site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

காமன்வெல்த் ஊழல்: கல்மாடி கைது

Posted by sambala87(சூரியன்) on April 26, 2011

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் கல்மாடி (66) தில்லியில் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த ஆண்டு அக்டோபரில் தில்லியில் நடைபெற்றது.

லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் ஜோதி தொடக்க விழாவில் ஆரம்பித்து விளையாட்டுப் போட்டிக்கான கருவிகள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமம், விளையாட்டுப் போட்டி மைதானங்களைத் தயார் செய்தது ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கு காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் அப்போதைய தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான சுரேஷ் கல்மாடிதான் பொறுப்பு என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டின.

இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., பல மாதங்களாக விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கல்மாடியிடம் சிபிஐ அதிகாரிகள் 3 முறை விசாரணை நடத்தியுள்ளனர். அவரது வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 20-ம் தேதி மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால், மருத்துவ காரணங்களைக் காட்டி சுரேஷ் கல்மாடி விசாரணைக்கு வராமல் தவிர்த்தார்.

இந் நிலையில், திங்கள்கிழமை காலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கு வந்த சுரேஷ் கல்மாடியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் தரணி மிஸ்ரா தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்: ஒருங்கிணைப்புக் குழு துணை பொது இயக்குநர் சுர்ஜித் லால், இணை பொது இயக்குநர் பிரசாத் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர். கல்மாடி உள்பட 3 பேரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

காங்கிரஸிலிருந்து இடைநீக்கம்: கல்மாடி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமையில் தில்லியில் கூடி ஆலோசனை நடத்தியது.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் துவிவேதி, கட்சிப் பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சுரேஷ் கல்மாடி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தால், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி செயலர் பொறுப்பிலிருந்து முன்னரே அவர் நீக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவரை நீக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் அறிவுறுத்தியுள்ளார்.

லண்டனில் விசாரணை: கடந்த வாரம் லண்டன் சென்ற சிபிஐ. அதிகாரிகள், அங்கு விசாரணை நடத்தியபோது கல்மாடிக்கு எதிராக முக்கிய ஆவணங்களும், விடியோ ஆதாரங்களும் கிடைத்ததாகத் தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த பொதுச்செயலாளர் லலித் பனோட் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் முன்னரே கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

காமன்வெல்த் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ இதுவரை 6 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

கல்மாடி கைது தாமதமானது: கல்மாடி கைது செய்யப்பட்டது தாமதமான நடவடிக்கை என்று பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தெரிவித்துள்ளன.

சுரேஷ் கல்மாடி மீது செருப்பு வீச்சு:

தில்லி காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியை இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது, அவர் மீது ஒருவர் தனது செருப்பை வீசினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை, தில்லி நீதிமன்றத்தில் கல்மாடி ஆஜர்படுத்தப்படும்போது, இச்சம்பவம் நடைபெற்றது.

செருப்பு வீசிய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: