ம.தி.மு.க., தொண்டர்கள் விரக்தி….

“முற்பகல் செய்ததற்கான பலன், பிற்பகல் விளைந்து விட்டது. எங்களுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்’ என, நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட நிலை குறித்து, ம.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., “சீட்’ பிரச்னையால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால், ம.தி.மு.க.,வினர் பெருத்த ஏமாற்றமடைந்தனர். அவர்கள் வசூலித்து கொடுத்த தேர்தல் நிதியும் வீணானது. சும்மா இருந்த ம.தி.மு.க.,வினரை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட கருணாநிதி, வைகோவை பாராட்டும் வகையில், “எதிர் வரிசையில், இந்திரஜித்தை காணவில்லை. நாம் எல்லாரும் ஓர் இனம் என்ற அடிப்படையில் வரிப்புலி வரிசையே வருக’ என, அறிக்கை வெளியிட்டார். இதற்கு கை மேல் பலனும் கிடைக்க துவங்கியது. முதல்வர் அழைப்பிற்கு, வைகோ நேரிடையாக பதில் அளிக்காவிட்டாலும், நாஞ்சில் சம்பத் போன்ற கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள், தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசத் துவங்கினர். இது தான் சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த தி.மு.க.,வினர், தத்தமது பகுதிகளில் உள்ள ம.தி.மு.க.,வின் உள்ளூர் நிர்வாகிகளை வளைத்து போட்டு தங்களுக்கு ஆதரவாக களம் இறக்கினர். நீண்ட நாட்களாக, “காய்ந்து’ போயிருந்த ம.தி.மு.க.,வினருக்கு, தி.மு.க.,வின், “அரவணைப்பு’ கிடைத்ததும், அப்படியே உச்சி குளிர்ந்தனர். பல மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு ஆதரவாக தீர்மானமே போட்டனர்.

இப்படி கொஞ்சம், கொஞ்சமாக தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையில் இருந்து விடுபட்டு, தி.மு.க., கூட்டணியில், “சீட்’ வாங்காமலேயே, அவர்களுக்கு பாடுபடுவது என்ற அவல நிலைக்கு ம.தி.மு.க., தன்னை அறியாமலே தள்ளப்பட்டது. எந்த தி.மு.க.,வால் தங்களுக்கு கடந்த தேர்தலில், 35 இடங்கள் கிடைத்தது போய், 12 இடம் தான் அதிகபட்சம் கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதோ, எந்த தி.மு.க., தங்களின் ஆறு எம்.எல்.ஏ.,க் களை, மூன்று எம்.எல். ஏ.,க்களாக குறைத்ததோ, பெரும்பாலான முக்கிய நிர்வாகிகளை எல்லாம் கவர்ந்து, கட்சியை கரைத்ததோ, அந்த கட்சியுடன் தோழமையோடு இருந்து செயல்படுங்கள் என்ற தலைமையின் கட்டளையை ஏற்க பெரும்பாலான, ம.தி.மு.க., தொண்டர்களின் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால், வேறு வழியின்றி, பலரும் தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பாடுபட்டனர்.

இத்தகைய அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டது குறித்து, ம.தி.மு.க., தொண்டர்கள் சிலர், விரக்தியுடன் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியில் இருந்தபோது, ம.தி.மு.க.,விற்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதில், ஒழுங்காக இருந்தோமா; இல்லை. “வாஜ்பாய், எனது தந்தையைப் போன்றவர். எந்த துறை வேண்டும் கேளுங்கள் தருகிறோம் என்றார். நான் தான் மறுத்துவிட்டேன்’ எனக்கூறிய வைகோ, எவ்வித காரணமும் இன்றி, இதே, தி.மு.க., அழைத்ததற்காக, 2004ம் ஆண்டு, பா.ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.,வை வெளியே கொண்டு வந்தார். அந்த தேர்தலில், எங்களுக்கான பார்லிமென்ட் தொகுதிகளை, தி.மு.க., நான்காக குறைத்தது. அதையும் வைகோ ஏற்றுக் கொண்டார். எங்களின் நிலைப்பாட்டால், பா.ஜ., ஆட்சியை கவிழ்த்த, அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர நேரிட்டது. தமிழகத்தில், 40 சீட்டும் காங்கிரஸ் வசம் போனது. தமிழர்களால் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், தமிழர்களையே அழித்தது. அதற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணம். எந்த காங்கிரசை மூச்சுக்கு முன்னூறு தரம் எதிர்க்கிறாரோ, இன்று அதே கட்சி இடம்பெற்றுள்ள தி.மு.க., அணிக்கு, தன் மறைமுக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். பா.ஜ.,விற்கு நாங்கள் இழைத்த துரோகம் தான், எங்களை திட்டமிட்டு அழித்த கட்சிக்கு இன்று பணி செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. அதாவது, நாங்கள் முற்பகல் செய்தது, பிற்பகல் விளைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s