செய்வீர்களா?வருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல்….

ஐயா, அம்மணி, உங்களில் யாரோ முதல்வராக வரப்போகிறீர்கள். உங்களுக்கும் இப்போது அது சஸ்பென்ஸ். உங்கள் உறக்கத்தைக் கெடுத்துள்ள ஓட்டுப் பெட்டிகள் உறக்கத்தில் இருக்கின்றன. அவை எழுந்ததும், நீங்கள் யார் என்பது எங்களுக்கு தெரிந்துவிடும். மக்கள் எஜமானர்கள், நீங்கள் வேலைக்காரர்கள் என்கிறீர்களே… அது உண்மை, எங்கள் காதில் சுற்றிய பூ இல்லை என்பதை நம்பி, நாங்கள் எழுதும் திறந்த மடல் இது.

உங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கட்டும், எங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா, அதற்காகவே இந்த கடிதம்.நீங்கள் பதவியேற்கும் முன்பே ஆரவாரம் தொடங்கும்; ஆடம்பரம் தொடரும். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஐயாவே, அம்மணியே, நீங்கள் இப்போதே உங்கள் தொண்டர் படைக்குச் சொல்லி வைத்துவிட்டால், ஆரவாரமில்லாமல், உங்கள் வெற்றியை கொண்டாடலாம். அமைதிக்கு கவுரவம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை மட்டும் குறை சொல்லக்கூடாது… நாங்களே வெறும் கைதட்டிக் கூட்டம்… காக்காய் பிடிக்கும் கும்பல். புண்ணாக்கு சங்கம், பருத்திக்கொட்டை சங்கம், குதிரைக் குஞ்சு சங்கம், கோழிக்குட்டி சங்கம் என்று பல சங்கங்கள் வைத்திருக்கிறோம். இதுதான் எங்கள் சங்க காலம். ஒவ்வொரு சங்கமும் பத்திரிகைகளில், “போற்றி, போற்றி’ என்று போட்டி போட்டு உங்களை புகழ்ந்து விளம்பரங்கள் வெளியிடும்.அப்படி செய்யாதீர்கள் என்று நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகளை வேண்டிக்கொள்வீர்களா? நீங்கள் தீர்மானித்து விட்டால், இந்த விளம்பரங்கள் வராது. இப்படிப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு நானும் உங்களைப் போல் கலப்பைக்காரன், கரண்டிக்காரி, சட்டிக்காரன், முட்டைக்காரி என்று சொல்வதைத் தவிர்ப்பீர்களா?

நீங்கள் இந்த மாதிரி சில குழுக்களுக்காக மட்டுமல்ல, எல்லாருக்குமே முதல்வர் என்பதை முழுமையாக புரிந்து கொள்வீர்களா? உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நீங்களே முதல்வர்; சரிதானே.இந்த புதிய ஆட்சிக் காலத்தில் நீங்களோ, உங்கள் அமைச்சர் பெருமகன்களோ, பெருமாட்டிகளோ செல்லும் வழி நெடுக, கட்-அவுட்கள், படத்தட்டிகள், கொடிகள் வைப்பதைத் தடுப்பீர்களா? எந்த ஆரவாரமும் எவருக்கும் கவுரவம் சேர்ப்பதில்லை என்பதை கட்சித் தலைவர், கட்சித் தலைவி என்ற முறையில் புரிந்து கொள்வீர்களா?அரசுத் திட்டங்களின் அறிமுகமா? புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? பாலமோ, கழிப்பறையோ திறப்பதா? அங்கெல்லாம் முதல்வர் தன் பரிவாரத்துடன் சென்று விழா நடத்தும் சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? விழாக்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் வேறு வழிகளிலும் கிடைக்கும்; அதை நாடுங்களேன்.மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர இருக்கும் நேரத்தில், உங்கள் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி எதுவும் சொல்லாமல், இருக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமே. அவர்கள் என்றென்றும் கையேந்திகளாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சுயமரியாதைக் கொள்கைக்கு அது பொருத்தமாக இல்லையே. அதை உடனடியாக செய்துவிட முடியாது. ஆனால், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டால், உருப்படியான திட்டங்களுக்கு பணம் செலவிடப்படலாம். இனி, இலவசங்கள் தேவைப்படாது என்ற நிலை உருவாக்கப் பாடுபடுவீர்களா?மக்களுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் தரும்போது, இதை முதலமைச்சராக உள்ள நான் தரவில்லை. அரசாங்கம் மூலம் இதை நீங்கள் இவற்றைப் பெறுவதற்குக் காரணம், வரி செலுத்தும் உங்கள் சகோதரர்களே என்ற உண்மையை பகிரங்கமாக சொல்லி, உங்கள் சுயமோகத்தை விரட்டிவிட்டு சகோதரத்துவத்தை வளர்ப்பீர்களா?கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திவிட்டு, கோட்டை பக்கம் வரவிடாமல் தடுப்பீர்களா?

