ஹசன் அலி ஹவாலா மன்னன்…..

இந்தியாவில் இருந்து, யூனியன் பாங்க் ஆப் சுவிட்சர்லாந்துக்கு, பல கோடி ரூபாயை சுருட்டி அனுப்பிய ஹவாலா மன்னன் ஹசன் அலி கான், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பாதுகாப்புக்கு, இறையாண்மைக்கு, நீதிக்கு, சி.பி.ஐ.,க்கு, அமலாக்க பிரிவினருக்கு, அரசாங்கத்திற்கு சவால் விடுத்து வருகிறார்.

இவருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? 36 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து எங்கே சென்றது? கறுப்பு பணம் சுருட்டலுக்கு உடந்தையாக இருந்த முதலைகள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை அல்லது விசாரிக்கப்படவே இல்லை போன்ற பல்வேறு மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் உள்ளது. இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது யார்?

இந்தியாவிற்கு ஹசன் அலியின் வருமான வரி பாக்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் என்று இந்திய வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவரிடம் இருந்து இவ்வளவு பெரிய பணத்தை வருமான வரி எப்படி வசூலிக்க போகிறது. இச்சூழலில், ஹசன் அலியின் சொத்துக்களை முடக்க, வரி பணத்தை வசூலிக்க சுப்ரீம் கோர்ட் தன் அஸ்திரத்தை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில், 53 வயதான ஹசன் அலி, பதுக்கிய பணம், 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இவ்வளவு பணத்தை இவர் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்க இவர் ஒன்றும் பெரிய தொழிலதிபரும் கிடையாது. சாதாரணமாக, குதிரை ரேசில் கலந்து கொள்பவர் தான்.

ஐதராபாத்தில் உள்ள முசிராபாத் என்ற ஊர்தான், ஹசன் அலியின் சொந்த ஊர். அப்பா வரி துறையில் பணியாற்றியவர். ஆறு சகோதரிகள், ஒரு சகோதரர் என்று பெரிய குடும்பம். 1984ம் ஆண்டில், பக்கத்து வீட்டு பணக்கார டாக்டர் மீது பொறாமையில் ஆசிட் வீசியது ஹசன் அலி செய்த முதல் குற்றம். இதற்கு பின்னர், பள்ளி படிப்பை தொடரவில்லை. பழங்காலத்து பொருட்களை விற்று வந்தார். நிசாம் அரசு குடும்பத்து தூரத்து உறவினர் பெண்ணான மெபூப் உன்னிசா பேகம் என்பவரை திருமணம் செய்தார். அப்போதும், நிசாம் மன்னர் குடும்ப பெயரை பயன்படுத்தி, பழங்காலத்து பொருட்களை விற்று பணம் சம்பாதித்து வந்தார்.

கடந்த 1990, 1991ம் ஆண்டுகளில், ஹசன் அலி மீது, ஐதராபாத் போலீசார் ஏமாற்றுதல், போலி தயாரிப்புகள் உட்பட மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். மேலும், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்திடம் ரூ. 25 லட்சம் ஏமாற்றியது, பணத்திற்கு பதில் டாலர் தருவதாக நான்கு பேரிடம் 70 லட்சம் ரூபாய் பெற்று தலைமறைவு ஆனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதற்கு முன்பே குதிரை ரேசில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். மேலும், உலோகப் பொருட்கள் தயாரிப்பு கம்பெனி, கார் டிராவல்ஸ் என சிறிய அளவில் ஈடுபட்டார். 1991ம் ஆண்டில், ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்சில் வாங்கிய வீட்டில், மனைவி மெபூப் மற்றும் இரண்டு மகன்களுடன் குடியேறினார். ஐதராபாத்தில் நடக்கும் குதிரை ரேசில் தவறாமல் கலந்து கொண்டார். இதன் பின் இவரது வாழ்க்கையின் திசை மாறியது. அடிக்கடி ஐதராபாத்துக்கும், மும்பைக்கும் சென்று வந்தார். புனேயில் குதிரை பண்ணை அமைத்தார். அங்கு குதிரைகளுக்கு பயிற்சி கொடுப்பவரின் தங்கையான ரீமாவுடன் தொடர்பு ஏற்பட்டது. 1999ல், ஐதராபாத் வந்த ஹசன் அலி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். 2000ல் ரீமாவை திருமணம் செய்து, புனேயில் குடியேறினார். இவரை இருமுறை ஐதராபாத் போலீசார் கைது செய்து விடுவித்தனர். 2005ம் ஆண்டுக்கு பின்னர் ஹசன் அலி ஐதராபாத் வரவில்லை.

