55 ஆயிரம் விதிமீறல் வழக்குகள்: 30ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

தமிழக சட்டசபை தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறியோர் மீது தொடரப்பட்ட 55 ஆயிரம் வழக்குகளில் வரும் 30ம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், வழக்குகளில் சிக்கியிருக்கும் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு, மார்ச் 1ல் வெளியானது. அன்று முதல், தேர்தல் கால நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டன. இந்த நன்னடத்தை விதிகள் மே 15 வரை அமலில் இருக்கும்.போலீஸ் அனுமதியின்றி பொது மற்றும் தனியார் இடங்களில் கட்சிப் பேனர்கள் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது. மாநகராட்சி மற்றும் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான கட்டடச் சுவர்களில் கட்சி விளம்பரங்கள் எழுதக்கூடாது. தனியார் கட்டடச் சுவர்களில் அனுமதி பெற்றாலும் விளம்பரம் செய்யக்கூடாது என, பல விதிமுறைகள் அதில் வகுக்கப்பட்டன.பிரசாரத்தின் போது, வேட்பாளருடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வாகனங்கள் செல்வது, பொதுக்கூட்டங்களுக்கு மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்பதும் அமலுக்கு வந்தன.

இதன்படி, அரசியல் கட்சிகள் மீது, தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனுமதியின்றி பிரசாரம், அனுமதி பெறாமல் வாகனங்களில் பிரசாரம், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் ஒட்டியது, பேனர்கள் கட்டியது, பணப் பட்டுவாடா என, பல வகையான வழக்குகள் பதியப்பட்டன.பொதுவாக தேர்தல் கால விதிமீறல் வழக்குகள், தேர்தல் முடிந்த பின், எந்த நடவடிக்கையும் இன்றி முடக்கி வைக்கப்படுவது உண்டு. காரணம், அடுத்து வரும் அரசு தான், இந்த வழக்குகளை நடத்த வேண்டும். ஆனால், ஆட்சி அமைக்கும் கட்சிகள், தங்களுக்கு எதிரான வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் வழக்கத்தில் உள்ளது.ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவை இம்முறை பிறப்பித்துள்ளது. இந்த முறை தேர்தல் முடிவடைந்து, ஒரு மாத கால அவகாசம் உள்ளதால், அதற்குள் இந்த வழக்குகளை, தனது கட்டுப்பாட்டிலேயே விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி, தேர்தல் விதிமீறல் வழக்குகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளிகள் பிடிபட்டனரா? குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனரா? விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டாரா? குற்றப்பத்திரிகை தயாராகி விட்டதா? என்பன போன்ற அனைத்து விவரங்களையும் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கையாக தர, வழக்கு பதிவு செய்த போலீஸ் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் விதிமீறல் தொடர்பாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 55 ஆயிரம் வழக்குகளில் தேவையான நடவடிக்கை எடுத்து, ஏப்., 30க்குள் அந்தந்த கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவற்றில் 45 ஆயிரம் வழக்குகள் வரை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பானதாகும். பெரும்பாலும் சுவர் விளம்பரங்கள் தொடர்பானவை. இந்த வழக்குகளில், அந்தந்த உள்ளாட்சி விதிகளின்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். இதன்படி, அதிகபட்சமாக அபராதம் மற்றும் அந்த விளம்பரங்களை அழிக்க ஆன செலவு போன்றவை தான் விதிக்கப்படும்.மற்ற வழக்குகளை பொறுத்தவரை, கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கை நடத்த வேண்டும். இவற்றை விரைவுபடுத்தவே, தற்போது தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தடை : ஓட்டு எண்ணிக்கையின் போது, வேட்பாளரது ஏஜன்ட் ஆக, அரசு ஊழியர் பணிபுரிய, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. அவ்வாறு ஒரு ஊழியர் எண்ணிக்கை ஏஜன்டாக பணிபுரிவது கண்டறியப்பட்டால், அவருக்கு, மூன்று மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாள் வரை, வேட்பாளர் தன் ஏஜன்ட் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். அதேசமயம் ஓட்டு எண்ணிக்கை துவங்கியபின், புதிய ஏஜன்ட்களை நியமிக்கக் கூடாது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s