரு திட்டம். இதற்கான, ஆய்வுகள் நடந்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளை இணைப்பது மற்றொரு பெரிய திட்டமாக உள்ளது.பொதுவாக, நதிகள் இணைப்பு என்பதற்கு தைரியமும், பொறுப்பு எடுத்துக்கொண்டு அதை நிறைவேற்றும் உறுதியும் தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால், நதிகள் இணைப்பு சாத்தியமில்லை.

இத்திட்டங்களை நிறைவேற்ற பணம் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு, பணத்தை திரட்டுவது ஒரு மிகப்பெரிய காரியமல்ல. வருங்காலத்தில் நீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், நதிகள் இணைப்பு இன்றியமையாதது என்பதை உணர்ந்து, 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நதிகள் இணைப்பை சேர்த்து, செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s