அப்பா சொன்னாரென…

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டில் அடுக்கப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்- கனிமொழியின் மீதான குற்றச்சாட்டு அரசுப் பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றது என்பதுதான். இதனை அவர் எவ்வாறு செய்தார் என்பதை சிபிஐ தனக்கே உரித்தான வகையில் விவரிக்கிறது. இந்த வழக்கில், தனக்கான ஆதாயத்தொகை ரூ.214 கோடியை ஸ்வான் டெலிகாம் நிறுவனம் எவ்வாறு வேறு துணை நிறுவனங்கள் மூலம் வழிமாற்றி, கலைஞர் டிவிக்கு வழங்கியது என்பதுதான் வழக்கு.

இந்த வழக்கில் தலா 20 விழுக்காடு பங்கு வைத்துள்ள கனிமொழியையும் கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத்குமாரையும் எதிரிகளாக வழக்கில் சேர்த்துள்ள சிபிஐ, 60 விழுக்காடு பங்கு வைத்துள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை ஏன் சேர்க்கவில்லை என்பதை ஒரு குறையாகக் காணவும் முடியாது. ஏனென்றால், அந்த அம்மையார் பெயரை வைத்து, அவருடன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்களே தவிர, அந்த அம்மையார் ராடியாவிடம் பேசவில்லை. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் பேசவில்லை. அவர் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவும் இல்லை. ஆகவே, அவரைப் பங்குதாரராகச் சேர்த்துப் பணத்தை அவர் பெயரில் கொட்டினார்கள் என்பதைத் தவிர, அவர் செய்த குற்றம் ஏதுமில்லை என்று சி.பி.ஐ. முடிவு செய்திருக்கலாம்.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, தனக்கு ஆங்கில அறிவோ, சட்ட நுணுக்கங்கள் பற்றிய தெளிவோ, நிர்வாக அனுபவமோ இல்லாததால், விவரஸ்தரான மேலாண் இயக்குநர் சரத்குமாருக்கு தயாளு அம்மாள் ஏற்கெனவே பிரதிநிதித்துவ அதிகாரம் (பவர் ஆஃப் அட்டார்னி) வழங்கி இருப்பதால், அவரது பெயரைக் குற்றப்பத்திரிகையில் மத்தியப் புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை என்று தெரிகிறது. சிபிஐயின் இந்த முடிவில் தவறு காண முடியாது என்பதுதான் நமது கருத்து.

தயாளு அம்மாள் எதிரியாகச் சேர்க்கப்படாவிட்டாலும், அவர் முதல்வரின் மனைவி என்கிற உரிமை, அந்தஸ்து காரணமாகத்தான் அவர் பெயருக்கு 60 விழுக்காடு முதலீடு சேர்ந்துள்ளது என்பதால், இந்த வழக்கில் நியாயமாகக் குற்றவாளிப் பட்டியலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தயாளு அம்மாளுக்குக் கலைஞர் டிவியில் 60 விழுக்காடு பங்குக்கான நிதியை அளித்திருப்பார்களா?

தொகுதி உடன்பாடுப் பிரச்னையில், திமுகவின் பதவி விலகல் அச்சுறுத்தலே கூட சிபிஐ அதிகாரிகள் முதல்வரின் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் என்று அப்போது பேசப்பட்டது. அதைப்போலத்தான் சம்பவங்களும் நடந்தன. பதவி விலகல் கடிதத்தை இங்கிருந்தே ஒளிநகலில் அனுப்பி வைக்காமல் அனைவரும் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்திக்கக் காத்திருந்தனர். அந்த இடைவெளியில் சமரசங்கள் எட்டப்பட்டன. சமரசம் ஏற்பட்டதும், பதவி விலகல் கடிதங்கள் கிழித்தெறியப்பட்டன.

தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தால், கருணாநிதி குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்வது உறுதி என்ற பேச்சு திமுக தரப்பிலேயே பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே இந்த வழக்குப் பதிவு நடைபெற்றுவிட்டது. இது மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றிய உளவுத்துறை அறிக்கையால் ஏற்பட்ட தைரியமோ என்னவோ தெரியவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளிவராத இன்றைய சூழலில் மீண்டும் அடுத்த பதவி விலகல் கடிதம் எழுதும் நாடகத்தைத் திமுக தொடங்குமா என்பது சந்தேகமே. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டால், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தயாராக இருக்கிறார். வெறும் 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றாலும்கூட தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் தர்ம சங்கடத்தில் சிக்கி இருக்கிறது என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். திமுக தலைவரின் குடும்பத்திலும் சரி, கட்சியிலும் சரி ஆ. ராசாவை பலிகடா ஆக்கியதைப்போல, கனிமொழியையும் பலிகடா ஆக்க முதல்வர் கருணாநிதிக்கு நெருக்குதல்கள் கொடுக்கப்படலாம் என்றும் நம்ப இடமிருக்கிறது. கூட்டணியிலிருந்து திமுக விலகுவதைக் காட்டிலும் இந்த வழக்கில் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தார்மிகப் பொறுப்பேற்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதுதான் நடைபெறக்கூடும்.

கனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு, “பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் பேசக்கூடாது’ என்று கூறி இருக்கிறார் முதல்வர். ஆனால், தனது குடும்பப் பெண்களை முன்னிறுத்தித் தவறான செயல்பாடுகளுக்கு அவர்களை உடந்தையாக்கிய முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? தனது அரசியல் சூதாட்டத்துக்காகத் தனது குடும்பப் பெண்களைப் பகடைக் காய்களாக உருட்டிய குற்றத்துக்கு, முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனைதான் இந்தத் துணைக் குற்றப்பத்திரிகை.

“”நிலைமை எங்கள் கையைவிட்டுப் போய்விட்டது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட முடியாது. அதனால், எங்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை” என்கிற காங்கிரஸின் வாதம், எந்த நேரத்திலும் திமுகவைத் கைகழுவக் காங்கிரஸ் காரணம் கண்டுபிடித்துவிட்டது என்கிற தோற்றத்தையல்லவா ஏற்படுத்துகிறது? இதைக்கூட அனுபவசாலியான முதல்வர் கருணாநிதி புரிந்துகொள்ள முடியாதவரா என்ன?

உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும்! இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட்பட்டவர்கள் அல்லர்! முதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக கனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது. “அப்பா சொன்னாரென…’

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s