திருச்சியில் கைப்பற்றப்பட்ட ரூ.5.11 கோடி யாருடையது?

ஏப்ரல் 4ம் தேதி அதிகாலை 3 மணியளவில் தமிழகத்தையே, ஏன் இந்திய அரசியல் வட்டாரத்தையே கலக்கிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. திருச்சி பொன்னகரில், ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த, எம்.ஜே.டி., என்ற ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாயை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா கண்டுபிடித்து பறிமுதல் செய்த நிகழ்ச்சி தான் அது!

இந்திய அளவில், தேர்தல் நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை பிடிபட்டது என்பதால், 5ம் தேதி தமிழகம் முழுவதும் இவ்விஷயமே அனைத்து தரப்பினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. பணத்துடன், அந்த ஆம்னி பஸ் மற்றும் இன்னோவா கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், ஆம்னி பஸ், அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும் பரபரப்பை அதிகரித்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமார் யார், அவருக்கும், அமைச்சர் நேருவுக்கும் என்ன தொடர்பு, அவருடைய பின்னணி என்ன?

உதயகுமாரின் சொந்த ஊர், திருச்சி மாவட்டம் முசிறி தண்டலைபுதூர் அருகே உள்ள குக்கிராமம். இவரது மனைவி உமா மகேஸ்வரி, மகன் அருண் பாலாஜி. 1989ம் ஆண்டு திருச்சியில், ஒரு பஸ்சை வைத்து சுற்றுலா மற்றும் ஸ்பேர் பஸ்சாக பயன்படுத்தி வருமானம் ஈட்டி வந்தார்.

அப்போது, திருச்சியில் பஸ்களை இயக்கி வந்த ஒரு சிலர், தங்கள் பஸ் எப்.சி.,க்கு செல்லும் போது, அந்த ரூட்டில் பஸ்சை இயக்கி சம்பாதித்துக் கொள்ள உதயகுமாருக்கு அனுமதி வழங்கினர். அமைச்சர் நேரு, 1993ம் ஆண்டு தி.மு.க., மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, திருச்சிக்கு வந்தார்.

அப்போது, அவர் சார்ந்த சமுதாயத்தின் (ரெட்டியார்) பஸ் உரிமையாளர்கள் சிலர், தமது சமுதாயத்தைச் சேர்ந்த நேருவுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என ஆதரவுக்கரம் நீட்டினர். அவர்களின் ஒருவராக வந்தவர் தான் உதயகுமார். அப்படி அறிமுகமான உதயகுமார் தன்னுடைய நடவடிக்கைகளால், நேரு மற்றும் அவரது தம்பி ராமஜெயத்தின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.

இப்படி அமைச்சர் குடும்பத்திடம் நெருக்கம் காட்டிய உதயகுமாரின் வளர்ச்சி, அமைச்சர் நேரு, 1996ம் ஆண்டு அமைச்சரானதுக்குப் பின் தான். அமைச்சரின் உதவியோடு, தன் வசதி வாய்ப்புகளை உதயகுமார் கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கிக் கொண்டார். அதன் பின், 2006ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நேரு பொறுப்பேற்ற பின், உதயகுமாரின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. போக்குவரத்து துறை மூலம் என்னென்ன சலுகை பெறவேண்டுமோ, அதையெல்லாம் பெற்று, தன் செல்வத்தையும், செல்வாக்கையும் உயர்த்திக் கொண்டார்.

அமைச்சரிடம் விசுவாசமாக இருந்த காரணத்தால், உதயகுமார் நடத்தும் எம்.ஜே.டி., (முத்துஜெயம் டிராவல்ஸ்) ஆம்னி நிறுவனத்துக்கு, கர்நாடகா அரசின் டிக்கெட் விற்பனை ஏஜன்ட் வாய்ப்பு கிடைத்தது. இப்படியாக, அமைச்சரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தின் மூலம், தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்ட உதயகுமார் நிறுவனத்தில், தற்போது எட்டுக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் ஓடுகின்றன.

அமைச்சரின் செல்வாக்கை பயன்படுத்தி, விழாக்காலங்களில், ஸ்பேர் பஸ்களை ஆம்னி பஸ்களாக மாற்றி, முறையான பர்மிட் இல்லாமல், சென்னை, பெங்களூருக்கு கடந்த ஐந்தாண்டுகளாக இயக்கியுள்ளார். இதன் மூலம், கோடிக்கணக்கில் வருவாய் பார்த்துள்ளார். இதுதவிர, அமைச்சரிடமும், அமைச்சரின் தம்பி ராமஜெயத்திடமும் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, போக்குவரத்துத் துறையில் பல வேலைகளை சாதித்துள்ளார். அதன் மூலம், பெரிய அளவில் உதயகுமார் சம்பாதித்ததாகவும் பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அமைச்சரிடம் நெருக்கமாக இருக்கும் தைரியத்தில் தான், சில மாதங்களுக்கு முன், விதிமுறை மீறி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த தன் ஆம்னி பஸ்சை, போக்குவரத்து போலீசார் எடுக்கக் கூடாது என்று மிரட்டியதோடு, “என்னை ஏதும் செய்ய முடியாது’ என, போலீசாரிடம், மக்கள் முன்னிலையில் சவால் விட்டார்.

அப்போது முதல் உதயகுமார் மீது அதிருப்தியில் இருந்த போலீசார், அவருடைய பஸ்சிருந்து ஐந்து கோடி ரூபாய் எடுக்கப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்ததும், மிகுந்த சந்தோஷமடைந்தனர்.

இப்படி, முழுக்க முழுக்க அமைச்சரால் வளர்ச்சி அடைந்த உதயகுமார், தன் பஸ்சில் மாட்டிய தொகை, ரியல் எஸ்டேட் பிசினசில் சம்பாதித்த பணம் என்று, வருமான வரித்துறையிடம் உரிமை கொண்டாடியுள்ளார் என்பது லேட்டஸ்ட் தகவல். ஆனால், பஸ்சில் பிடிபட்ட பணம் எவ்வளவு என்பது வருமான வரித்துறை விசாரித்த போது, உதயகுமாருக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பணம் யாருடையது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. தற்போது வருமான வரித்துறை வசம் உள்ள அந்த பணத்தை கைப்பற்ற உதயகுமார் ஆவணங்களை தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s