தேர்தல் முடிவு கணிப்புகள்….

ஒவ்வொரு தேர்தலிலும், மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக நிலவரங்களை அலசி ஆராய்ந்து, வெற்றி, தோல்வி குறித்த விவரங்களை நாளிதழ்களும், வார இதழ்களும் வெளியிடுகின்றன. இது, ஓரளவு சரியாகவும், தவறாகவும் அமைந்தாலும் சர்வே முடிவுகளை தெரிந்து கொள்ள, கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் மிகவும் ஆர்வமாக இருப்பர். இந்த சட்டசபை தேர்தலிலும், ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட வார இதழ்கள், தேர்தல் முடிவு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளன. சென்னை லயோலா கல்லூரியும், ஒவ்வொரு முறையும் தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

* அ.தி.மு.க., கூட்டணி, 144 தொகுதிகளை பிடிக்கும்; தி.மு.க., கூட்டணி 92 தொகுதிகளை கைப்பற்றும். ஒரு இடம், சுயேச்சைக்கு! – இது, “ஜூ.வி., சர்வே!’

* அ.தி.மு.க., கூட்டணி, 140 தொகுதிகளை அள்ளும்; தி.மு.க., கூட்டணிக்கு 94 தான்! – இது, “குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே!’

* அ.தி.மு.க., கூட்டணிக்கு, 105 தொகுதிகளும், தி.மு.க., கூட்டணிக்கு, 70 தொகுதிகளும் சாதகம்! 59 தொகுதிகள், இரு அணிகளுக்கும் இடையே இழுபறி – “லயோலா’ கணிப்பு.

* அ.தி.மு.க., அணியை விட, தி.மு.க., அணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். அடுத்த முதல்வராக மீண்டும் கருணாநிதியையே மக்கள் தேர்வு செய்வர் – “நக்கீரன்’ வாக்கு!

இதில், எந்த சர்வே பலிக்கப் போகிறதோ என தெரியவில்லை! ஆனால், இந்த சர்வேயை, ஒவ்வொரு வார இதழும் நடத்திய விதம்…

ஜூனியர் விகடன்: ஜூ.வி., நிருபர்கள் 60 பேரும், மாணவ நிருபர்கள், 44 பேரும் கை கோர்த்து, கோதாவில் இறங்கினர். ஆசிரியர் குழு, ஒவ்வொருவரிடமும், 15 வகையான கேள்விகளும், பதில்களும் அடங்கிய, “பேலட் பேப்பர்கள்’ 50ஐ தந்துள்ளது. அதில், 25ஐ நகரத்திலும், 25ஐ கிராமப் பகுதிகளிலும் கொடுத்து, கருத்துக்களை கேட்டறிந்தனர். அதிலும், ஆண்கள், பெண்கள் சரி பாதியளவில் சந்தித்து, தகவல்களை சேகரித்தனர். இவர்களில், அரசு ஊழியர்கள் குறைந்தது ஐந்து பேரிடமும், சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏழு பேர் வீதமும் கேட்கப்பட்டனர். கிராமப்புற பகுதியில், பஸ் வசதியே இல்லாத கிராமங்கள் என தனியாக பிரித்து, அங்கு, 10 பேரிடம் கருத்துக்கள் கேட்டுள்ளனர். இவையில்லாமல், மாவட்ட நிருபர்கள் மூலம், தொகுதி வாரியாக நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து, மூன்று முறை ரிப்போர்ட் பெற்றுள்ளனர். இறுதியாக அனுப்பிய, ரிப்போர்ட் மற்றும் மக்களிடம் இருந்து பெற்ற கருத்துக்கள் அடிப்படையில், மேற்கூறிய முடிவுகளை ஜூ.வி., வெளியிட்டுள்ளது. “கடந்த லோக்சபா தேர்தலில் ஜூ.வி., கணிப்பின்படி, 38 தொகுதிகளின் வெற்றி அமைந்தது. இரண்டு தொகுதிகளில் மட்டும் முடிவுகள் மாறின. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அணிக்கு அதிக மெஜாரிட்டி கிடைக்கும் என்று கூறினோம். ஆனால், நிஜத்தில் அப்படி நடக்கவில்லை’ என்றது ஜூ.வி.,

