விழுப்புரம் மாவட்டத்தில் வெற்றி யாருக்கு?

விழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியினர் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டனர். முதல் முறையாக, பா.ம.க., – வி.சி., ஒரே அணியில் உள்ளனர். இம்மாவட்டத்தில் தங்களுக்கு தனி செல்வாக்கு இருப்பதாக இரு கட்சிகளும் கூறி வருகின்றன. இத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், தங்கள் செல்வாக்கு நிரூபிக்கப்படும் என்ற கட்டாயத்திலும் இக்கட்சிகள் உள்ளன. அக்கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடிப்படையிலான நிலவரம்:

திண்டிவனம் (தனி): பொது தொகுதியாக இருந்தபோது, 1991, 1996 மற்றும் 2006 தேர்தல்களில் பா.ம.க., தலைமை நிலைய செயலர் கருணாநிதி போட்டியிட்டு, மூன்று முறையும் தோல்வியடைந்தார். மறு சீரமைப்பில் திண்டிவனம் தற்போது தனி தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

இத்தொகுதியில், 1 லட்சத்து, 88 ஆயிரத்து, 405 வாக்காளர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வில், டாக்டர் ஹரிதாஸ், பா.ம.க.,வில் சங்கர் நேரடி போட்டியில் குதித்தனர். தேர்தலில், 76 ஆயிரத்து, 599 ஆண்கள், 75 ஆயிரத்து, 856 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 52 ஆயிரத்து, 456 பேர் ஓட்டளித்துள்ளனர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சொந்த ஊர் என்பதால், அக்கட்சி வேட்பாளர் சங்கருக்கு ஆதரவாக நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றினர். இருப்பினும், வேட்பாளர் கொடுத்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்காமல், கட்சியினர் சுருட்டிக் கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

அ.தி.மு.க., வேட்பாளர் ஹரிதாஸ், மரக்காணம் மீனவ சமுதாய ஓட்டுகள் அதிகளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். தன் சொந்த ஊரில் மூன்று முறை தோல்வியை தழுவிய பா.ம.க., இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கனவு நனவாக, மீனவர் சமுதாய ஓட்டுகள் இடையூறாக அமைந்துள்ளது.

மயிலம்: பா.ம.க., சார்பில் பிரகாஷ், அ.தி.மு.க., சார்பில் நாகராஜன் இடையே போட்டி உள்ளது. இங்கு, 2 லட்சத்து, 13 ஆயிரத்து, 236 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 77 ஆயிரத்து, 148 ஆண்கள், 74 ஆயிரத்து, 20 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 794 பேர் ஓட்டளித்தனர்.

பா.ம.க., வேட்பாளருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மேற்பார்வையில், கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்தனர். கடைசி வரை, அ.தி.மு.க., வேட்பாளர் மீது அதிருப்தி நீங்கவில்லை. தே.மு.தி.க.,விலும் சரியான ஒத்துழைப்பு இல்லாததால், பா.ம.க., வேட்பாளர் பிரகா(ஷ்)சமாக உள்ளார்.

செஞ்சி: தே.மு.தி.க., சார்பில் சிவா, பா.ம.க., சார்பில் கணேஷ் குமார் நேரடி போட்டியில் உள்ளனர். மொத்தமுள்ள, 2 லட்சத்து, 13 ஆயிரத்து, 236 வாக்காளர்களில், 87 ஆயிரத்து, 530 ஆண்கள், 86 ஆயிரத்து, 254 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 794 பேர் ஓட்டளித்தனர்.

கடந்த தேர்தல்களில், அ.தி.மு.க., – தே.மு.தி.க., தனியாக பெற்ற ஓட்டுகள் அடிப்படையில், தே.மு.தி.க., வேட்பாளர் சிவா வெற்றி களிப்பில் உள்ளார். ஜாதி அடிப்படையில் தங்களுக்கு தனி செல்வாக்கு இருப்பதாக, பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமார் நம்பிக்கையில் உள்ளார்.

கள்ளக்குறிச்சி (தனி): அ.தி.மு.க., சார்பில் நகராட்சி சேர்மன் அழகுவேல் பாபு, வி.சி., சார்பில் பாவரசு நேரடி போட்டியில் உள்ளனர். மொத்தம், 2 லட்சத்து, 17 ஆயிரத்து, 189 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில், 87 ஆயிரத்து, 290 ஆண்கள், 90 ஆயிரத்து, 795 பெண்கள் என, 1 லட்சத்து, 78 ஆயிரத்து, 86 பேர் ஓட்டளித்துள்ளனர்.

தே.மு.தி.க., பலத்தோடு களமிறங்கிய அ.தி.மு.க.,வேட்பாளர் பெண் என்பது கூடுதல் பலம். இங்கு பெண்கள் அதிகளவு ஓட்டளித்துள்ளனர். எதிரணி வேட்பாளர் வெளியூர்காரர். தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் கடந்த கால செயல்பாடுகள் ஓட்டுகளை குறைக்கும். ஆளும் கட்சியினர் தொகுதிக்கு ஏதும் செய்யவில்லை என்பதால், எளிதில் வெற்றி பெறுவோம் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர்.

தி.மு.க., அரசின் சாதனைகள், கூட்டணி பலம் வெற்றி வாய்ப்பு அளிக்கும். தங்கள் கட்சிக்கு இப்பகுதியில் தனி செல்வாக்கு உள்ளது. இது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று, வி.சி., தரப்பில் கூறுகின்றனர்.

உளுந்தூர்பேட்டை: இத்தொகுதியில் மொத்தம், 2 லட்சத்து, 28 ஆயிரத்து, 950 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 96 ஆயிரத்து, 232 ஆண்கள், 94 ஆயிரத்து, 345 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 90 ஆயிரத்து, 578 பேர் ஓட்டளித்துள்ளனர்.

அ.தி.மு.க., “சிட்டிங்’ எம்.எல்.ஏ., குமரகுரு, வி.சி., தொழிலதிபர் முகமது யூசுப் இடையே போட்டி உள்ளது. குமரகுருவுக்கு சிலர் எதிராக செயல்பட்டாலும், கூட்டணி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டினர். கூட்டணி பலம் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, வி.சி., தரப்பில் நம்புகின்றனர்.

அதே நேரத்தில், தங்களுக்கு சீட் கிடைக்காததால், தி.மு.க., கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். இங்கு, வி.சி., வெற்றி பெற்றால், பேரூராட்சி, ஒன்றிய சேர்மன் பதவிகளையும் கைப்பற்ற நினைப்பர் என்ற அச்சம் தி.மு.க., – அ.தி.மு.க., இடையே நிலவியது. இந்த அச்சம் ஓட்டுப்பதிவில் வேலை செய்தால், குமரகுரு மீண்டும் வர வாய்ப்புள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s