திருப்பத்தை ஏற்படுத்துமா திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு தனித் தொகுதி உட்பட 10 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மாவட்டத்தில் இருந்த எட்டு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், மூன்று தொகுதிகள் தி.மு.க., வசமும், இரு தொகுதிகள் காங்கிரஸ், “கை’யிலும் இருந்தன.தற்போது தொகுதி சீரமைப்பின்படி உருவாகியுள்ள 10 தொகுதிகளில், தி.மு.க., ஐந்து தொகுதிகளிலும், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும், பா.ம.க., இரு தொகுதிகளிலும் போட்டியிட்டன. எதிர் முகாமில் அ.தி.மு.க., ஏழு தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., இரு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் களம் கண்டன. பதிவான ஓட்டுகள் அடிப்படையில் எந்த கட்சி முந்தப்போகிறது என்பது குறித்த அலசல்:
கும்மிடிப்பூண்டி: தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 403 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 90 ஆயிரத்து 513 ஆண்களும், 88 ஆயிரத்து 602 பெண்கள் என, மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 115 பேர் தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு 83.15 சதவீதம்.
அ.தி.மு.க., பலம் பெற்றதாகக் கருதப்படும் கும்மிடிப்பூண்டி தொகுதி, கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளர் சி.எச்.சேகர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். மேலும், இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர். மகளிர் குழுக்களும் இவருக்கு ஆதரவாக செயல்பட்டன. தி.மு.க., கூட்டணி சார்பில் களமிறங்கிய பா.ம.க., வேட்பாளர் கே.என்.சேகர் தொகுதிக்கு தொடர்பில்லாதவர். பண பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கினார். தொகுதியில் அதிகளவு ஓட்டுப்பதிவானது தி.மு.க.,வினருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
பொன்னேரி (தனி): இத்தொகுதியில் இரண்டு லட்சத்து 2,427 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 82 ஆயிரத்து 521 ஆண்கள், 78 ஆயிரத்து 853 பெண்கள், திருநங்கைகள் 2 பேர் என, மொத்தம் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 376 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு 79.92 சதவீதம். மீனவப் பகுதிகள் நிறைந்த இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் மணிமேகலைக்கும், அ.தி.மு.க., வேட்பாளர் பொன்ராஜாவுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவுக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை நிலவரம் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்தது.ஆனால், கடைசி கட்டத்தில் மீனவ ஓட்டுக்களை குறிவைத்து பணப் பட்டுவாடா படு ஜரூராக நடந்தது. இதனால், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவான ஓட்டுகள் கலையும் வாய்ப்புள்ளது. இரு கட்சிகளில் யார் வென்றாலும், வித்தியாசம் குறைவாகவே இருக்கும்.
திருத்தணி: இத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 95 ஆயிரத்து 76 ஆண் வாக்காளர்கள், 95 ஆயிரத்து 290 பெண் வாக்காளர்கள் என, மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 366 பேர் தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு 80.75 சதவீதம்.தொகுதி சீரமைப்புக்கு முன்பு பள்ளிப்பட்டு தொகுதியில் இருந்த பல பகுதிகள் தற்போது திருத்தணி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. களத்தில் காங்கிரஸ் சார்பில் சதாசிவலிங்கமும், தே.மு.தி.க., சார்பில் கட்சியின் மேற்கு மாவட்ட செயலர் அருண் சுப்பிரமணியனும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் பல மக்கள் நலப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால், ஆளும் கட்சிக்கு ஆதரவு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
திருவள்ளூர்: மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் தொகுதியில் இரண்டு லட்சத்து 7,857 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 85 ஆயிரத்து 793 ஆண்கள், 83 ஆயிரத்து 336 பெண்கள், திருநங்கைகள் 6 பேர் என, மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 135 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு 81.37 சதவீதம்.
இத்தொகுதியில் தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ., சிவாஜியே மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை கடந்த தேர்தலிலும் எதிர்த்த அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.ரமணாவே இப்போதும் போட்டியிடுகிறார். பின்தங்கிய மாவட்டத்தின் தலைநகரில் போதுமான வளர்ச்சித் திட்டங்கள் இல்லாதது ஆளும் கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, கடைசி நேர பணப்பட்டுவாடா தேர்தல் முடிவை இழுபறியாக்கும் நிலை உள்ளது.
பூந்தமல்லி (தனி): இத்தொகுதியில் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 91 ஆயிரத்து 892 ஆண்கள், 87 ஆயிரத்து 861 பெண்கள், 9 திருநங்கைகள் என, மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 762 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு 78.37 சதவீதம்.இந்த தொகுதியில் அ.தி.மு.க., முதல் முறையாக நேரடியாக களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் மணிமாறன் கூட்டணி நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்புடன் கிராமம் கிராமமாக சென்று சூறாவளிப் பிரசாரம் செய்தார்.ஆனால், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டிடும் காங்., வேட்பாளர் மதியழகன் தாமதமாகவே களத்துக்கு வந்து சேர்ந்தார். பல இடங்களிலும் இவருக்கு எதிராக தி.மு.க.,வினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதும், காங்., கட்சிக்கு உள்ளேயே கோஷ்டி உள்ளடி வேலை நடந்ததும், தேர்தல் முடிவு அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவே எதிரொலிக்கும்.
பின்தங்கிய மாவட்டத்தின் தலைநகரில் போதுமான வளர்ச்சித் திட்டங்கள் இல்லாதது ஆளும் கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, கடைசி நேர பணப்பட்டுவாடா தேர்தல் முடிவை இழுபறியாக்கும் நிலை உள்ளது.