குமுதம் ரிப்போர்ட்டர்: இந்த வார இதழ், இரண்டு வகையான கணிப்புகளை நடத்தியுள்ளது. ஒன்று, மாவட்ட வாரியான சர்வே. இரண்டாவது, சட்டசபை தொகுதி வாரியான சர்வே. மாவட்ட வாரியான சர்வேயில், ஆண், பெண், படிக்காதவர்கள், படித்தவர்கள் எனில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள், ஐந்து முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள்; கல்லூரி முதல், உயர்கல்வி படிப்புகள் படித்தவர்கள் வரை, பிரித்து சர்வே நடத்தியுள்ளது. மாவட்டத்திற்கு, 2,000 பேர் வீதம், 32 மாவட்டங்களில், 64 ஆயிரம் பேரிடம், “சாம்பிள்’ பெற்று, தேர்தல் நிலவரங்களை அலசியுள்ளது. இரண்டாவது வகையில், ஒரு தொகுதிக்கு, 2,000 பேர் வீதம், 234 தொகுதிகளில், 4 லட்சத்து, 68 ஆயிரம் பேரிடம், “சாம்பிள்’ பெற்று, கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில், “தி.மு.க.,வுக்கு மெஜாரிட்டி கிடைக்காது எனினும், கூட்டணி ஆட்சி அமையும்’ என, குமுதம் ரிப்போர்ட்டர் தெரிவித்தது. ஆட்சியில், கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கவில்லை என்றாலும், தி.மு.க.,வை பொறுத்தவரை, “மைனாரிட்டி’ கட்சியாக தொடர்ந்ததை, கோடிட்டு காட்டுகின்றனர்.

நக்கீரன்: மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பேரை சந்தித்து, ஒவ்வொருவரிடமும், 20 கேள்விகளையும், பதில்களையும் பெற்று, அதனடிப்படையில், தேர்தல் முடிவுகளை கணித்துள்ளது. மொத்தத்தில், 17 லட்சத்து, 60 ஆயிரம் தரவுகளை (டேட்டாஸ்) பெற்று, அலசி, ஆராய்ந்துள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 400 வாக்காளர்கள். அவர்களில், ஆண்கள், பெண்கள் சரிபாதி. அப்படி பிரித்ததில், வயதளவில், 18 – 25, 25 – 40, 40 – 55, 55க்கு மேல் என பிரித்தும், அதற்குள் மாணவர், வீட்டு வேலை செய்பவர், இல்லத்தரசிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அரசு ஊழியர், வியாபாரம் செய்பவர், விவசாயிகள், கூலி வேலை செய்வோர், வேலையில்லாதோர், இதிலும் வகுப்பு வாரியான வகை என, நீண்ட களப்பட்டியலுக்குப் பின், தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என நக்கீரன் தெரிவித்துள்ளது.

லயோலா: மாநிலத்தில் 117 தொகுதிகளில், 3,171 பேரை சந்தித்து, கருத்துக்களை சேகரித்து, அதனடிப்படையில் மாநிலம் தழுவிய அளவில், அ.தி.மு.க., அணிக்கு, 105 தொகுதிகள் சாதகம் என்றும், தி.மு.க., அணிக்கு, 70 தொகுதிகள் சாதகம் என்றும் தெரிவித்துள்ளது. “கடந்த சட்டசபை தேர்தல் சர்வே 90 சதவீதம் சரியாக இருந்தது’ என, கருத்துக் கணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அடைக்கலராஜ் தெரிவித்தார். இப்படி, கணிப்புகள் பலவாறாக இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், தேர்தல் முடிவுகளை உறுதியாக கூற முடியாத நிலை தான், லேட்டஸ்ட் தகவல்!

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s