சர்வதேச அளவில் இவரது தொடர்பு விரிந்தது. ஹசன் அலியுடன் குற்றம்சாட்டப்பட்டவர் காஷிநாத் தபுரியா. இவர்களுக்கு நாட்டின் அதிகார மட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்கிறது மற்றும் சர்வதேச ஆயுதபேர டீலரான அதான் க÷ஷாக்கியுடன் தொடர்பு இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டும், அமலாக்கப் பிரிவினரும் சமீபத்தில் தெரிவித்தனர். ரஷ்ய தொழிலதிபர் சுலைமான் கெரிமோவ் மற்றும் கசோக்கி இருவருக்கும் இந்திய மாபியாக்களாக செயல்பட்ட ஹசன் அலி மற்றும் தபுரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது தொடர்பு சர்வதேச அளவில் விரிந்தது. சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவுக்கு பின்னர், வெளிநாட்டில் எந்தெந்த வங்கிகளில் ஹசன் அலி கறுப்பு பணம் பதுக்கி உள்ளார். இவர் எந்தெந்த ஆண்டில், எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார், தீவிரவாதிகளுடனான தொடர்பு போன்ற விவரங்களை அமலாக்க பிரிவினர் சேகரித்து வருகின்றனர். இவற்றை செய்து முடிக்க கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இப்பணியில் அமலாக்கப் பிரிவினர் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து தொழிலதிபர் ஆனந்த் பிலிப்ராஜ். இவருடன் ஹசன் அலிக்கு நெருக்கம் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் ரெஸ்டாரன்ட் துவக்க ஹசன் அலி விருப்பம் தெரிவித்துள்ளார். இதன்படி, அங்கு ரெஸ்டாரன்ட் தேடும் பணியில் பிலிப்ராஜ் ஈடுபட்டார். ஹசன் அலி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில், பிலிப்ராஜ்க்கு சொந்தமான லேப் – டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து கிடைத்த தகவல்களின்படி ஹசன் அலி செய்த வரி ஏய்ப்பும், கறுப்பு பணம் குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளது. கோல்கட்டாவில் தபுரியா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட “பென் டிரைவில்’ இருந்து பெறப்பட்ட தகவல்களும், பிலிப்ராஜின் லேப்டாப்பில் கிடைத்த தகவல்களும் ஒன்று போல் இருந்துள்ளது. இதை வைத்து தான் அமலாக்க பிரிவினரும், வருமான வரி அதிகாரிகளும் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தகவல் அடிப்படையில், இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான, இரட்டை வரி விலக்கு ஒப்பந்தத்தின் கீழ், சுவிஸ் வங்கியில் இருந்து தகவல் பெற அமலாக்க பிரிவினர் முயற்சித்தனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் கீழ் தகவல்கள் கொடுக்க சட்டம் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து மும்பையில் உள்ள தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் “லீவரேஜ் ரேசியோ’ எனப்படும் சிறப்பு அதிகாரம் பெற்று, தகவல்கள் பெற அனுமதிக்கும்படி, சுவிட்சர்லாந்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அங்கேயும் தோல்வி. கிரிமினல் குற்றங்கள் இருந்தால் தான், தகவல் பெற சுவிட்சர்லாந்து சட்டம் அனுமதிக்கும் என்று கூறிவிட்டனர். தற்போது ஹசன் அலியின் வழக்கு வருமான வரி துறைக்கும், அமலாக்க பிரிவுக்கும் சவாலாக இருந்து வருகிறது.

