தேர்தல் முடிவால் போலீஸ் அதிகாரிகள் பதட்டம்

ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும் முடிவுகளை எதிர்பார்த்து அரசியல்வாதிகளும், அரசியலில் ஆர்வம் கொண்ட வாக்காளர்களும் பதட்டத்தோடு இருப்பது வழக்கம்.இந்த வரிசையில் சமீப காலமாக அரசு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளும் இடம் பிடித்து வருகின்றனர்.

இரு கழக அரசுகளும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வந்த நிலையில், அரசு நிர்வாகத்தை இயக்கும் தலைமைச் செயலரில் துவங்கி, துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள் வரை அனைவரிடத்திலும் எழுதப்படாத ஒரு பிரிவினை ஏற்பட்டு விட்டது. காவல்துறையிலும் இந்த பாதிப்பு பலமாக இருந்து வருகிறது. காவல்துறை அதிகாரிகளில் அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள், தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் என்று, பிரித்து பட்டிலிடும் அளவுக்கு இந்த முத்திரை பலமாக குத்தப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துவது போலவே, ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் அதிகாரிகள் மாற்றம் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2001ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியை பிடித்ததும், சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி.,யாக இருந்த துக்கையாண்டி, நாகர்கோவில் போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார். திருவல்லிக்கேணி துணை கமிஷனராக இருந்த சந்திரசேகர், மணிமுத்தாறு பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக இருந்த மவுரியா, திருச்சி ரயில்வே எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். இது போல இன்னும் பலரும் பணி மாறுதலுக்கு உள்ளானர்.கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இதே பாணியில் முக்கிய அதிகாரிகள் பந்தாடப்பட்டனர். அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், மிகுந்த செல்வாக்குடன் உளவுப் பிரிவில் இருந்த ஜார்ஜ், சிவனாண்டி போன்றவர்கள் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் ஓரங்கட்டப்பட்டனர்.இதில் ஜார்ஜ், தற்போது நாகர்கோவில் போக்குவரத்து விஜிலென்ஸ் உயர் அதிகாரியாக உள்ளார். வடசென்னை இணை கமிஷனராக இருந்த சைலேந்திரபாபு, ஆட்சி மாற்றத்தின் போது அடித்த அலையில், கரூர் காகித தொழிற்சாலை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு, சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார்.ஆனால், இவர்களில் சிவனாண்டியும், சைலேந்திரபாபுக்கும் தி.மு.க., ஆட்சியிலேயே மீண்டும் முக்கியத்துவம் கிடைத்தது. சிவனாண்டி மேற்கு மண்டல ஐ.ஜி.,யாகவும், சைலேந்திரபாபு கோவை கமிஷனராகவும் தற்போது பதவி வகிக்கின்றனர்.

கடந்த 2001ம் ஆண்டில் தி.மு.க., ஆட்சி முடிந்து, தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியை கைது செய்தது. அப்போது, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் முத்துக்கருப்பன். அவர், அந்த ஆட்சிக் காலத்திலேயே, “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு, ஓரங்கட்டப் பட்டார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து, மீண்டும் பதவி பெற்றுள்ளார்.முந்தைய நிகழ்வுகள் இவ்வாறு உள்ள நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷனின் கெடுபிடி, போலீஸ் அதிகாரிகளை பாரபட்சமின்றி செயல்பட வைத்தது. ஒரு வேளை, தேர்தல் முடிவு ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் பட்சத்தில், நடுநிலையாக செயல்பட்ட அதிகாரிகள் நிலை, அவர்களின் மனநிலையை பொறுத்தே அமையும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இந்த நிலை அப்படியே இருக்குமா என்பதை சொல்ல முடியாது.

அரசியல் கட்சியினரை பொறுத்தவரை, பெரும்பாலும் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்களையே குறிவைத்து மாறுதல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலின் போது, தமிழக உளவுப் பிரிவு உயர் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று, அ.தி.மு.க., கோரிக்கை வைத்தது; தேர்தல் கமிஷனும் மாற்றியது.தொடர்ந்து, மதுரை கமிஷனர், தென்மண்டல ஐ.ஜி., மதுரை மாவட்ட எஸ்.பி., ஆகியோர் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் நேர்மையானவர்கள் என்று பெயரெடுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இவர்கள் அப்படியே நீடிப்பர் என்று அதிகாரிகள் வட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.இது தவிர, இப்போதே அ.தி.மு.க., தலைமை, தங்களுக்கு வேண்டிய ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலை தயாரித்து, எந்தெந்த பதவிகளில் நியமிக்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவலும் கசிந்துள்ளது.

ஆளுங்கட்சியை பொறுத்தவரை, எதிர்க்கட்சி ஆதரவாளராக இருந்தாலும், அவர்களுக்கும் கரிசனம் காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு முன்னுதாரணமாக சிலருக்கு நல்ல பணியிடங்களும் இந்த ஆட்சியில் கிடைத்துள்ளது.ஆனால், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியானால், இறுதி வரை ஓரங்கட்டப்பட்டவர் அப்படியே தான் இருப்பார் என்ற கருத்தும் வலுவாக இருக்கிறது. மொத்தத்தில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தங்கள் நிலை என்னவாகுமோ என்ற பதட்டம் பெரும்பான்மையான போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தொடர்கிறது.

(dm)

Leave a comment