கோட்டையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் பொது நலன்களுக்காக அல்லாத உரிய வேலைகளுக்காக வரும் மக்களே தென்பட வேண்டும், கரை வேட்டிகள் அல்ல. இதற்கான கறாரான ஏற்பாடுகளை செய்வீர்களா?காவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் இருப்பீர்களா?உங்கள் பி.ஏ.,க்கள், அமைச்சர்களின் பி.ஏ.,க் கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சமஸ்தானமாக மாறிவிடாமல் இருக்க, அவர்களைக் கண்காணிப்பீர்களா? நீங்கள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் அல்லவா?அறைக்கு வெளியே இரு பக்கங்களிலும் பெரிய, மிகப்பெரிய “டிவி’ அளவுக்கு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பொருத்தி, ஒன்றில் உங்களை அறையில் சந்திக்க வருகிறவர்கள் யார் என்ற தகவலையும், மறு திரையில் உங்கள் வசம் முடிவுக்காக காத்திருக்கும் கோப்புகள் எவை என்பதையும் தெரிவிப்பீர்களா? அதுதானே ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம். செய்வீர்களா?உங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா?அலுவலகத்தில் இருக்கும்போது, அலுவலக வேலையை மட்டுமே பாருங்கள்; வீட்டில் நீங்கள் குடிமக்கள் என்ற தினசரி நடைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள்; அதை அப்படியே செய்துவிட முடியாது. மாநிலத்தில் எங்காவது நெருக்கடி என்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எங்களது, 24 மணி நேர ஊழியர். அப்படி ஊழியம் செய்ய கூப்பிட்ட குரலுக்கு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும். அவர்கள் வரட்டும், அருகில் இருக்கட்டும். மற்றபடி கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே… செய்வீர்களா?

ஆட்சியிலும், கட்சியிலும் ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் அறவே ஒழிப்பீர்களா? பதவியேற்று மூன்று அல்லது ஆறு மாதம் கடந்த பிறகு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாருங்கள். அங்கே அரசு சட்ட திட்டங்கள்படி நடைபெறுகிறதா, கட்-அவுட்களின்படி நடந்து வருகிறதா என்று பார்த்து வாருங்கள். அந்த ஒழுங்கு முறையை சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் கொண்டு வாருங்கள். அதுதான் முன்னேற்றத்தின் முதல்படி. உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் வேறு காரணங்களுக்காக அமைய வேண்டாம். கமிஷன் என்றால், கமிஷனும் வரும். புரிகிறதா? மக்களுக்கு இப்போது அதிக விவரம் தெரிந்து விட்டது.வீட்டில் இல்லாத ஒழுக்கம் வீதியில் வராது. வீதியில் இல்லாத ஒழுக்கம் சமூகத்தில் வராது. சமூகத்தில் இல்லாத ஒழுக்கம் அரசாங்கத்தில் வராது. இப்போது சீர்திருத்தத்தை உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். வருங்கால முதல்வரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி… மக்கள் இனி புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கலாமா? எங்களால் ஏற முடியவில்லை; முடங்கிப் போய்விட்டோம். நீங்கள் இறங்கி வருவீர்களா, எங்களை ஏற்றிவிட?

(ஆர்.நடராஜன், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s