கடந்த மார்ச் 7ம் தேதி, புனேயில் உள்ள ஹசன் அலி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹசன் அலி தற்போது மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். “கறுப்பு பணம் பற்றி விசாரித்து வரும் ஏஜென்சிகள் துங்குகிறார்களா? இதுவரை என்ன நடந்துள்ளது’ என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி நிஜார் சமீபத்தில் இந்திய சொலிசிடர் ஜெனரலிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இனி இந்த வழக்கு குதிரை ஓட்டம் எடுக்கும் என நம்பலாம்.

ஹசன் அலியும், கைதும்…

* ஜனவரி 2007 – வருமான வரி துறையினர், புனேயில், கோரேகான் பார்க்கில் உள்ள ஹசன் அலி வீட்டில் ரெய்டு நடத்தினர். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் வங்கியில் 36 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி இருப்பதாகவும், வரி ஏய்ப்பு, அபராதம் என இவர் வருமான வரிக்கு செலுத்த வேண்டிய பாக்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் என தகவல் வெளியானது.

* டிசம்பர் 2008 – போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது, மும்பை வருமான வரி துறை அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

* மார்ச் 3, 2011 – கறுப்பு பணம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் கடுமையாக சாடியது.

* மார்ச் 4, நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பு நோட்டீஸ் வெளியிட்டது.

* மார்ச் 7, அமலாக்க பிரிவு 14 இடங்களில் ரெய்டு நடத்தி, ஹசன் அலியை கைது செய்தது.

* மார்ச் 12, ஹசனை காவலில் எடுக்க அமலாக்க பிரிவுக்கு மும்பை கோர்ட் அனுமதி மறுத்தது.

* மார்ச் 17, ஹசன் அலிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து, காவலில் எடுக்க, அமலாக்க பிரிவுக்கு அனுமதி வழங்கிது.

* மார்ச் 22, ஹசன் அலியிடம் 2007ம் ஆண்டில் இருந்து கணக்கு தணிக்கையாளராக இருக்கும் சுனில் ஷிண்டே வீட்டில் அமலாக்க பிரிவு ரெய்டு நடத்தியது.

ஹசன் அலியும், ஆடம்பரமும்…

* தன்னுடைய மெர்சிடஸ் காரில் எப்போதும் முன் சீட்டில் ஹசன் அலி அமருவார். காருக்குள் பார் உள்ளது.

* எப்போதெல்லாம் மும்பையில் உள்ள வீட்டிற்கு செல்கிறாரோ, இவருடன் வேறொரு காரில் பணியாட்கள் செல்வார்கள்.

* 2007ம் ஆண்டில், வருமான வரி துறையினர் ரெய்டு நடத்திய போது, மும்பையில், பெட்டார் ரோட்டில் உள்ள வீட்டு லாக்கரில் 88 லட்சம் ரூபாய் வைத்து இருப்பதாக கூறினார். அதன்படி, வருமான வரிதுறை அந்த பணத்தை பறிமுதல் செய்தது.

* பத்திரிகை படிக்கும் பழக்கம் இல்லாத ஹசன், பத்திரிகைகளில் தனது பெயர் அடிக்கடி வர படிக்க துவங்கினார்.

அமலாக்க பிரிவின் விசாரணை

* ஹசன் அலியின் வங்கி கணக்கு, பரிவர்த்தனை
* இவரது தொடர்புகள் மற்றும் தொழில்
* வெளிநாட்டில் மேற்கொண்ட பயணம், வர்த்தக தொடர்புகள்
* தீவிரவாதிகள் மற்றும் சட்டவிரோதிகளுடனான தொடர்பு
* தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
* வெளிநாட்டு பரிவர்த்தனையில் சட்டத்தை மீறியது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s