ஆவடி: மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என, பலதரப்பட்ட மக்களைக் கொண்ட இத்தொகுதியில், ஒரு லட்சத்து, 3,146 ஆண்கள்; 96 ஆயிரத்து, 366 பெண்கள் தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு, 71.89 சதவீதம்.

தொகுதி சீரமைப்பின் கீழ், பூந்தமல்லி தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, ஆவடி நகராட்சி, திருவேற்காடு, திருநின்றவூர் பேரூராட்சிகள், நெமிலிச்சேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கி உருவானது ஆவடி தொகுதி. ஆவடி நகராட்சியும், திருநின்றவூர் பேரூராட்சியும் காங்கிரஸ் வசமும், திருவேற்காடு பேரூராட்சி தி.மு.க., வசமும் உள்ளது. இருப்பினும், கடந்த எம்.பி., தேர்தலில், அ.தி.மு.க.,விற்கே அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.

தி.மு.க., கூட்டணியில், காங்., சார்பில் தாமோதரனும், அ.தி.மு.க., சார்பில் அப்துல் ரஹீமிற்கு இடையே போட்டி நிலவியது. அ.தி.மு.க., வேட்பாளர் தொகுதியில் தெரிந்த முகமாக உள்ளதால் அவருக்கு வெற்றிக்கனி கிடைக்கலாம் என்கின்றனர் தொகுதி மக்கள்.

மதுரவாயல்: இத்தொகுதியில், 96 ஆயிரத்து, 665 ஆண் வாக்காளர்கள்; 89 ஆயிரத்து, 515 பெண்கள் என, மொத்தம் ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 180 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு, 69.10 சதவீதம்.

இதுவும் தொகுதி சீரமைப்பில் புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதி. இங்கு, பா.ம.க.,வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மோதின.

பா.ம.க., சார்பில் செல்வமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பீம்ராவ் களத்தில் உள்ளனர். வெற்றி என்பதை இரு கட்சியினரும் கடுமையாக போராடி பெறவேண்டிய நிலையில் உள்ளனர். சாலை, குடிநீர் போன்ற எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவது, தேர்தல் முடிவில் எதிரொலிக்கும். இழுபறியில் உள்ள தொகுதி.

அம்பத்தூர்: தொழிலாளிகள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில், 96 ஆயிரத்து, 666 ஆண்கள்; 89 ஆயிரத்து, 685 பெண்கள் என, மொத்தம் ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 351 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு, 70.35 சதவீதம்.

மிகப்பெரிய தொகுதியாக இருந்த வில்லிவாக்கத்தில் இருந்து, தனியாக உருவானது அம்பத்தூர் தொகுதி. இங்கு ஆதிதிராவிடர்கள், வன்னியர்கள், 40 சதவீதம் உள்ளனர். மீதம், பிராமணர், முதலியார், நாயுடு உள்ளிட்ட இதர சமூகத்தினர் உள்ளனர். தி.மு.க., சார்பில் ரங்கநாதனும், அ.தி.மு.க., சார்பில் வேதாச்சலத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

தொகுதியில், ஓ.டி., பஸ் நிலைய விரிவாக்கம், 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படாமல் உள்ளன. ரயில்வே மேம்பாலம் அமைக்காதது என, பல குறைகள் தொகுதியில் தென்படுகிறது. எனினும், கடந்த தேர்தலில், தி.மு.க.,விற்கு அதிகளவில் ஓட்டு கிடைத்தது. இம்முறையும், தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது.

மாதவரம்: தேர்தலில் ஒரு லட்சத்து, 5 ஆயிரத்து, 133 ஆண் வாக்காளர்கள்; ஒரு லட்சத்து, 784 பெண் வாக்காளர்கள், ஒரு திருநங்கை என, மொத்தம் 2 லட்சத்து, 5 ஆயிரத்து, 918 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு 74.72 சதவீதம். தொகுதி மறுசீரமைப்பில் புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதி. பெரிய நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் கிடங்குகள் நிறைந்த பகுதி. தி.மு.க., வேட்பாளர் டாக்டர் கனிமொழி தொகுதிக்கு புதியவர் என்பதும், அவர் உள்ளூரைச் சேர்ந்தவர் அல்ல என்பது அவருக்கு மைனஸ்.

அ.தி.மு.க., வேட்பாளர் மூர்த்தி, தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், எளிதில் சந்திக்க முடியும் என, வாக்காளர்கள் கருதுவது அவருக்கு பெரிய பிளஸ் பாயின்ட்.

திருவொற்றியூர்: இத்தொகுதியில், 84 ஆயிரத்து, 986 ஆண்கள்; 82 ஆயிரத்து, 998 பெண்கள், திருநங்கை ஒருவர் என, மொத்தம் ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 985 வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு, 76.08 சதவீதம். தொழிலாளர் நிறைந்த இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக அமைச்சர் சாமியும், அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., குப்பனும் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக கருதப்படும் மாதவரம், புழல், மாத்தூர் பகுதிகள் பிரிந்து, மாதவரம் புதிய தொகுதியில் சேர்ந்து விட்டதால் தி.மு.க.,வுக்கு பலவீனமாகவே உள்ளது. தே.மு.தி.க., வரவு அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் பலம். வேட்பாளர்கள் இருவரும் மீனவர்கள் என்பதால், போட்டி பலமாகவே உள்ளது. அமைச்சராக இருந்தும், தி.மு.க., வேட்பாளர் சாமி தொகுதியில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குறைபாடு, அ.தி.மு.க.,வுக்கு வெற்றியை தரும் விதமாக உள்ளது.

மொத்தத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி விடுவோம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வினர் ஆனந்தமாகவே வலம் வருகின்றனர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s